சித்திரை மாத முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்!...

சித்திரை மாத முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்!

20/04/2018

இந்து மாதங்களில் முதல் மாதம் சித்திரை. சித்திரை என்றால் 'ஒளி பொருந்திய' அல்லது 'அழகிய' என்று பொருள். ஆண்டின் தொடக்கமாக வந்து நல்ல நல்ல மாற்றங்களைத் தரும் மாதம். கடுமையான கோடைக்காலமாக சித்திரை இருந்தாலும், காய்-கனிகளில் பல இந்தக் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. ஆலயம்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் மாதமும் இதுதான். சித்திரை மாதத்தில் வரும் விழாக்கள், பண்டிகைகள், விசேஷங்களையும் இங்கே காண்போம்.

 

ஏப்ரல் 14: இந்துப் புத்தாண்டுப் பிறப்பு

'ஹே விளம்பி' ஆண்டு முடிவடைந்து, 'விளம்பி' ஆண்டு தொடங்கியுள்ளது. 'மக்களுக்கு மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக இந்த ஆண்டு அமையும்' என ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

 

ஏப்ரல் 15: சித்திரை அமாவாசை 

சித்திரை அமாவாசை 'பித்ரு பூஜை' சிறப்பான வாழ்வைத் தரும். கடுமையான கோடைக்கால அமாவாசை என்பதால், அம்மன் ஆலயங்களில் 'பால்குட திருவிழா' நடைபெறுவது வழக்கம். சித்தர்களுக்கு உகந்த இந்த அமாவாசையில் சதுரகிரி, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

ஏப்ரல் 18: அட்சய திருதியை

அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளில் வரும் இந்தப் புனித நாள் எப்போதும் குறையாத செல்வ வளங்களைத் தரும் திருநாள். பரசுராமர் ஜனித்த திருநாளும் இதுவே. பாஞ்சாலிக்கு, கிருஷ்ணர் துகில் அளித்ததும் இந்த நாளில்தான். இந்த நாளில் லட்சுமி, குபேரரை வணங்கினால் ஐஸ்வர்ய யோகம் பெறலாம்.

 

ஏப்ரல் 20: ஆதிசங்கரர் ஜெயந்தி

சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, புவியில் சாந்தியும் சமாதானமும் தழைக்கப் பாடுபட்ட மகாஞானி ஆதிசங்கரர். அத்வைத தத்துவத்தின் பிதாமகரான ஆதிசங்கரர், கேரள மாநிலத்தின் 'காலடி' என்ற ஊரில் இதே நாளில்தான் பிறந்தார். எட்டு வயதில் துறவியாகி மக்களை முறையான வழிபாட்டுக்குக் கொண்டு சென்ற அவதாரப் புருஷரின் ஜன்ம நாளின்று.

 

ஏப்ரல் 21: ஸ்ரீராமாநுஜர் ஜெயந்தி

தான் அறிந்துகொண்ட திருமந்திரத்தை உலகமும் அறிந்துகொள்ளட்டும் என்று குருவின் கட்டளையையும் மீறி ஓதிய திருவடிவத்தின் பெயர்தான் ஸ்ரீராமானுஜர். எந்த உயிரிலும் பேதம் பார்க்காமல், நாராயணனை மட்டுமே பார்த்து மகிழ்ந்த உடையவர் ஸ்ரீராமாநுஜரின் அவதார தினம்.

 

ஏப்ரல் 23: வாஸ்து தினம்

பூமியின் இயல்புக்கேற்றவாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாள்களில் வாஸ்து வழிபாடு செய்தால், எந்தத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை மாதம் 10ஆம் நாளில் பூமி பூஜை செய்து வேலையைத் தொடங்கலாம்.

 

ஏப்ரல் 24: சத்ய சாய்பாபா சித்தி தினம்

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா சித்தியடைந்த தினம் இன்று. பல கோடி பக்தர்களின் வழிபாட்டுக்குரிய பகவான் ஸ்ரீபாபா ஆன்மிகப் பணிகளோடு பல சமூக நலப்பணிகளும் செய்தவர்.

