ஃப்ளாஷ் நியூஸ்

  மனித வாழ்க்கையும் குணமும்...

  மனித வாழ்க்கையும் குணமும்

  17/04/2018

  மனித வாழ்க்கை கீழ்க்காணும் மூன்று வகையானது

  1. பொது வாழ்க்கை 

  2. தன் வாழ்க்கை 

  3. ரகசிய வாழ்க்கை 

   

  முதல் இரண்டு வாழ்க்கையிலும் அந்த மனிதனின் குணத்தையும் நடத்தையையும் வெளிக்காட்டுவது இந்த ரகசிய வாழ்க்கையின் பிரதிபலிப்பே ஆகும். 

   

  எனவே, இந்த ரகசிய வாழ்க்கையில் அந்த மனிதனின் குணங்கள் எவ்வாறு நல்ல திசையில் பக்குவப்பட்டிருக்கிறது, பயணிக்கிறது என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரகசிய வாழ்க்கையை ஒரு மனிதன் மிகச்சில விழுக்காடுகள். தன் பெற்றோரிடமோ தன் துணையிடமோ பகிர்கிறான். எனவே அந்தத் திசையை மேம்படுத்தி வெற்றி பெறுவது அவரவர் கையில் மட்டுமே உள்ளது. 

   

  ஓர் உதாரணம். ஒருவர் தனியாக சாப்பிட்டு பழகியவர். யாருடனும் சேர்ந்து சாப்பிடும் பழக்கமில்லாதவர். சிறிது சிறிதாக அதையே தன் ரகசிய வாழ்க்கையில் பழகிவிட்டவர் தனக்கு திருமணமானவுடன் தன் பொது வாழ்க்கையில், தன் வாழ்க்கையில் யாருடனும் சாப்பிடுவதை அசௌகரியமாக உணருகிறார், தன்னை ஒளித்துக் கொள்கிறார். புதிதாக திருமணமானவர் எத்தனை வீட்டில் சாப்பிட வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறீவீர்கள் தானே. அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாகும் உறவினர்கள் மத்தியில்.

   

  ஆக இவரின் இரகசிய வாழ்க்கையின் ஒரு பழக்கம் தன் வாழ்க்கையில் நுழைந்த மனைவியையும், பொது வாழ்க்கையில் வரும் பொது நிகழ்ச்சிகளையும் எத்தனை கொடூரமாகப் பாதிக்கிறது. இதைப்போல் பல உதாரணங்களை நீங்கள் தினமும் பார்ப்பது இயல்பே. 

   

  இந்தக் குணங்களை எதிரில் இருப்பவர்கள் அடையாளம் கண்டு மேம்படுத்த உதவ முயற்சிக்கலாம். ஆனால், இது இரகசிய வாழ்க்கையினை மேலும் பாதிக்கும் வாய்ப்பாக மாற முயற்சி செய்கிறது.  இதற்கு ஒரே தீர்வு, தானே உணர்ந்து மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே நல்லது. எனவே, இரகசிய வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என ஆராயுங்கள். அதை நல்ல திசையில் மேம்படுத்துங்கள். நல்வாழ்க்கை நாளையே திறந்திடும் உங்களுக்காக..........

   

  ...

  உறவை சிதைக்கும் போட்டி உலகம்

  உறவை சிதைக்கும் போட்டி உலகம்...

  17/04/2018

  குழந்தையாக இருந்தபோது உடை, தின்பண்டம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். பாசமாக பழகுகிறோம். வளர்ந்த பிறகு எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்க்கிறோம், சண்டை போடுகிறோம். வளர வளர எதிர்ப்புணர்ச்சியும் வளர்கிறது. ஏன்? குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் அன்பிற்காகப் போட்டியிடுகிறோம். மாணவப் பருவத்தில் படிப்பு, விளையாட்டில் போட்டி போடுகிறோம். வளர்ந்ததும் மற்றவரின் கவனத்தைக் கவருவதற்காகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் போட்டியிடுகிறோம். 

