மைபிபிபியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்! தே.மு.வுக்கு அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை...

மைபிபிபியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்!  தே.மு.வுக்கு அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை

20/04/2018

கோலாலம்பூர், ஏப்.21: மைபிபிபி கட்சிக்கு கேமரன்மலை கிடைக்காத நிலையில் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தேசிய முன்னணி மீது கொண்டுள்ள பிரச்சினைக்கு தேசிய முன்னணி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி தங்களுக்குக் கிடைக்காத நிலையில் மைபிபிபி கட்சி தேசிய முன்னணி மீது கோபம் அடைந்துள்ள விவகாரம் அக்கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மீது, கேவியஸ் கொண்டுள்ள அதிருப்திக்குத் தீர்வு காணும் முயற்சியில் தேசிய முன்னணி இறங்க வேண்டும் என்று வட மலேசியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கமாருல் ஸமான் யூசோப் கூறினார்.

இப்பிரச்சினைக்கு தேசிய முன்னணி விரைவில் தீர்வு காணாவிட்டால், அது தேசிய முன்னணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

மைபிபிபி கட்சிக்கு கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுக்காமல் அக்கட்சியை சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்படி தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கூறியிருந்தது குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

கேவியசை வேட்பாளராகக் கொண்டு வருவதில் தேசிய முன்னணி அக்கட்சி மீது காட்டிய அலட்சியப் போக்கை கமாருல் சாடினார். இவ்விவகாரத்திற்கு தேசிய முன்னணி முன்னதாகவே முடிவு எடுத்திருக்க வேண்டும். காரணம் கேவியஸ் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சி ஒன்றின் தலைவர் ஆவார்.

முன்பு எதுவும் செய்யாமல் இப்போது அவரை திடீரென சிகாம்புட் தொகுதியில் போட்டியிடுமாறு கூறுவது மிகவும் தாமதமான ஒரு நடவடிக்கையாகும். அது அக்கட்சிக்கு பெரும் போராட்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். காரணம்  மிகவும் பிரபலமான ஜசெகவின் ஹன்னா யியோவை வெல்வது எளிதான காரியமல்ல என்றார்.

இதனிடையே, இவ்விவகாரத்தில் மைபிபிபிபி கட்சி மீது தேசிய முன்னணி மிகவும் அலட்சியம் காட்டியுள்ளதை இது எடுத்துக் காட்டியுள்ளது என்று சரவா மலேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் மற்றோர் அரசியல் ஆய்வாளருமான அண்ட்ரு ஏரியா கூறினார்.

ஆனால், தேசிய முன்னணியிலுள்ள இதர தோழமைக் கட்சிகள் இதனை வேறு மாதிரியாக நினைக்கத் தோன்றும். மைபிபிபி கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை நாளைக்கு நமக்கும் வராதா என்றும் அவை நினைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நன்றி: தி மலேசியன் டைம்ஸ்

...

300 ஒலிம்பிக் நட்சத்திர வீரர்கள் ஒன்றுகூடும் மாபெரும் விழா

300 ஒலிம்பிக் நட்சத்திர வீரர்கள் ஒன்றுகூடும் மாபெரும் விழா...

20/04/2018

கோலாலம்பூர், ஏப்.21:

மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஒலிம்பிக் வீரர்கள் ஒன்றுகூடும் நட்சத்திர விழா இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெறும். 

இந்நட்சத்திர விழாவில் மலேசியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்களென்று மலேசியன் மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சொன்னார். 

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஓடியவர்களும், 'சீ' போட்டியில் தங்கம் வென்றவர்களுடன் சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் கலந்து கொள்வார்களென்று சிவப்பிரகாசம் தெரிவித்தார். 

