1949ஆம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில்...

1949ஆம் ஆண்டுக்கு பின்னர்  லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில்

20/04/2018

லண்டன், ஏப்.21:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும். குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

 

...

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக  இளவரசர் சார்லஸ் - ராணி எலிசபெத்

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ் - ராணி எலிசபெத்...

20/04/2018

லண்டன், ஏப்.21:

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் 91 வயதான எலிசபெத் பேசும் போது காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணி எலிசபெத்துக்குப் பின்னர் காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு இளவரசர் சார்லஸுக்கு தானாக வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே தலைமை பொறுப்புக்கு சார்லஸ் வரமுடியும். இதற்கான பணிகள் நாளை நடக்கும் என கூறப்படுகிறது. 

 

...
கத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து  அமெரிக்காவில் போராட்டம்

கத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்...

20/04/2018

வாஷிங்டன், ஏப்.21:

ஜம்மு காஷ்மீரின் கத்வா நகரில் 6 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.  இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் பலாத்காரம் செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார்.  இதில் தொடர்புடைய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன் உள்ள காந்தி சிலை முன் இந்திய அமெரிக்கர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பாலியல் வன்முறை மற்றும் சிறுமி கொடூர கொலையைக் கண்டித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்திய அமைப்புகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

...
கியூபா நாட்டின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

கியூபா நாட்டின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு...

20/04/2018

ஹவானா, ஏப்.21:

அமெரிக்காவிற்கு அருகில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு கியூபா. இது கரீபியன் கடலில் அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் இருக்கும் இந்நாட்டில் மறைந்த புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகள் பிரதமர் மற்றும் அதிபராக இருந்தார். அவருக்கு பின் அவருடைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ சுமார் 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ளார். 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை அதிபரான மிக்வெல் டயாஸ் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிக்வெல் டயாஸ் கனல் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் அதிபராக இருந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், கட்சியில் தலைமை பதவி மற்றும் முக்கிய பதவிகளில் இருப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

...
எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல்

எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல்...

20/04/2018

நியூயார்க், ஏப்.21:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது.

ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதை சூடானில் இருக்கும் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரத்தின் உடல்பகுதி முழுவதும் சிறு சிறு வைரக்கற்கள் இருந்தன.

இந்த எரிநட்சத்திரம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்கலாம். எனவே இந்த எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவை தூய்மையான வைரக்கற்கள் என்றும் அதற்கு முன்பு இதுபோன்ற வைரத்தை பார்த்ததில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம். மேலும் நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவானபோது ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம். சரியாக சொல்ல வேண்டுமானால் பூமி உருவான அதே நாளில் இந்த எரிநட்சத்திரமும் தோன்றியிருக்கலாம் என்றும் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

...
அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்

அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்...

20/04/2018

வாஷிங்டன், ஏப்.21:

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது.

இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது.

அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப் போவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த நிலையில் டிரம்ப், கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு சமீபத்தில் ரகசிய பயணம் மேற்கொண்டு இருந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த தகவல்களை முதலில் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு வெளியிட்டு உள்ளது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை நீக்கி விட்டு, அவரது இடத்தில் சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோவை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்துதான் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.   

அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். டிரம்புடனான சந்திப்புக்கு முன் ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த சந்திப்பு நடந்து உள்ளது.

இதை டிரம்ப் உறுதி செய்கிற விதத்தில் புளோரிடாவில் வைத்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் (அமெரிக்கா மற்றும் வடகொரியா) மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சு நடத்தி உள்ளோம்” என குறிப்பிட்டார்.

மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு கிம் ஜாங் அன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதை அமெரிக்க உயர் அதிகாரிகள் உறுதி செய்து உள்ளதாக ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தைக்கான இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் வடகொரியா-தென்கொரியா இடையே ராணுவ மயமற்ற ஓர் இடம், சீனத்தலைநகர் பெய்ஜிங், வேறு ஒரு ஆசிய நாடு, ஐரோப்பிய நாடு அல்லது சர்வதேச கடல் பகுதியில் ஒரு கப்பலில் வைத்தும் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

...
பேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன்: டிரம்ப்

பேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன்: டிரம்ப்...

