மாண்டேகார்லோ டென்னிஸ் நடால், ஜோகோவிச் முன்னேற்றம்...

மாண்டேகார்லோ டென்னிஸ் நடால், ஜோகோவிச் முன்னேற்றம்

20/04/2018

மாண்டேகார்லோ, ஏப்.21:  

மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் முதல் வரிசை வீரர்களான நடால், ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கடும் காயத்தால் பல மாதங்களாக விளையாடாமல் இருந்த ஜோகோவிச் தனது 2ஆவது சுற்று ஆட்டத்தில் 7-6 (7/2), 7-5 என்ற ஆட்டக்கணக்கில் போர்நா கொரிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் ஆஸ்ட்ரியாவின் டொமினிக் தீம், காலிறுதியில் நடாலை ஜோகோவிச் எதிர்கொள்வார்.

10 முறை மாண்டேகார்லோ ஏடிபி கோப்பையை வென்றவரும், மற்றொரு முன்னணி வீரருமான நடால் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் தாமஸ் பெடினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் நிஷிகோரி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டேனியலை வீழ்த்தினார். இரண்டாம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் பெர்ணாண்டோவை வென்றார்.

 

...

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: 4 வீடியோ உதவி நடுவர்கள், ராட்சத திரைகள்: பிஃபா அறிவிப்பு

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: 4 வீடியோ உதவி நடுவர்கள், ராட்சத திரைகள்: பிஃபா அறிவிப்பு...

20/04/2018

மாஸ்கோ, ஏப்.21: ரஷ்யாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் 4 வீடியோ உதவி நடுவர்கள் நியமனம், ராட்சத திரைகள் வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என பிஃபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரை ரஷ்யாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பிஃபா நடுவர் குழு தலைவர் பியர்லுகி கொலினா கூறியதாவது:

ஒவ்வோர் ஆட்டத்தின் போதும் 4 வீடியோ உதவி நடுவர்கள், மைதானத்தில் ராட்சத திரைகள் இடம் பெறும் . அனைத்தும் மாஸ்கோவில் அமைக்கப்படும் மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். அனைத்து நடுவர்களும் மாஸ்கோவிலேயே இருப்பர். அடுத்து வரும் 2 வாரங்களில் கவர்சியானோவில் இதுதொடர்பாக 36 நடுவர்கள், 63 உதவியாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி தரப்படும்.

வீடியோ உதவி நடுவர்கள் ஒவ்வோர் ஆட்டத்தின் போதும் பணியில் இருப்பர். அவர்கள் களத்தில் நடப்பது தொடர்பான காட்சிகளை நடுவர்களுக்கு விளக்குவர்.

இதற்காக 2 சிறப்பு நவீன கேமராக்கள் பயன்பாட்டில் இருக்கும். முதலாவது உதவி நடுவர் போட்டி லைவ் காட்சிக்கும், 2 ஆவது உதவி நடுவர் ஆப்-சைட் பொறுப்பிலும், இருப்பர். மூன்றாவது விடியோ நடுவர் பிரதான வீடியோ நடுவருக்கு உதவியாக செயல்படுவார். மேலும் மைதானத்தில் ராட்சத திரைகளும் வைக்கப்படும். வார் எனப்படும் விடியோ நடுவர் முறை அதன் செயல்பாட்டை பொறுத்தே வெற்றி பெறும். ஆட்டத்தின் போது ஏற்படும் தப்புகளை கண்காணிக்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கோலடித்தலை பார்வையிடவும் இது உதவும் என்றார்.

 

...
பிரீமியர் லீக்: டோட்டேன்ஹம்மை நெருங்குகிறது செல்சி !

பிரீமியர் லீக்: டோட்டேன்ஹம்மை நெருங்குகிறது செல்சி !...

20/04/2018

லண்டன், ஏப்.21:  இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடிப்பதில் செல்சி, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருக்கு கடும் நெருக்குதலை அளித்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் செல்சி  2 - 1 என்ற கோல்களில் பெர்ன்லி அணியை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடனான புள்ளி வேறுபாட்டை செல்சி ஐந்தாக குறைத்துக் கொண்டுள்ளது. இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. 

20ஆவது நிமிடத்தில் லோங் போட்ட சொந்த கோலினால் செல்சி   1 - 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. எனினும் 64 ஆவது நிமிடத்தில் நிக் பார்ன்ஸ் போட்ட கோலின் மூலம் பெர்ன்லி ஆட்டத்தை சமப்படுத்தியது. 

ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் விக்டர் மோசஸ் போட்ட கோல், செல்சியின் வெற்றியை உறுதி செய்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செல்சி, சவுத்ஹாம்ப்டனை சந்திக்கவுள்ளது.

 

...
ஸ்பெயின் லா லீகா: ரியல் சொசியடாட்டிடம் வீழ்ந்தது அத்லேட்டிக்கோ மாட்ரிட்

ஸ்பெயின் லா லீகா: ரியல் சொசியடாட்டிடம் வீழ்ந்தது அத்லேட்டிக்கோ மாட்ரிட்...

20/04/2018

பார்சிலோனா, ஏப்.21: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அத்லேட்டிக்கோ மாட்ரிட் 0 - 3 என்ற கோல்களில் ரியல் சொசியட்டாட்டிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தோல்வியை அடுத்து ஸ்பெயின் லா லீகா போட்டியில் பார்சிலோனாவை முந்தும் அத்லேட்டிக்கோ மாட்ரிட்டின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா, 83 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே உள்ள வேளையில் அத்லேட்டிக்கோ மாட்ரிட் 71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இன்னும் நான்கு லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் பார்சிலோனா தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஸ்பெயின் லா லீகா பட்டத்தை வெல்லும். அதேவேளையில் அத்லேட்டிக்கோ மாட்ரிட் , லா லீகா பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதில் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. 

26ஆவது நிமிடத்தில் விலியன் ஜோசே, ரியல் சொசியடாட்டின் முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் ஜூவான்மி போட்ட இரண்டு கோல்களில் அத்லேட்டிக்கோ மாட்ரிட் சரிந்தது.

 

...
மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டி: நடால், ஜோக்கோவிச் வெற்றி!

மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டி: நடால், ஜோக்கோவிச் வெற்றி!...

20/04/2018

மான்ட்கார்லோ, ஏப்.20: 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ்  அனைத்துலக டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றனர். 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் அனைத்துலக டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2 ஆவது சுற்றில் களம் கண்ட 10 முறை சாம்பியனும், முதல்நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றோர் ஆட்டத்தில் முன்னாள் முதல்நிலை  வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (2), 7-5 என்ற நேர் செட்டில் போர்னா கோரிச்சை (குரோஷியா) வீழ்த்தி 3 ஆவது சுற்றை எட்டினார்.

 

...
புதிய சாதனைபடைத்தார் ரோஜர் பெடரர்

புதிய சாதனைபடைத்தார் ரோஜர் பெடரர்...

20/04/2018

பாரிஸ், ஏப்.20: 

பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். 36 வயதான பெடரர் அதிக முறை ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை (20 முறை) வென்று சாதனை புரிந்துள்ளார். மேலும் கடின தரையில் 87.6 சதவீதம் வெற்றி பெற்றது, அதிக வயதில் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தது போன்ற சாதனைகள் அவர் வசம் உள்ளன.

அவரது பல சாதனைகள் முறியடிக்கப்படுமா என்ற நிலையில் அவர் மேலும் சாதனையைப் படைத்துள்ளார். உலகின் முதல் நான்கு வீரர்களில் 700 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்த ஏடிபி வீரர் என்ற சாதனையை பெடரர் படைத்துள்ளார். 

மேலும் 300 வாரங்கள் முதல்நிலை வீரர், 500 வாரங்கள் இரண்டாம் நிலை, 600 வாரங்கள் மூன்றாம் நிலை வீரர் போன்ற பெருமைகளை பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

 

...
ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றினார் ரொனால்டோ

ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றினார் ரொனால்டோ...

20/04/2018

மாட்ரிட், ஏப்.20: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோலினால் ரியல் மாட்ரிட் தோல்வியில் இருந்து தப்பியது. சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் ரியல் மாட்ரிட் 1 - 1 என்ற கோல்களில் அத்லேட்டிக் பில்பாவுடன் சமநிலை கண்டது. 

முதல் பாதி ஆட்டத்தில் இனாகி வில்லியம்ஸ் மூலம் , அத்லேட்டிக் பில்பாவ் தனது முதல் கோலைப் போட்டது. எனினும், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ போட்ட கோல் , ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றியது. 

அந்த கோலானது இந்த பருவத்தில் ரொனால்டோ போட்டிருக்கும் 24 ஆவது கோலாகும். இந்த சமநிலை முடிவை அடுத்து ரியல் மாட்ரிட் 68 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்லேட்டிக்கோ மாட்ரிட்டைக் காட்டிலும் ரியல் மாட்ரிட் மூன்று புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. 