 

ஏப்ரல் 25: பட்டாபிஷேகம்

மதுரை நகராளும் அன்னை மீனாட்சிக்கு நடைபெறும் 'சித்திரைத் திருவிழா'வில் இன்று ஸ்ரீமீனாட்சிக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அரியணை ஏறிய அன்னை மீனாட்சியின் அழகுக் கோலம் காண்பதற்கரியது.

 

ஏப்ரல் 27: மீனாட்சித் திருக்கல்யாணம்

மலையத்துவஜ பாண்டியனின் திருமகளாகப் பிறந்து பாண்டியப் பேரரசின் வீர இளவரசியாக வளர்ந்த மீனாட்சியை, சௌந்திர பாண்டியனாக வந்து ஈசன் கரம் பிடிக்கும் திருநாள்.

 

ஏப்ரல் 29: சித்ரா பௌர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல்

தங்கை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் நடந்த திருமணத்துக்கு சீர்வரிசையளிக்க, அண்ணனான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும் வைபவம் நடைபெறும் நாள் இன்று. சித்ரா பௌர்ணமி நாளில் கண்ணகிக்கான வழிபாடும் நடைபெறும்.

 

மே 04: அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

சூரியன், பரணி 4ஆம் பாதத்தில் தொடங்கி, கார்த்திகை, ரோகிணி முதல் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம்தான் அக்னி நட்சத்திரக் காலம். பொதுவாக, `இந்தக் காலத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக் கூடாது' என்பார்கள். அர்ஜுனன் 'காண்டவ வனம்' எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

 

மே 7: சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்

நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் இன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.

 

மே 10: தத்தாத்ரேயர் ஜெயந்தி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக வணங்கப்படும் ஸ்ரீ தத்தாத்ரேயர் நித்ய சஞ்சீவிகளில் முதன்மையானவர். இவர் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் இதே நாளில் பிறந்தார். இவர் பிறந்த தலம் சுசீந்திரம். 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனநிம்மதியை அளிக்கக்கூடியது.

 

...

அபிஷேகங்கள்... அற்புதப் பலன்கள்

அபிஷேகங்கள்... அற்புதப் பலன்கள்...

20/04/2018

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலனாக தந்தருள்வார் சிவனார் என்கிறார் வைத்தீஸ்வரன் கோவில் கல்யாண குருக்கள்.

அருகம்புல் ஜலத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எமபயம் விலகும்.

பசும்பால் அபிஷேகத்தினால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

சிவலிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால், பலம், ஆரோக்கியம், தேஜஸ் கூடும்.

பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் விருத்தி யாகும்.

மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும். சந்தோஷம் பிறக்கும்!

தேன் அபிஷேகத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால், ஆரோக்கியம் கூடும். ஆயுள் பலம் கிடைக்கும்.

புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.

இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்துகளும் கிட்டும்.

சந்தன அபிஷேகம் செய்து சிவனாரைப் பிரார்த்தனை செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.

திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியம் வெற்றி தரும்.

கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள்.

மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பிரதோஷம் முதலான நாட்களில், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து, நல்ல நல்ல பலன்களைப் பெறுங்கள். நாளெல்லாம் நலமுடனும் வளமுடனும் வாழ்வீர்கள்

 

...
ஶ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா 19.4.2018

ஶ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா 19.4.2018...

18/04/2018

ஜகத்குரு ஶ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா இன்று 19.4.2018 முதல் 21.4.2018 வரை லோட் 294, கம்போங் தாசேக் பெர்மாய், அம்பாங் ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

நாளை 19.4.2018 வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மாலை 5.00 மணிக்கு மஹாலட்சுமி பூஜையும் கோ பூஜையும் நடைபெறும். 20.4.2018 வெள்ளிக்கிழமை ஜகத்குரு ஶ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா சங்கரர் காயத்ரி ஹோமம், பாதுகா பூஜையுடன் மகா அபிஷேகமும் நடைபெறும்.

21.4.2018 சனிக்கிழமை பொன்னூஞ்சல், பாதுகா பூஜை நடைபெறும். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக தமிழகத்தைச் சேர்ந்த கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் வருகை புரிவார். பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு 019-3205265, 03-42800927.