மேலும், டான்ஶ்ரீ எம்.ஜெகதீசன், டத்தோ எம்.இராஜாமணி. டத்தோ நசத்தார் சிங், டத்தோ மும்தாஜ் ஜபார், தம்பு கிருஷ்ணன், ஜி.இராஜலிங்கம், எஸ்.சபாபதி, எஸ்.சிவராமன், கரு.செல்வரத்தினம், பேயதாஸா, ஜி.சாந்தி, பி.சாந்தி, சக்திராணி, சண்முகநாதன், எம்.இராமச்சந்திரன், எஸ்.முத்தையா, ஆர்.சுப்பிரமணியம், வி.சுப்பிரமணியம், ஆர்.மோகன், பி.சாஹத்திரி, சரவணன், பி.இராஜகுமார், கெனிமேர்டின் இன்னும் பலரும் கலந்து கொள்கின்றனர். 

1956ஆம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து ஓடிய அன்னி சொங், லீ கா புக் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 

இவ்விருந்தின் ஆலோசகராக டத்தோஶ்ரீ டாக்டர் வி.புலேந்திரன், ஏற்பாட்டுக் குழுத் தலைவராக திரு.சிவப்பிரகாசமும் செயலாளராக செல்வி கலைவல்லி ரெத்தினமும், விழா வெற்றி பெற சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 

 

...
இளைய வர்த்தகர்களுக்கு வழிகாட்டும்  மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம்!

இளைய வர்த்தகர்களுக்கு வழிகாட்டும் மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம்!...

20/04/2018

மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் வழி நாட்டில் சிறப்பாக வளர்ந்து வரும் வர்த்தகர்களை மெருக்கூட்டவும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அவர்களுக்கான முதலாவது மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் விருது விழா பூச்சோங், ஃபோர் போய்ண்ட் (Four Point by Sheraton)இல் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இச்சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் நிகழ்வு சார்ந்த துறையினர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். முறைப்படி தங்களது நிறுவனத்தை பதிவு செய்தவர்கள் உறுப்பினர்களாக தங்களின் நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வர்த்தக வாய்ப்பையும் அவர்களுக்கான வர்த்தக வலைத்தளத்தையும் உருவாக்கித் தருகின்றனர். 

அந்த வகையில், நமது இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அங்கீகாரம் செய்யும் நிகழ்வாக எம்.ஐ.ஏ.இ விருது விழா முதல் முறையாக அறிமுகப்படுத்துகின்றனர். இதன் வழி தங்களின் வர்த்தகத்தை சிறப்பாகவும் புத்தாக்க சிந்தனையும் மிகச் சிறப்பாக இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் வர்த்தகத்தை வளம் பெறச் செய்து வர்த்தகத்தில் மிளிர ஒரு தளமாகவும் இந்த விருது விழா அமையும் என்றும் இதன் தலைவர் வண்டர்ஸ் சிவா குறிப்பிட்டார்.

இந்த விருது விழாவில், சிறந்த ஒப்பனையாளர், சிறந்த அலங்காரம், சிறந்த கேட்டரிங், சிறந்த புகைப்படக் கலைஞர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த டி.ஜே அமைப்பு, சிறந்த பொழுதுபோக்கு, சிறந்த கூடாரம், சிறந்த நிகழ்வு மேலாண்மை போன்ற துறைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர். இது சார்ந்தத் துறையினர்களுக்கு விருது வழங்குவது மட்டும்மில்லாது அவர்களை அங்கீகாரப் படுத்துவதற்காகவும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இச்சங்கம் நமது வர்த்தகர்களுக்கு இவ்வாண்டுக்கான பல திட்டங்களை வரைந்துள்ளது. அதில் இந்தியா, டெல்லிக்கு வர்த்தக சந்திப்பு, வியாபார கண்காட்சி, விற்பனை சந்தை, இளையோருக்கான வேலை வாய்ப்பு, தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சியும் வேலை வாய்ப்புகள் என பல திட்டங்களை வரைந்துள்ளனர் சங்கச் செயலவையினர். கடந்த ஆண்டு சீனாவுக்கு வியாபாரச் சந்தைக்கான வர்த்தகர்கள் சந்திப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வோர் ஆண்டும் தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுய வியாபாரத்தை தொடங்குகின்றனர். ஆனால், சரியான வாய்ப்புகளும் பயிற்சிகளும் இல்லாத காரணத்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான வியாபார திறன்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதற்கான தளத்தை உருவாக்குவதே இச்சங்கத்தின் இலக்கு என்று அவர் மேலும் கூறினார். ஆர்வமுள்ள வர்த்தகர்கள் இச்சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் சங்கத்தின் https://www.miae.com.my/ எனும் அகப்பக்கத்தின் வழி தொடர்பு கொள்ளலாம்.