20/04/2018

நியூயார்க், ஏப்.21:

வட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உறவை துளர் விட வரும் ஜூலை மாதத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் சந்தித்து பேச உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்த சந்திப்பு எங்கு நடக்கப் போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. 

பியாங்யங், சியோல், சிங்கப்பூர், உலன்பதார், ஸ்டால்க்ஹோம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புளோரிடா நகரில் நேற்று முன்தினம் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

இதனை அடுத்து ஷின்சோ அபே, டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கிம் ஜாங் உடனான சந்திப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி விடுவேன்” என கூறினார்.

சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பே சமீபத்தில் வடகொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனை டிரம்ப் உறுதிப்படுத்தினார். போம்பேவின் பயணம் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது என அவர் கூறினார். 

 

...
தினமும் ஒன்றரை லட்சம் டன் உணவை  வீணாக்கும் அமெரிக்கர்கள்

தினமும் ஒன்றரை லட்சம் டன் உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்...

20/04/2018

வாஷிங்டன், ஏப்.21:

அமெரிக்காவில் வீணாக்கப்படும் உணவு வகைகள், தண்ணீர் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் அமெரிக்கர்கள் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனர். 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி காலன் தண்ணீரும் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.

உணவு பொருட்களில் 39 சதவிகிதம் பழங்களும், காய்கறிகளும் வீணாக குப்பையில் கொட்டப்படுகிறது. 17 சதவீதம் பால் பொருட்கள், 14 சதவீதம் இறைச்சி, முட்டை உணவு வகைகள், ஐஸ் மற்றும் குளிர் பானங்கள், நொறுக்கு தீனி பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன.

2007 முதல் 2014ஆம் ஆண்டு வரை அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி ஒவ்வோர் அமெரிக்கரும் தினசரி 30 சதவீத கலோரி சக்தி கொடுக்கும் உணவு வகைகளை வீணாக்குகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 422 கிராம் (ஒரு பவுண்டு) உணவை குப்பையில் கொட்டுகின்றார்.

 

...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்...

18/04/2018

வாஷிங்டன், ஏப்.19:

அமெரிக்காவின் 41ஆவது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43ஆவது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பார்பரா புஷ் தமது 92ஆவது வயதில் நேற்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

...
நடுவானில் வெடித்துச் சிதறிய விமான இயந்திரம்

நடுவானில் வெடித்துச் சிதறிய விமான இயந்திரம்...

18/04/2018

நியூயார்க், ஏப்.19:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து நேற்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் டல்லாஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தது. விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென வெடித்துச் சிதறியது. அதிவேகமாக பாய்ந்து வந்த அதன் பாகங்கள் விமானத்தின் ஒரு ஜன்னல் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த ஜெனிபர் ரியோர்டாம் என்ற பெண்ணின் தலை, அதிக அழுத்தம் காரணமாக ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டது. அதன்பின்னர் அவரது உடலும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தள்ளப்பட்டது. பறந்து வந்த உலோகத் துண்டு அவரை தாக்கியது. உடனே சக பயணிகள் கடுமையாக முயற்சி செய்து அந்த பெண்ணை உள்ளே இழுத்து, ஜன்னல் ஓட்டையை அடைத்தனர். 

உயிரைப் பணயம் வைத்து ஜெனிபர் ரியோர்டாமை காப்பாற்றினர். எனினும் உலோகத் துண்டு தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதேபோல் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது. 

இதற்கிடையே, என்ஜின் செயலிழந்ததால் பிலடெல்பியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த விபத்தில் உயிரிழந்த ஜெனிபர், வெல்ஸ் பார்கோ வங்கியின் மக்கள் தொடர்புத் துறையின் துணை தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

...
முதன் முறையாக வாலிபருக்கு  2 தடவை முகமாற்று அறுவை சிகிச்சை

முதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று அறுவை சிகிச்சை...