 

...
ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய  4ஆம் ஆண்டு திருவிழா வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை

ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய 4ஆம் ஆண்டு திருவிழா வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை...

18/04/2018

வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை ஶ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு எண் 3, ஜாலான் 7, டேசா ஜெயா, கெப்போங், 52100 கோலாலம்பூர் ஆண்டு பூஜை செய்து அன்னதானம் வழங்க ஆலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே பக்தர்கள் திரளாக வருகை தந்து மதுரை வீரன் அருள் கடாட்சம் பெற்றேகுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. 

 

...
பாபா தரிசனம் எப்போது, யாருக்குக் கிடைக்கும்?

பாபா தரிசனம் எப்போது, யாருக்குக் கிடைக்கும்?...

12/04/2018

நாம் கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு கடவுளின் தரிசனம் கிடைக்கும். அதேபோல் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் மகான்களின் கருணையும், மகான்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். அப்படி பூர்வஜன்ம புண்ணியம் பெற்றிருந்த பக்தர் ஒருவரை, பாபா தம்மிடம் எப்படி அழைத்துக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

காக்காஜி என்பவர் 'வாணி' என்ற ஊரிலுள்ள சப்தசிருங்கி கோயிலில் பூசாரியாக இருந்தார். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட பல சோதனைகளால், மனநிம்மதி இழந்து, அமைதியில்லாமல் இருந்தார். தனக்கு மனநிம்மதி அருளும்படி சப்தசிருங்கியிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

அவரிடம் இரக்கம் கொண்ட சப்தசிருங்கி தேவி, ஒருநாள் இரவு அவருடைய கனவில் தோன்றி, "பாபாவிடம் சென்று அவரை வணங்கினால், அமைதி கிட்டும்" என்று கூறி மறைந்தாள்.

அதுவரை பாபாவைப் பற்றி எதுவும் அறியாத காக்காஜி, சப்தசிருங்கி 'பாபா' என்று குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் இருக்கும் சிவபெருமான் என்று நினைத்து, த்ரயம்பகேஷ்வருக்குப் புறப்பட்டுச் சென்று அங்கே பத்து நாள்கள் தங்கினார். எனினும் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. இதனால் மேலும் வருத்தமடைந்த காக்காஜி, மீண்டும் தனது சொந்த ஊரான வாணிக்கே திரும்பி, தன் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தார்.

அவர் மேல் கருணைக் கொண்ட சப்தசிருங்கி மீண்டும் அவள் கனவில் தோன்றி, 'தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடியில் வசிக்கும் பாபாவைத்தான்' என்று கூறினாள்.

காக்காஜிக்கு ஷீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், எப்படியும் ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

அதே தருணத்தில் ஷீரடியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது:

பாபாவின் தீவிர பக்தர் ஷாமா. அவருடைய சகோதரர் ஒரு ஜோதிடரைப் பார்த்து தங்களின் குடும்பக் கஷ்டங்களுக்கான காரணத்தைக் கேட்டார். ஜோதிடர், குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையைச் செலுத்தாத காரணத்தால்தான், அடுக்கடுக்காகக் கஷ்டங்கள் வருகின்றன என்று தெரிவித்தார்.

அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை தெரியவந்தது. 

ஷாமாவின் தாயார், ஷாமா சிறு குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், ஷாமாவின் தாயார் தன் குலதெய்வமான சப்தசிருங்கியிடம் வேண்டிக்கொண்டாள். ஷாமாவும் குணமடைந்தார். ஆனால், அவருடைய தாய், வேண்டுதலை நிறைவேற்றவில்லை. 