   

  இப்படி வாழ்க்கையின் பெரும் பகுதி போட்டிப் போடுவதிலேயே கழிகிறது. அதனால் பொறாமை எண்ணம் நம் உடன்பிறப்பாகவே உள்ளுக்குள் வளர்ந்து விடுகிறது. அதுவே அன்புறவை சீர்கெடுக்கிறது. வளர்த்த பெற்றோரையே வாடி நிற்கும் அளவுக்கு தவிக்கவிடும் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுகிறோம். இதனால் உடன் பிறந்த சகோதரர்களையும் `நீயா, நானா?’ பார்த்து விடுவோம் என்று பகையாளி போல் பார்க்க வைக்கிறது. 

   

  வெற்றி பெறாதவர், வெற்றி பெற்றவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார், வலியவர் எளியவரைக் கேலி செய்கிறார், இருப்பவர் இன்னும் பெரியவரை எண்ணி ஏக்கப்படுகிறார். மனமெங்கும் பொறாமையும், பகையுணர்வுமே விஞ்சி நிற்கிறது. 

  ஏன் நமக்குப் பொறாமை வருகிறது? ஏன் குடும்பங்கள் பிரிந்து போகின்றன? இந்தக் கேள்விகளுக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். விட்டுக் கொடுக்காமை தான். 

   

  பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே அதை நாம் பேசித் தீர்ப்பதில்லை. அது பெரிதாகிய பின் அதை சாதாரண முறைகளில் பேசித் தீர்ப்பது சிக்கலாகி விடுகிறது. 

   

  நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நாம் மன்னிப்புக் கேட்பதில்லை. நாம் முரண்படும்போது முரட்டுத்தன சிந்தனைக்கு தயாராகி விடுகிறோம். அண்டி வாழும்போது அடிவருடிகளாகவும் மாறி விடுகிறோம். நாம் கேள்விப்படும் தகவல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அப்படியே நம்பி விடுகிறோம். வதந்தியை நம்பி முடிவெடுக்கிறோம், சொந்தங்களைக் கண்டிக்கிறோம். மரியாதை கொடுத்தால்தான் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். இவையெல்லாம் பிரச்சினை பெரிதாவதற்கு முக்கியக் காரணங்கள். 

   

  பலவீனமானவர்களைச் சுரண்டும், பணக்காரர்களை அண்டி வாழும் நமது பலவீனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நமக்கும் பல நேரங்களில் மன்னிக்கும் குணத்தை விட பழி வாங்குவதே சரியென்று படுகிறது, நாமும் ஒருநாள் வயோதிகர்களாக மாறுவோம் என்பதை இன்றைய பொழுதுவரை நாம் மறுக்கிறோம். எதையும் எதிர்த்து மார்தட்டுகிறோம். இவையெல்லாம் நாம் சரியான மனிதனில் இருந்து நழுவி சராசரிகளில் ஒருவனாக வாழ்வதற்கு முக்கியக் காரணமாகிறது. 

   

  கூட்டமாக வாழ்வதுதான் மனித இயல்பு, அதனால்தான் நமது குடும்பங்களுக்கு வெளியிலும் நாம் நம் உறவைத் தேடுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தால்தான் நமக்கு முழுமை உணர்வு கிடைக்கிறது. உறவைக் கவனமாகப் பாதுகாக்காவிட்டால் வாழ்வு கசந்துவிடும். உறவு பேணுவதை எப்படிச் செய்வது? 

   

  'எனக்கு முன்னால் நடக்காதே நான் பின் தொடரமாட்டேன். எனக்குப் பின்னால் நடக்காதே நான் வழிகாட்ட மாட்டேன். என்னோடு கூட நட, என் நண்பனாய் இரு', அறிஞர் ஆல்பர்ட் காம்யூவின் அற்புத வரிகள் இவை. 