 

...
ஜீவகாருண்ய நடவடிக்கையில் அஸ்திவாரம் அறவாரியம் புதிய தலைமுறை உருவாக்கத்திற்குப் பாடுபடுவோம்

ஜீவகாருண்ய நடவடிக்கையில் அஸ்திவாரம் அறவாரியம் புதிய தலைமுறை உருவாக்கத்திற்குப் பாடுபடுவோம்...

20/04/2018

படங்கள் : ஜனாதிபன் பாலன்

ரவாங், ஏப்.21: வறிய நிலையிலான இந்திய குடும்பங்களை (பி40 பிரிவினர்) அடையாளம் கண்டு, சமூக நல உதவிகளை வழங்கி வருகின்ற அமைப்புகளுக்கு மத்தியில், அஸ்திவாரம் அறவாரியம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.

வழக்கறிஞர் திருக்குமரன் தலைமையிலான இந்த அறவாரியம், இளம் இந்திய வழக்கறிஞர்களையும் கல்வியாளர்களையும் இணைத்துக் கொண்டு சமூகச் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

சட்டச் சிக்கல்களை எதிர்நோக்குகின்ற வறிய நிலையிலான இந்தியக் குடும்பங்களுக்கு இலவச சட்ட ஆலோசனை சேவையை வழங்குகின்ற இந்த அறவாரியம், இலவச மருத்துவ பரிசோதனை, சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளையும் தனது தலையாய திட்டமாகக் கொண்டு மிக நேர்த்தியாகச் செயல்பட்டு வருகின்றது

அண்மையில், சித்திரை புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரவாங் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சாரதா அன்பு இல்லத்திற்கு இந்த அறவாரியத்தின் துணைத்தலைவர் வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு தலைமையிலான சேவகர்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டனர்.

அவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் புத்தாண்டு விருந்துபசரிப்பு நல்கி, தமிழ் நீதிக் கதைகளும் தமிழ் பொன்மொழிகள் அடங்கிய நூல்களையும், பாடப் புத்தகங்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அதோடு, பெண் உரிமை – பெண் வாழ்வியல் முறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர்கள் அங்கு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் கோகிலவாணி கூறுகையில், “2011ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓர் அழகு ராணி போட்டியில் வாகை சூடிய பிறகு, முதல் முறையாக பெண் வாழ்வியல் முறை குறித்து பேச இந்த அன்பு இல்லத்திற்குத்தான் வந்தேன். ஆதலால், இந்த சாரதா அன்பு இல்லம் என் மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்து விட்டது. இங்குள்ள பிள்ளைகள், இறைவனின் கருணை பெற்றவர்கள். அவர்களின் வாழ்க்கை முறைக்கு பேருதவியாக விளங்கக்கூடிய வழிகாட்டுதலையும் விழிப்புணர்வையும் வழங்குவதே மிகச் சிறந்த சேவையாக நான் கருதுகிறேன்” என்றார்.

“வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கலாம். ஆனால், ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை பின்னாளில் அமைத்துக் கொள்ள நிச்சயமாக கல்விச் செல்வம் முழுமையாகத் தேவை. அதனால்தான், நாங்கள் செல்கின்ற இடமெல்லாம் கல்விப் புரட்சியை பரப்பி வருகின்றோம்.