சில வருடங்களுக்குப்  பிறகு ஒருமுறை ஷாமாவின் தாயாருக்கு மார்பில் படர்தாமரை வந்து, மார்பு முழுவதும் பரவிவிட்டது. அப்போதும் அவள், தன்னுடைய படர்தாமரை மறைந்துவிட்டால், ஒரு ஜோடி வெள்ளியினாலான தனங்களைச் செய்து சமர்ப்பிப்பதாக பிரார்த்தித்துக்கொண்டாள். அந்தப் பிரார்த்தனையையும் அவள் நிறைவேற்றவில்லை. தனது இறுதி நாள்களில் மரணப்படுக்கையில் இருக்கும்போது, சப்தசிருங்கிக்கு தான் செய்துகொண்ட வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். காலப் போக்கில் ஷாமா அதை மறந்துவிட்டார். 

சகோதரரிடம் ஜோதிடர் சொன்னதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஷாமா, தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு ஜோடி வெள்ளி தனங்களை வாங்கிக் கொண்டு, அனைத்துக் கடவுளரின் வடிவமாகத் திகழும் பாபாவிடம் சென்றார். ஆனால், பாபா இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அவர் ஷாமாவை உடனே வாணிக்குச் சென்று சப்தசிருங்கி தாயாரை வணங்கி வரும்படி ஆணையிட்டார். பாபாவின் வார்த்தையை மீறாத ஷாமாவும் உடனே புறப்பட்டு சப்தசிருங்கியின் கோயில் அமைந்திருந்த ஊரான வாணிக்குச் சென்றார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மகான்களின் வார்த்தைகள் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. சாதாரண மனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்வது கடினம். அப்படித்தான் தம்முடைய பக்தரான ஷாமாவை வாணிக்குச் செல்லும்படி பாபா கூறியதிலும் அர்த்தமிருந்தது.

ஆம். பாபாவின் தரிசனத்தைப் பெற ஏங்கியிருந்த காக்காஜியின் விருப்பத்தை நிறைவேற்றவும், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்தான் பாபா இந்த அருளாடலை நிகழ்த்தினார். 

ஷாமா சப்தசிருங்கி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார், தன் தாயாரின் வேண்டுதலையையும் நிறைவேற்றினார். பிறகு அங்கே பூசாரியாக இருந்த காக்காஜியிடம் தன் தெய்வமான பாபாவைப் பற்றி கூறினார். இதைக் கேட்ட காக்காஜியின் மனம் பரவசம் அடைந்தது. சப்தசிருங்கி, 'பாபா' என்று குறிப்பிட்டது, ஷாமா சொல்லும் ஷீரடி பாபாவைத்தான் என்பதைப் புரிந்துகொண்டார். உடனே அவர் ஷாமாவுடன் ஷீரடிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஷீரடிக்கு வந்த காக்காஜி, துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை மனம்குளிர தரிசித்தார். பாபாவைத் தரிசித்தவுடன் அமைதியில்லாமல் இருந்த அவரின் மனம் உடனே அமைதியடைந்தது. அவர் பாபாவிடம் எதுவும் பேசவில்லை. பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனாலும், அவரைத் தரிசித்த அந்த நொடியிலேயே காக்காஜி ஒருவிதப் பரவச நிலையை உணர்ந்தார். அந்த நொடியில் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர், தான் தினமும் வழிபட்ட சப்தசிருங்கி தேவிக்கு மனதார நன்றி கூறிவிட்டு, அன்று முதல் பாபாவின் தீவிர பக்தராக வாழ்ந்தார்.

இவ்வாறு பாபா எப்போது தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கத் திருவுள்ளம் கொள்கிறாரோ, அப்போதே தம் பக்தர் எங்கிருந்தாலும் அவரை தம்மிடம் அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு அருள்புரிகிறார். எல்லையற்றது பாபாவின் கருணை! 

 

...
சிவன் பார்வதிக்கு உபதேசித்த 5 வாழ்க்கை தத்துவங்கள்!

சிவன் பார்வதிக்கு உபதேசித்த 5 வாழ்க்கை தத்துவங்கள்!...

12/04/2018

இருளின் வடிவமாக திகழும் சிவபெருமானுக்கு ஒளியூட்டுவது பார்வதி தேவியாவார். சிவனின் மூத்த மனைவியாகிய சதியின் மனித அவதாரம் தான் பார்வதி.