18/04/2018

பாரிஸ், ஏப்.19:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜெரோம் ஹமோன் (40). இவரை ‘மூன்று முக’ மனிதர் என அழைக்கின்றனர். அதற்குக் காரணம் இவர் தனது சொந்த முகத்தில் 2 தடவை வேறு முக அமைப்பில் மாற்று ஆபரேசன் செய்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் ஜெரோம் ஹமோன் மரபியல் மாற்று காரணமாக ‘நியூரோபைபிரோ மெடோ சிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது முகத்தில் கட்டிகள் உருவாகி முகம் அகோரமாக மாறியது.

இதற்காக பாரிசில் உள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ ஐரோப்பியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ட் லான்டியரி தலைமையிலான நிபுணர் குழுவினர் இறந்தவரின் முகத்தை தானமாகப் பெற்று முகம் முழுவதையும் மாற்றி ஆபரேசன் நடத்தினர். இது கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

அதே ஆண்டில் அவருக்கு ஜலதோச பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2016ஆம் ஆண்டில் முகமாற்று ஆபரேசனை அவரது உடல் ஏற்க மறுத்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தது.

அதைத் தொடர்ந்து ஆபரேசன் செய்து மாற்றப்பட்ட புதிய முகம் படிப்படியாக சீர்கேடு அடைந்தது. கடந்த நவம்பர் மாதம் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது.

எனவே, ஜெரோமின் புதிய முகத்தை டாக்டர் லான்டியரி முற்றிலும் அகற்றி விட்டார். அதனால், ஜெரோம் கடந்த 5 மாதங்களாக முகம் இன்றி இருந்தார். அவருக்கு கண் இமைகள், காதுகளில் தோல் இல்லை. அவரால் சாப்பிடவோ, பேசவோ முடியாத நிலை ஏற்பட்டது.

தனது உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்தார். தலையை லேசாகவே அசைக்க முடிந்தது. அவரால் எழுதக் கூட முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு முகமாற்று ஆபரேசன் செய்ய டாக்டர் திட்டமிட்டார். அதற்காக முகதானம் பெற முயற்சிகள் நடைபெற்றன.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தவரின் முகம் தானமாக பெறப்பட்டு அதன் மூலம் முகமாற்று ஆபரேசன் நடைபெற்றது. தற்போது அதை அவரது மண்டை ஓடு, தோல் ஏற்றுக் கொண்டது. அவர் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டார். இதன் மூலம் ஒருவருக்கு 2ஆவது தடவையும் முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

...
பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா...

18/04/2018

வாஷிங்டன், ஏப்.19:

பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களை சென்றடைகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன். மீன்களின் வயிற்றிற்குள் பிளாஸ்டிக் செல்வதால் அவை இறக்கின்றன. இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்த போதிலும் பிளாஸ்டிக்கை முழுமையாக அளிக்க முடியவில்லை.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் புதிய பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்தனர். இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற இந்த பாக்டீரியா பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்பட்ட பாலிஎத்திலீன் டெராபைத்லேட்டை அழிக்கும் திறன் கொண்டது.

இந்த என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சியில் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும். என்சைம்களில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளன. அதன் முடிவில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக வழியை கண்டுபிடிக்க முடியும்.

 

...
கிம்முடன் அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் ரகசிய சந்திப்பு?

கிம்முடன் அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் ரகசிய சந்திப்பு?...

18/04/2018

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பாப்பியோ வடகொரிய அதிபர் கிம்மை ரகசியமாக சந்தித்தாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்மாத தொடக்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட், அசோசியேட் பிரஸ் போன்றவை தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது தொடர்பான செய்தி குறித்து பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடனான சந்திப்பில் டிரம்ப் பேசும்போது, நாங்கள் வடகொரியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா- வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவியது. வடகொரியாவின் மீது அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது.

எனினும் இதனை சற்றும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தியது. இதன் காரணமாக வடகொரியாவை அச்சுறுத்தும் நோக்கத்தில் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

 

...