“எங்கள் அறவாரியத்தின் தலைவரும் கல்வி நலனுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுப்பவர். அவரின் ஆலோசனையின் பேரில், கோலாலம்பூரிலுள்ள தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியிலும் கேமரன்மலையிலுள்ள தானா ராத்தா தமிழ்ப்பள்ளியிலும் நூலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கோகிலவாணி தெரிவித்தார்.

“ஜீவகாருண்ய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற எங்களின் அறவாரியம், அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதில் எங்களின் பங்கும் அளப்பரியதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருகின்றோம்” என அவர் கோடிக்காட்டினார்.

                                                 

 

...
ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம்  தேசிய ரீதியில் திருக்குறள் திறன் போட்டி திருவள்ளுவர் விழா

ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தேசிய ரீதியில் திருக்குறள் திறன் போட்டி திருவள்ளுவர் விழா...

20/04/2018

ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான திருக்குறள் திறன் போட்டியும் திருவள்ளுவர் விழாவும் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் செயலாளர் கு.சேதுபதி கூறினார்.

தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா தலைமையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, அறிவுத்திறன் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை நடைபெறவுள்ளன. தமிழ் மாணவர்களின் உள்ளத்தில் திருக்குறள் ஆழமாகப் பதிவு பெற்று உயர்ந்த நிலையை அடைவதற்கு திருக்குறள் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் திறன் போட்டி நாளை 22.4.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் விஸ்மா ஜெயபக்தி, எண். 30, ஜாலான் செண்ரோ 2, 4ஆவது மைல், ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் எனும் முகவரியில் நடைபெறும். தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் நலன் கருதி 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். 

தொடக்கப்பள்ளி படிநிலை ஒன்று முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் படிநிலை இரண்டு நான்கு, ஐந்து, ஆறாம் ஆண்டு மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் இடம் பெறுவார்கள்.

இதைப் போன்று இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கீழ்நிலை ஒன்று புகுமுக வகுப்பு, படிவம் 1, படிவம் 2, படிவம் 3 பிரிவில் இடம்பெறுவார்கள். மேல்நிலை இரண்டு பிரிவில் படிவம் 4, படிவம் 5, படிவம் 6 மாணவர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்ப்பள்ளி படிநிலை ஒன்றில் முதலாவதாக வெற்றி பெறும் மாணவர்களுக்கு 500 வெள்ளி, இரண்டாம் பரிசு 300 வெள்ளி, மூன்றாம் பரிசு 200 வெள்ளி, ஆறுதல் பரிசு எழுவருக்கு தலா 50 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும்.

 

...
நமது வர்த்தகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்வதன் அவசியம் தலைநகரில் இலவச விளக்க உரை

நமது வர்த்தகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்வதன் அவசியம் தலைநகரில் இலவச விளக்க உரை...

20/04/2018

மலேசியாவில் இன்று பல இந்தியர்கள் தொழில்முனைவர்களாகவும் உற்பத்தியாளர்களாகவும் இருக்கின்றனர்.  ஆனால் இவர்களில் பலர் தங்களின் வணிகத்தை உள்நாட்டிலேயே செய்து வருகின்றனர்.

வர்த்தகங்களை உலகளவில் எவ்வாறு விரிவாக்கம் செய்வது? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை என்பது குறித்து கோ குளோபல் திட்டத்தின் தோற்றுநரும் உலகளாவிய இணைப்பாளருமான டாக்டர் எச்.சி. அஜீசா அவர்கள்  தலைநகரில் ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மைய அரங்கில் வரும் திங்கள்கிழமை 23.4.2018 இரவு 7.45 முதல் 9.30  மணி வரை இலவச விளக்க உரை நிகழ்த்துவார்.

வணிகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்வதில் உள்ள விவகாரங்கள், அவற்றுக்கான தீர்வுகள் யாவை, எப்போது விரிவாக்கம் காண்பது போன்ற கேள்விகளுக்கு இந்நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும்.