தன்னுள் பாதியாக பார்வதி என்பதை உணர்த்தும் விதமாக தன்னுடலில் பாதியை சக்திக்கு வழங்கினார் சிவன். சிவன் தான் சக்தி, சக்தி தான் சிவன்.

இந்நிலையில், ஆதி முதல் கடவுளான சிவபெருமான் பார்வதிக்கு பலமுறை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைப் புகட்டியுள்ளார். அவை அனைத்தும் மனிதனின் குடும்பம், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகுக்கும்.

1. ஒரு மனிதன் மரியாதையுடனும், உண்மையாய் இருப்பதும் அவனது நற்பண்புகளாகும். அதுவே நேர்மையில்லாமல், உண்மைக்குப் புறம்பாக ஈடுபடுவதே செய்யும் பாவமாகும். நற்செயல்கள் ஒருபோதும் வாழ்க்கையை சூனியமாக்கா.

2. ஒரு மனிதன் தான் இழைக்கும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவராக இருக்க வேண்டும். தவறை மறைக்க நினைப்பவர்களுக்கு ஏழு ஜென்மத்து பாவம் உண்டாகும்.

3. ஒருவர் பேசும் வார்த்தை, எண்ணம், நடவடிக்கையில் தீமையை வெளிப்படுத்தக் கூடாது.

4. பிற உயிர்களிடம் அன்பு பாராட்டி இணக்கமாக இருக்க வேண்டும்.அது வெற்றிக்கான தாரக மந்திரம். வாழ்வில் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெற்றியை அடைய முடியும்.

5. எதிர்பார்ப்புதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். வாழ்வில் ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று எண்ணி, ஒன்றன்பின் ஒன்றாக செல்வது மிகப்பெரிய பாவச்செயல் ஆகும். இதற்கு பதில் தியானம், கடவுள் வழிபாடுகளில் காலம் கழித்தால் வாழ்வில் புண்ணியம் சேரும் என சிவபெருமான் பார்வதிக்கு உபதேசங்களை வழங்கியுள்ளார்.

 

...
கர்ம வினைகளைத் தீர்க்கும் கால பைரவர்

கர்ம வினைகளைத் தீர்க்கும் கால பைரவர்...

12/04/2018

நம் நாட்டில் பல சிவாலயங்கள் உள்ளன. ஒவ்வொரு சிவாலயத்திலும் உள்ள ஈசான்ய மூலையில் வடகிழக்கு திசையில் நாய் வாகனத்துடன் நீலநிற மேனியோடு காட்சி தருபவர் காலபைரவர். தினமும் காலையில் ஆலயம் திறக்கும் பொழுதும் பிறகு இரவு நடையை சாத்தும் பொழுதும் கால பைரவருக்கு தனி பூஜை நடத்த வேண்டும் என்பது ஆலயங்களின்  நித்ய பூஜா விதிகளில் ஒன்று.

நம் கர்மவினைகளைப் போக்கும் கால பைரவருக்கு பிரதி மாதம் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி விசேஷமான நாளாகும். அன்று அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்த விசேஷமான நாளில் பஞ்ச தீபம் எனும் சிறப்பு வாய்ந்த இலுப்பை எண்ணெய் தீபம், விளக்கு எண்ணெய் தீபம், தேங்காய் எண்ணெய் தீபம், நல்லெண்ணெய் தீபம், பசுநெய் தீபம் ஆகிய தீபங்களை ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்கமுடியாத தொல்லைகள், கஷ்டங்கள் தீரும். பஞ்ச தீபம் ஏற்றும் பொழுது ஒரு தீபத்தின் நெருப்பைக்கொண்டு மற்ற தீபத்தை ஏற்றாமல் தனித் தனியாக ஏற்ற வேண்டும். தனித் தனி அகல் விளக்குகளில் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும்.

இவ்வாறு ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். மேலும் பிரதி மாதம் வருகின்ற அஷ்டமி திதி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட தினத்தில் பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.