எனினும் ரியல் மாட்ரிட்டைக் காட்டிலும் அத்லேட்டிக்கோ மாட்ரிட் ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக்கை சந்திக்கவுள்ளது.

 

...
மீண்டும் சுவீடன் அணிக்கு திரும்புகிறார் இப்ராஹிமோவிச்?

மீண்டும் சுவீடன் அணிக்கு திரும்புகிறார் இப்ராஹிமோவிச்?...

20/04/2018

பாரிஸ், ஏப். 20: சுவீடன் கால்பந்து அணியின் மூத்த ஆட்டக்காரர் சிலாதான் இப்ராஹிமோவிச் வரும் ஜூன் மாதம் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியத்தை மறுக்கவில்லை. 

இதன் வழி அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இப்ராஹிமோவிச் மீண்டும் சுவீடன் தேசிய கால்பந்து அணிக்கு திரும்பவிருக்கிறார். ரஷ்யாவில் தாம் களமிறங்கவில்லை என்றால், அது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியே அல்ல என இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார். 

கடந்த 12 ஆண்டுகளில் , முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடன் பங்கேற்கவுள்ளது.  தகுதிச் சுற்றில் இத்தாலியை வீழ்த்தியதன் வழி சுவீடன் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கிறது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தாம் செல்வது நிச்சயம் என இப்ராஹிமோவிச் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

ஆனால், ஓர் ஆட்டக்காரராகவோ அதிகாரியாகவோ செல்கிறாரா என்பதை அவர் உறுதியாக கூறவில்லை. ஆகக் கடைசியாக 2006 ஆம் ஆண்டில் இப்ராஹிமோவிச், சுவீடன் அணியுடன் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

 

...
உலக டென்னிஸ் தரவரிசையில் நடால் தொடர்ந்து முதலிடம்!

உலக டென்னிஸ் தரவரிசையில் நடால் தொடர்ந்து முதலிடம்!...

18/04/2018

மாட்ரிட், ஏப்.19;

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,770 புள்ளிகள்) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2ஆவது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,985 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்ரேவ் (4,925 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் (4,635 புள்ளிகள்) 5ஆவது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (4,470 புள்ளிகள்) 6ஆவது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் (3,665 புள்ளிகள்) 7ஆவது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (3,390 புள்ளிகள்) 8ஆவது இடத்திலும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,125 புள்ளிகள்) 9ஆவது இடத்திலும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (3,110 புள்ளிகள்) 10ஆவது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். 

இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 22 இடம் முன்னேறி 83-வது இடத்தையும், ராம்குமார் 17 இடம் ஏற்றம் கண்டு 116ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 19ஆவது இடமும், திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 41ஆவது இடமும், லியாண்டர் பெயஸ் 4 இடம் ஏற்றம் பெற்று 49ஆவது இடமும், புரவ் ராஜா 4 இடம் முன்னேற்றம் கண்டு 66ஆவது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (8,140 புள்ளிகள்) முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,790 புள்ளிகள்) 2ஆவது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,065 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,630 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும், லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (5,307 புள்ளிகள்) 5ஆவது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (4,730 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (4,615 புள்ளிகள்) 7ஆவது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (4,276 புள்ளிகள்) 8ஆவது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3,938 புள்ளிகள்) 9ஆவது இடத்திலும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா (3,271 புள்ளிகள்) 10ஆவது இடத்திலும் மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 24ஆவது இடத்தில் தொடருகிறார். 

 

...
2022 கத்தார் உலகக் கிண்ணப் போட்டியில்  கூடுதல் அணிகள்: ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு

2022 கத்தார் உலகக் கிண்ணப் போட்டியில் கூடுதல் அணிகள்: ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு...

18/04/2018

சூரிக், ஏப்.19:

கத்தாரில் நடைபெற இருக்கும்  2022 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்  48 அணிகள் என்ற ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. அதன்பின் 2022- ஆம் ஆண்டில் கத்தாரில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக கத்தார் பிரமாண்ட அரங்கங்களை கட்டி வருகிறது.