உலக சந்தையில் ஈடுபடுவதற்கு தேவையான திறன்கள் பற்றி விளக்குவதோடு அவற்றால் கிடைக்கக்கூடிய எண்ணற்ற பயன்கள் குறித்தும் இவர் தெளிவான விளக்கம் அளிப்பார்.

மேலும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் இவர் பதிலளிப்பார்.

மிகவும் பயன்மிக்க இந்த விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விவரங்களுக்கு www.arthanyana.org  என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 0123025643, 0122717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

 

...
புந்தோங் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதைத் திருத்துங்கள்? கேமரன்மலை மக்களையும் ஏமாற்ற வேண்டாம்

புந்தோங் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதைத் திருத்துங்கள்? கேமரன்மலை மக்களையும் ஏமாற்ற வேண்டாம்...

20/04/2018

கோலாலம்பூர், ஏப். 20: "நான் மைபிபிபி உறுப்பினரே அல்லர். மஇகா தான் என் முதல் கட்சி" எனக் கூறும் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ், ராஜினாமா கடிதம் கொடுக்க முன்வருவதாக கூறியுள்ளது முரனாகவும் மக்களைக் குழப்பும் வகையிலும் அமைந்துள்ளது. அதோடு, அவர் உண்மையிலேயே எப்போதுதான் மஇகாவில் இணைந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் சவால் விடுத்தார். 

"மைபிபிபியில் இணையவே இல்லை. மஇகாவில்தான் இணைந்தேன்" என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவராஜ், 2004ஆம் ஆண்டில் டத்தோ டி.மோகனுடன் இணைந்த பின்னர், 2005ஆம் ஆண்டில் தாம் மஇகாவில் உறுப்பினரானதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. எனவே, இந்தக் கூற்று உண்மைதானா என்பதை சிவராஜ் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

டத்தோ சிவராஜ் அவர்களே, கேமரன்மலை மக்களுக்கு சேவை செய்கிறேன்; தேசிய முன்னணிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்று ஓடி ஒளியாமல் புந்தோங்கில் நிலுவையில் இருக்கும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்ற புந்தோங் தொகுதிக்குத் திரும்புமாறு இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகிறேன். 

கேமரன்மலை வேட்பாளர் என்று கூறப்படும் சிவராஜ், மைபிபிபி உறுப்பினர் என்று அம்பலப்படுத்திய டான்ஶ்ரீ கேவியசுக்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளீர்கள். அந்தச் சந்திப்பில் போலீஸ் புகார் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொன்ன நீங்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அவர்களை சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடியுள்ளீர்கள்.

நீங்கள்தான் மைபிபிபியில் உறுப்பினர் என டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டாரே தவிர, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கை அல்ல என்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் சத்தியா சுட்டிக் காட்டினார். 

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்ற காலம் தொட்டு உங்களுக்கு சம்பளம், அலுவலகம், பணியாளர் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நீங்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நீங்கள், தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இப்பதவியை பயன்படுத்தி உங்கள் தொகுதியான புந்தோங் மக்களுக்கு ஏன் சேவை செய்யவில்லை?

தோற்றாலும் வெற்றிபெற்றாலும் புந்தோங் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேனே தவிர, எங்கும் ஓடிவிட மாட்டேன் என தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள் என்னவாகின? 

புந்தோங் இளைஞர்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி அவர்களிடம் பணம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட சிலர் போலீஸ் புகார் செய்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த உடன்படிக்கை ஒன்று கையெழுத்தாகியுள்ள விவகாரமும் இப்போது கசிந்துள்ளது. எனவே, முதலில், புந்தோங்கில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, அங்குப் பூதாகரமாக வெடித்துள்ள பிரச்சினைகளைக் கண்டு கேமரன்மலையில் ஒளிய வேண்டாம் என்று சத்தியா சுதாகரன் நினைவுறுத்தினார். 