   

  மனிதர்களுக்கு எப்போதுமே `தான்’ என்ற அகங்காரம் உண்டு. அவனால் முன்னால் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பின்னால் வருபவர்களை அரவணைத்துச் செல்ல முடியாது. தனக்கு சமமாக நட்பு பாராட்டுபவனிடம் மட்டும் அவன் சாதுவாக இருக்கிறான். இதுவே மனித சுபாவம். 

   

  மனிதன் இயல்பே இப்படி இருப்பதால் யாருமே அப்பழுக்கற்றவர் அல்லர். இருந்தாலும் நீங்கள் திறந்த மனதுடன் இருங்கள். அன்பாகப் பேசுங்கள். ஒவ்வொருவர் முன்னுரிமையும் வேறுபடும், எனவே ஒவ்வொருவர் உறவிலும் இடைவெளியைப் பேணுங்கள். மனித உறவில் சூழ்ச்சி கூடாது. மற்றவரின் குறைகளை மன்னிப்பதால் பதிலுக்கு நாமும் மன்னிக்கப்படுவோம். 

   

  “நீ அன்பாக இருப்பதாலும், இரக்கமாக நடந்து கொள்வதாலும் உன்னை பிறர் கோழை என்று எண்ணக்கூடும். இருந்தாலும் நீ அன்புடன் இரு” என்று காந்திஜி சொன்னதைப்போல, நாம் உறவு பேணுவோம். மனத்தளவிலும் உயர்வு பெறுவோம்.

   

  ...
  ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்

  ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்...

  17/04/2018

  1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

  2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

  3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000-8,000 வரை ஆகும். சுத்தப்படுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

  4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

  5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

  6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்களை வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

  7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

  8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவோடு சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

  9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

  10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

   

  ...
  மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்

  மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்...

  16/04/2018

  குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீங்கள் வெற்றி காண வேண்டும் என்றால் நீங்கள் மனதின் இயல்புகளையும் அதை அடக்கும் வழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளையும் நீங்கள் மனதில் உருவாக்கித்தான், பின்னர் புறத்தில் உருவாக்க முடியும்.

   

  நல்ல எண்ணங்களைப் புகுத்திச் செயல்படச் செய்வதன் மூலம் நீங்கள் விரும்புவதை அடைய முடியும்.

  மனதில் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து பதிக்கப்படும் எண்ணங்கள்தான், சம்பவங்களாக உருவாகி, உங்கள் சூழ்நிலையாகவும் உருவெடுக்கிறது.

   

  கடந்தகாலத் தோல்விகளையும், கஷ்டங்களையும், துன்ப துயரங்களையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவையே விரிவடையும். ஆகவே, அவற்றை மறந்து விடுங்கள்.

   

  நிகழ்காலத்தின் அறிகுறிகளோ அடையாளங்களோ, ஆதாரங்களோ எதிராகவும், பாதமாகவும், விரோதமாகவும் இருக்குமானால் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க முடியாமல் போய்விடும். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

   

  எதிர்காலத்தில் நான் விரும்புவது நடந்தே தீரும்; என் குறிக்கோள் நிறைவேறியே தீரும்; எப்படி என்று தெரியாது; அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; ஆனால் நான் நம்புவது நடந்தே தீரும், என்னும் அழுத்தமான உறுதியான எண்ணம்தான் உங்களின் ஆணித்தரமான எதிர்காலத்தை அமைக்கும்.

   

  தோல்வி, துன்பம் பற்றிக் கவலைப் படாமல், ஓட்ட வேண்டும், ஓட்ட முடியும் என்னும் எண்ணம்தான் உங்களுக்கு வெற்றி தரும்.

   

   

  ...
  உழைப்பே உயர்வு தரும்

  உழைப்பே உயர்வு தரும்...