பைரவருக்கு உகந்த பஞ்ச தீபத்தை தேய்பிறை அஷ்டமியில் ஏற்றி வழிபடும் பொழுது நல்லருள் கிடைக்கும்.எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும்.தை மாதத்தில் வருகின்ற முதல் வார செவ்வாய்க்கிழமை தொடங்கி பிரதி வாரம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டால் எதிரிகளின் பலம் குறைந்து அவர்களது தீய எண்ணங்கள் அழிந்து விடும்.தொடர்ந்து பைரவ அஷ்டகம் பாராயணம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். யம பயம் அகலும். வாழ்க்கையில் தரித்திரம் அண்டாமல் செல்வச் செழிப்பு உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

திருமணத் தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

 

...
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவி பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் ஏப்ரல் 29இல் காலை 8.00

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவி பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் ஏப்ரல் 29இல் காலை 8.00...

11/04/2018

ஸ்ரீ சக்தி ஆஸ்ரமம், மலேசிய முதல் சக்தி பீடத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவியை பிரதிஷ்டை செய்யும் வகையில் இக்கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 29இல் காலை 8.00 மணியளவில் செய்யப்படவுள்ளது.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவி குருஜி சக்தி பிரியானந்தா அவர்களுக்கும் குருஜியின் முன்னோர்களுக்கும் குலதெய்வமாவாள். இவர்களின் குலதெய்வமானவள் மேல்மலையனூர், கிங்கி, விழுப்புரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு மிக​ நெருங்கிய​ தொடர்புடையவளாவாள்.

குல​ தெய்வ​ வழிபாட்டின் முக்கியத்துவம் ஒரு பரம்பரையின் மூதாதையர்களால் ஒத்த கலாச்சார​ ரீதியிலான​ சடங்குகளோடு வம்சவம்சமாக​ வழிபட்டு வருவதாகும். இவர்கள் தங்களது முழு குடும்பத்தையும் ஒரு குறிப்பிட்ட​ தேவி சரணடையச் செய்து; அத்தேவதைக்கு பூஜை புன​ஸ்காரங்கள் செய்வதன் மூலம் அத் தேவதையின் ஆசீர்வாதம் பெற்று தங்களது வம்சம் வாழையடி வாழையாக​ செழிக்க​ வேண்டுகின்றனர்.

எனவே, குல​ தெய்வம் என்பவர்கள் அந்த​ வம்சத்தைச் சார்ந்த​ குடும்பத்தின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்கள். மேலும், குல​ தெய்வத்திற்கும் அந்த​ குடும்பத்திற்கும் வலுவான​ உறவு இருக்கிறது. ஆகையால் இத்தகைய வழிபாடு விரைவான​ பலனைக்கிட்டும். குடும்பத்தின் பாதுகாவலராக​ கருதப்படும் குல​ தெய்வங்கள் முதல் பெற்றோராகக்கூட​ கருதப்படுகிறார்கள். பிள்ளையாருக்கும் பிறகு முதலில் வழிபட​ வேண்டிய​ தெய்வம் குலதெய்வமாகும். ஆகவே, அனைத்து நல் உள்ளங்களும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவியின் பிரதிஷ்டையில் கலந்து கொண்டு அம்பாளின் அனுக்கிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற​ வேண்டும் என்பதே குருஜி சக்தி பிரியானந்தரின் அன்பான​ வேண்டுகோள் ஆகும்.

எனவே, ஸ்ரீ சக்தி ஆஸ்ரம்,மலேசிய முதல் சக்தி பீடத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தேவி பிரதிஷ்டை, கும்பாபிஷேகத்தில் மலேசியா முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பர் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

 

...
ஜிஞ்சாங் உத்தாரா - விநாயகர் ஆலயத்தில்  புத்தாண்டு சிறப்புப் பூஜை சனிக்கிழமை இரவு 7.01

ஜிஞ்சாங் உத்தாரா - விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பூஜை சனிக்கிழமை இரவு 7.01...

11/04/2018

ஜிஞ்சாங் உத்தாரா, ஜாலான் வேஸ்ட் பென்ஸ், லாட் 69 என்ற முகவரியில் உள்ள ஶ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபையின் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை வரும் 14.4.2018 சனிக்கிழமை இரவு 7.01 மணிக்கு நித்திய பூஜையுடன் தொடங்கும். 