கேமரன்மலையில் நீங்களே வேட்பாளர் என்று சொல்லி வரும் நீங்கள், சில இடங்களில், "மஇகாவின் தேசியத் தலைவர் என்னை கேமரன்மலைக்கு அனுப்பி டான்ஶ்ரீ கேவியசுக்கு எதிராக வேலை செய்ய சொன்னார். டான்ஶ்ரீ கேவியஸ் எப்படித்தான் அடிக்கடி மலைக்குச் சென்று வேலை செய்கிறார் என்பது புரியவில்லை" என்று சொல்லியிருக்கிறீர்கள். 

ஆனால், இப்போது கேமரன்மலைக்கு வேட்பாளராக வேண்டும் என்ற பேராசையில் செயல்படுகிறீர்கள். மைபிபிபியில் உறுப்பினராக இருந்து கொண்டு, நீங்கள் பதவியேற்றுள்ள அனைத்துப் பதவிகளும் சங்கப் பதிவகத்தின் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதை உணர வேண்டும். உங்களின் இந்தச் செயலால், மஇகாவை மீண்டும் சங்கப் பதிவகத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என சத்தியா சுதாகரன் தமதறிக்கையில் கூறினார். 

 

...
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் அம்னோ போட்டியிடும்! கோடி காட்டினார் துணைப்பிரதமர்

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் அம்னோ போட்டியிடும்! கோடி காட்டினார் துணைப்பிரதமர்...

20/04/2018

பாகான் டத்துக், ஏப்.20:

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் இம்முறை அம்னோவுக்கு வழங்கப்படலாம் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கோடிக்காட்டினார். 

பேரா சட்டமன்றத் தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் அறிவிப்பார். இதுகுறித்த பரிந்துரை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடமும் முன்வைக்கப்பட்டது என்றார் அவர். 

மஇகாவிடமிருந்து இந்தச் சட்டமன்றத்தை இரவல் பெற வேண்டும் என்பது அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையாகும் என கம்போங் சுங்கை கெலி வட்டார வாக்களிப்பு மையத்தை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர் சொன்னார். 

13ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் போட்டியிட்ட மஇகாவின் வேட்பாளரான சுப்ரமணியம், பிகேஆர் வேட்பாளர் கேசவனிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

...
2020இல் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

2020இல் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்!...

20/04/2018

கோலாலம்பூர், ஏப். 20: 2020இல் தொழில்முனைவோர் பிரிவில் பெண்களின் பங்களிப்பு 23 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறையின் மகளிர் தொழில்துறை, தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவின் ஆலோசகரான டான்ஶ்ரீ ஷரிஸாட் அப்துல் ஜாலில் தெரிவித்தார். 

மலேசிய சிறு, நடுத்தர தொழில்முனைவோர் கழகத்தின் தரவின்படி தற்போது 20.6 விழுக்காட்டு பெண்கள், தொழில்முனைவோர் துறையில் ஈடுபட்டுள்ளனர். கொள்கை, தொழில்முனைவோர் பிரிவில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு ஏற்ப கடந்தாண்டு 'அமானா ரக்யாட்' மன்றம் (மாரா), பெண் தொழில்முனைவோருக்காக சிறப்பு வணிக மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இத்திட்டத்தின் கீழ் 12.4 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டின் வழி நாடுதழுவிய நிலையில் உள்ள 452 பெண் தொழில்முனைவர்கள் பயன்பெற்றனர். இவ்வாண்டு 100 தொழில்முனைவர்கள் பயன்பெறும் நோக்கில் 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். 

மாரா ஏற்பாட்டில் நடைபெற்ற 'பெண்கள் சமூக உத்வேகம்' திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு பேசினார். பெண்கள் சமூக உத்வேகத் திட்டம் தொழில்முனைவோர் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.   

 

 

...
இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கிறது!

இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கிறது!...

20/04/2018

கோலாலம்பூர், ஏப்.20:

14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை (தேமு) பிரதிநிதித்து களமிறக்கப்படும் இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிப்பதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். 

சில இளைஞர்களின் பெயர் இன்னும் பேச்சு வார்த்தையில் உள்ளது. அதுகுறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி ஆகியோரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார். 