  26/03/2018

  கொதிக்கும் நீர் கொஞ்சம் சுடுநீராகி

  பனி நீராகி பன்னீராவது போல

  குதிக்கும் சிறார் கொஞ்சும் குழந்தையாயிருந்து

  வாலிபனாகி இளைஞராகியிருப்பார்

  வஞ்சம் தீர்க்கும் நெஞ்சினராய் இலாது

  பஞ்சம் போக்கும் நெஞ்சினது இருக்கையில்

  நஞ்சு அறியா பஞ்சுமக்கள் தஞ்சம் பெற

  துஞ்சாது நாடி வருகிறது மைபிபிபி

  நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையும்

  வீறுகொண்ட உழைப்பை என்றும் ஏந்திடுவர்

  அமர்ந்த நிலையில் சமர்புரியும் சாயலில்லை

  நாள்தோறும் நம்மவர் செய்திடும் நற்சேவை

  மலர்ந்த முகமும் மாண்புடை பணிவும்

  தூய துணிவும் கொண்டனர் மைபிபிபியினர்

  உலர்ந்திடாத சேவைக்கு ஒருசுடர் தருவாம்

  இதன் தனிப் பெரும் தலைவர் கேவியஸ்

  இனியில்லை தயக்கம் வேண்டாம் மனமயக்கம்

  பணி செய்து கிடப்பதே நம்மவர் முழுகடமை

  தனி வரலாறு படைப்போம் உலகம் இதைவியக்கும்

  நனிசிறக்க உழைப்போம் வளர்வோம் உயர்வோம். 

  வித்தகன், தலைநகர்

   

  ...
  நட்பெனும் அழகிய காவியம்

  நட்பெனும் அழகிய காவியம்...

  19/03/2018

  வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..

  நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,

  ஒருவர் மீது ஒருவர் படுத்து,

  அடித்து விளையாடி,

  கண்ட கண்ட சேனல் மாற்றி,

  பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,

  சமைக்கத் தெரியாமல் சமைத்து,

  காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,

  என சந்தோஷங்களோடே

  வாழும் காலங்கள் வரம்..

   

  எத்தனை விதமான பைக்கில்

  பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை

  நண்பனின் பின்னால் அமர்ந்து

  டபுள்ஸ் போகும் சுகம்..

   

  ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்

  என்ற பெயரில் பாடத்தைத் தவிர

  அனைத்தை பற்றியும் பேசி..

  நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமென தத்தெடுத்து..

  நண்பன் எச்சில் செய்த உணவைக் கூட ரசித்து..

  ஒரு சண்டை என்பதே சமாதானத்திற்குத் தானே என்பதை உணர்த்தி..

   

  பள்ளி முடிந்ததும் சீருடை தொலைக்கிறோம். 

  வளரத் தொடங்கியதும் நட்பை தொலைக்கிறோம். 

  எத்தனை எத்தனை சந்தோஷமான தருணங்கள் நட்பில்.. 

  அத்தனையும் தொலைக்கிறோம் இயந்திரத்தனமான 

  வாழ்க்கையின் இடையே...

   

  விஜய் ரவி

  குவாந்தான், பகாங்

   

  ...
  பேராசைக்கு பதில் சொல்லும் கதை!

  பேராசைக்கு பதில் சொல்லும் கதை!...

  12/03/2018

  'மனிதனின் தேவை என்னவோ, அவை எல்லாமே போதுமான அளவுக்கு இந்த உலகில் இருக்கின்றன. ஆனால், அவனின் பேராசைக்குத் தீனி போட அவற்றால் முடியாது’ - தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. 

  செல்வம், செல்வாக்கு, பதவி, வாழ்க்கை வசதிகள்... அத்தனையும் கிடைத்துவிட்டாலும், 'இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்...' என அலைகிற மனிதனை திருப்திப்படுத்தவே முடியாது. 'போதும்' என்கிற மனம் வாய்த்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அந்த மனமில்லாமல் பேராசைப்படுபவர்கள், அதற்கானப் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த நீதியைச் சொல்லும் பழைய கதை இது... 