இரவு 8.00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்று, சித்திரை புது வருட ராசி பலன் வாசிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படும். வருடப் பிறப்பு அன்று ஆலயத்தில்வெகு விரைவிலேயே கும்பாபிஷேகம் நடக்க வேண்டி தீப ஒளி வழிபாடு நடக்கவிருக்கிறது.

அகல் விளக்கில் (நெய் விளக்கு) தீபமேற்றும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் பரிபூரண கடாட்சியம் பெறுமாறு ஆலயத் தலைவர் இரா. ரெங்கசாமி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

தொடர்புக்கு: 016-6531785, 014-9669342 ஆலயக் குருக்கள், 016-2943175 கௌரவ செயலாளர் அ.பாலசுப்பிர மணியம்.

 

...
பந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் வரும் 28.4.2018 சனிக்கிழமை

பந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் வரும் 28.4.2018 சனிக்கிழமை...

11/04/2018

கோலாலம்பூர், ஆஃப் ஜாலான் பங்சார், ஜாலான் பந்தாய் பாரு, கே.எஸ்.இகோ சிட்டி, ஶ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரும் 28.4.2018 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் காலை 8.00 வரை ஜாலான் பங்சார் ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மன் ஆலயத்தை வந்தடைவார்கள்.

 

...
ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய  4ஆம் ஆண்டு திருவிழா

ஓம் ஶ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் ஆலய 4ஆம் ஆண்டு திருவிழா...

10/04/2018

வரும் 1.5.2018 செவ்வாய்க்கிழமை ஶ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு எண் 3, ஜாலான் 7, டேசா ஜெயா, கெப்போங், 52100 கோலாலம்பூர் ஆண்டு பூஜை செய்து அன்னதானம் வழங்க ஆலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே பக்தர்கள் திரளாக வருகை தந்து மதுரை வீரன் அருள் கடாட்சம் பெற்றேகுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

...
சேலம் சித்தரின் ஆரோக்கிய விழிப்புணர்வு  	தலைநகரில் இலவச விளக்க உரை  11.4.2018

சேலம் சித்தரின் ஆரோக்கிய விழிப்புணர்வு தலைநகரில் இலவச விளக்க உரை 11.4.2018...

10/04/2018

சர்க்கரை வியாதி, குழந்தையின்மை, ஆண்மையின்மை போன்றவற்றுக்கு சித்தர்கள் அருளிய வீட்டில் தயார் செய்யக்கூடிய எளிமையான பக்குவ முறைகள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சித்தர் ஆரோக்கிய விழிப்புணர்வு மையத்தைச் சேர்ந்தவரும் 18 சித்தர்களில் ஒருவரான சேலம் காலங்கிநாதர் சித்தரின் சீடருமான சிற்றரசு அவர்கள் வரும் புதன்கிழமை 11.4.2018 இரவு 7.30 முதல் 9.30 மணி வரையில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ்,  ஜாலான் துன் சம்பந்தன் 3 எனும் முகவரியில் உள்ள அர்த்தஞான மையத்தில் இலவச விளக்க உரை நிகழ்த்தவுள்ளார்.

அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் முறையோடு, நுரையீரலை தூய்மை படுத்தும் முறை ஆகியவற்றுடன் தியான மருத்துவ முறை குறித்தும் அவர் விளக்கமளிப்பார். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க சித்தர்கள் அருளிய எளிய வழிமுறைகளைப் பற்றி விளக்கமளிக்கும் இந்த இலவச நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

மிகவும் பயன்மிக்க இந்த விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விபரங்களுக்கு www.arthanyana.org  என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 0123025643, 0122717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

 

...
பந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் 28.4.2018

பந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் 28.4.2018...

10/04/2018

கோலாலம்பூர், ஆஃப் ஜாலான் பங்சார், ஜாலான் பந்தாய் பாரு, கே.எஸ்.இகோ சிட்டி, ஶ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரும் 28.4.2018 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் காலை 8.00 வரை ஜாலான் பங்சார் ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மன் ஆலயத்தை வந்தடைவார்கள்.

...