மொத்த நாடாளுமன்ற எண்ணிக்கையில் 40 தொகுதிகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு கேட்டுக் கொண்டது. அடுத்த தலைமுறை நாட்டின் மேம்பாட்டில் ஒன்றிணைந்து எதிர்காலத்தைச் செதுக்க வேண்டும் என்ற இலக்குக்கு ஏற்ப இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றார் அவர். 

தாம் இளைஞர் பருவத்தைக் கடந்து விட்டதால், இளமையான நபர் ஒருவர் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இளமையான, புதுமுகங்களால் மக்களின் மனதை கவர முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

 

...
பிகேஆர் சின்னத்தில் பக்காத்தான் வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை - தேர்தல் ஆணையம்

பிகேஆர் சின்னத்தில் பக்காத்தான் வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை - தேர்தல் ஆணையம்...

20/04/2018

புத்ரா ஜெயா, ஏப். 20: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) வழங்கியது.

“பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் கட்சியின் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம். அவர்கள் பிகேஆர் கட்சியிடம் இருந்து அதற்கான அனுமதிக் கடிதத்தை மட்டுமே பெறவேண்டும். அது தவிர தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை” என தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹாஷிம் தெரிவித்தார்.

 

...
பிஎன்பி பெருநிறுவனத்தின் நன்கொடை  சமூக கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது

பிஎன்பி பெருநிறுவனத்தின் நன்கொடை சமூக கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது...

20/04/2018

பத்து பஹாட், ஏப். 20: பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டு நிறுவன கழகம், இங்குள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் ஹெமோடையாலிசிஸ் பிரிவுக்கு 700,000 வெள்ளி நிதியுதவி வழங்கியிருப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 

பிஎன்பி கழகத்தின் சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவவுமே இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 

அதோடு, ஜோகூரில் வாங்கும் சக்திக்குட்பட்ட 5,000 வீடுகளையும் பிஎன்பி நிறுவனம் அமைக்கவுள்ளது. போதவில்லையெனில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வீடு கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் நிலப்பரப்பை வழங்குவதற்கு டத்தோஶ்ரீ முகமட் காலிட்டும் சம்மதம் தெரிவித்திருப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் கூறினார். 

பத்து பஹாட் அரங்கத்தில் மலேசிய அறக்கட்டளை நிதியக வாரத்தைத் தொடக்கி வைத்தபோது டத்தோஶ்ரீ நஜிப் மேற்கண்டவாறு பேசினார். இந்நிகழ்வில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், பிஎன்பி குழுத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  

 

...
மலேசியாவில் ஜிஎஸ்டி அமலாக்க இணக்கம் சிறப்பாக இருக்கிறது

மலேசியாவில் ஜிஎஸ்டி அமலாக்க இணக்கம் சிறப்பாக இருக்கிறது...

20/04/2018

கோலாலம்பூர், ஏப். 20: மலேசியாவில் ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் சேவை வரி கட்டண இணக்கம் சிறப்பாக இருக்கிறது என மலேசிய குடிநுழைவுத் துறையின் ஜிஎஸ்டி பிரிவின் துணை இயக்குனர் முகமட் சப்ரி சாட் தெரிவித்தார். 

சுமார் 470,000 நிறுவனங்கள், தனிநபர், கூட்டுறவு நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களின் வருவாய் 500,000க்கும் மேற்பட்டதாக இருப்பின் ஜிஎஸ்டியை கட்டாயம் செலுத்த வேண்டும். 

ஜிஎஸ்டி செலுத்துபவர்கள் மத்தியில் பெரும்பான்மையினர் சிறு, நடுத்தர நிறுவனர்கள் ஆவர் என்று 2018ஆம் ஆண்டுக்கான மலேசிய வரி மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார். 

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட இம்மாநாட்டில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். வரி நிர்வாகிகள், அமலாக்கப் பிரிவினர், நிதி தலைமை அதிகாரிகள், இயக்குநர்கள், அங்கீகாரம் பெற்ற கணக்காளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

...