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்  32 அணிகள் பங்கேற்கின்றன. 2022 ஆம் ஆண்டில் 32 அணிகளை 48 அணிகளாக உயர்த்த ஃபிபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் 16 ஆட்டங்களில் அதிகமாகவும், நான்கு நாட்கள் கூடுதலாகவும் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

கத்தாரில் கடும் வெயில் இருக்கும் என்பதால் போட்டி நவம்பர் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது நான்கு நாட்கள் அதிகரிக்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

ஐரோப்பிய நாடுகளின் லீக் ஆட்டம் பாதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியால் லீக் போட்டிகளைத் தள்ளிப் போட முடியாது என ஐரோப்பிய லீக் குரூப் தெரிவித்துள்ளன. இதனால் கத்தார் உலகக் கிண்ணப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்குமா? என்பது சந்தேகம்தான்.

 

...
மாண்டேகார்லோ டென்னிஸ்:  ஜோகோவிச் முன்னேற்றம்

மாண்டேகார்லோ டென்னிஸ்: ஜோகோவிச் முன்னேற்றம்...

18/04/2018

மொனாக்கோ, ஏப்.19: 

மொனாக்கோவில் நடைபெற்று வரும் மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்த ஜோகோவிச் கைமூட்டு காயம் காரணமாக பல மாதங்களாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. மேலும் அவர் தனது பயிற்சியாளர் ஆன்ட்ரே அகாஸியை விட்டும் பிரிந்தார். 

இதற்கிடையே முன்னாள் பயிற்சியாளர் மரியன் வஜ்டாவின் கீழ் பயிற்சி பெறும் ஜோகோவிச், தற்போது மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

 

...
ஸ்பெயின் லா லீகா: செல்தா வீகோவுடன் பார்சிலோனா சமநிலை!

ஸ்பெயின் லா லீகா: செல்தா வீகோவுடன் பார்சிலோனா சமநிலை!...

18/04/2018

பார்சிலோனா, ஏப்.19; ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா, 2 - 2 என்ற கோல்களில் செல்தா வீகோவுடன் சமநிலை கண்டுள்ளது.  சமநிலை முடிவின் மூலம்  இந்த பருவத்துக்கான ஸ்பெயின் லா லீகா போட்டியில் தோல்வியே காணாத அணியாக பார்சிலோனா விளங்குகிறது. 

செல்தா வீகோவின் சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் முதல் கோலை ஓஸ்மானே டெம்பாலே போட்டார். எனினும் ஜோனி காஸ்த்ரோ போட்ட கோலின் வழி செல்தா வீகோ ஆட்டத்தை சமப்படுத்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி மாற்று ஆட்டக்காரராக உள்ளே நுழைந்தார்.

மெஸ்சி புகுந்தப் பின்னர் பார்சிலோனாவின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. பாலின்ஹோ அடித்த கோலின் வழி பார்சிலோனா 2 - 1 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது. 82 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் தற்காப்பு ஆட்டக்காரர் செர்ஜி ரோபேர்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. 

அப்போது கிடைத்த பினால்டியை  ஹியூகோ அஸ்பாஸ் கோலாக்கினார். ஸ்பெயின் லா லீகா போட்டியில் 40 ஆட்டங்களில் தோல்வியே காணாமல் பார்சிலோனா புதிய சாதனை படைத்துள்ளது.

 

...
இங்கிலீஷ் பிரீமியர் லீக்:  பிரைடனுடன் சமநிலை கண்டது டோட்டேன்ஹம்

இங்கிலீஷ் பிரீமியர் லீக்: பிரைடனுடன் சமநிலை கண்டது டோட்டேன்ஹம்...

18/04/2018

லண்டன், ஏப்.19- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 - 1 என்ற கோல்களில் பிரைடன் அணியுடன் சமநிலை கண்டது. 

இந்த சமநிலை முடிவால், பிரீமியர் லீக் போட்டியில் நான்காவது இடத்தை தக்க வைப்பதில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் செல்சி வெள்ளிக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடனான புள்ளி வேறுபாட்டை ஐந்தாக குறைக்கும். 

பிரைடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரி கேன் 48 ஆவது நிமிடத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதல் கோலை அடித்தார். அந்த கோலானது இந்த பருவத்துக்கான பிரீமியர் லீக் போட்டியில் ஹாரி கேன் போட்டுள்ள 26 ஆவது கோலாகும். அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரருக்கான தங்க காலணி விருதில் லிவர்புலின் முஹமட் சாலா, 30 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.  

ஹாரி கேன் கோல் போட்ட இரண்டு நிமிடங்களில் பாஸ்கால் கொரோஸ் மூலம், பிரைடன் அணி ஆட்டத்தை சமப்படுத்தியது.

 

...