  ஃபிரான்ஸிலிருக்கும் சிறு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். வாழ்க்கையில் முன்னேறத்  துடிக்கும் வயது. அப்பா, விவசாயி. அவனுக்கோ வியாபாரத்தில் நாட்டம். என்ன தொழில் செய்தால், வாழ்க்கையில் ஒரு படி உயரலாம் என்கிற எண்ணம்தான் சதா அவனுக்கு. 

  ஒரு நாள் அவனிருந்த கிராமத்துக்கு வழிப்போக்கர் ஒருவர் வந்தார். பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வந்த தேசாந்திரி அவர். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான் இளைஞன். நன்கு உபசரித்தான். அவர் சாப்பிட்டு முடித்த பிறகு, அவரின் பயணக் களைப்பெல்லாம் நீங்கிய பிறகு அவருடன் பேச ஆரம்பித்தான். 

  அவர் போய் வந்த நாடுகள், மனிதர்கள், பார்த்த அற்புதமான இடங்கள், அரிய தாவரங்கள், உயிரினங்கள்... என நீண்டுகொண்டே போனது பேச்சு. ஒரு கட்டத்தில், தன் ஆசையை அவரிடம் தெரிவித்தான் இளைஞன். "ஐயா... நான் ஏதாவது ஒரு தொழில் செய்ய விரும்புகிறேன். ஆனால், என் குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு அந்தத் தொழில் லாபம் பெற்றுத் தர வேண்டும். என்ன வியாபாரம் செய்யலாம்... யோசனை சொல்லுங்கள்" என்றான். 

  அந்த தேசாந்திரி, வெங்காயமே இல்லாத ஒரு நாட்டைப் பார்த்ததாகக் கூறினார். "என்னது... வெங்காயமே இல்லாத நாடா... வெங்காயம் இல்லாம அங்கே ஒரு சமையலா... அப்புறம் எப்படி சாப்பாடு ருசிக்கும்?" ஆச்சர்யப்பட்டுப் போனான் அந்த இளைஞன். அந்த நாட்டுக்குச் சென்று, வெங்காயத்தை அறிமுகப்படுத்தி விற்றுவிட்டு வந்தால், வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்கு செல்வம் சேர்த்துவிடலாம் என்று தெரிந்தது. இந்தத் தகவலைச் சொன்னதற்காக அந்தப் பயணிக்கு நன்றி சொன்னான். அங்கே போவதற்கான வழியை விசாரித்து வைத்துக்கொண்டான். 

  ஒரு நல்ல நாளில், ஒரு வண்டி நிறைய வெங்காயங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு அந்த நாட்டுக்குப் பயணமானான். பல நாள்களுக்குப் பிறகு அங்கே போய்ச் சேர்ந்தான். நேராக அந்த நாட்டு அரண்மனைக்குப் போனான். காவலர்களிடம், தான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதாகவும், அரசரைப் பார்க்க அனுமதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு அனுமதி கிடைத்தது. 

  அரசர், அவனை விசாரித்தார். "அரசே... என் தேசத்திலிருந்து மிகப் பிரமாதமான பரிசு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தக் காய் என் தேசத்தில் விளைந்தது. ஆனால், உங்களுக்குப் புதுசு. எந்த உணவின் ருசியையும் மேம்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுக்குப் பேர் வெங்காயம். இதை உங்க நாட்டுக்கு அறிமுகப்படுத்தறதுக்காகவே கொண்டு வந்திருக்கேன்..." 

  அரசர் தன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்தார். கடைசியில்,  வெங்காயத்தைக்கொண்டு அந்த இளைஞனை உணவு தயாரிக்கச் சொன்னார். இளைஞன், தன் திறமையையெல்லாம் பயன்படுத்தி, தான் கொண்டு வந்திருந்த வெங்காயத்தைச் சேர்த்து பிரமாதமான ஒரு விருந்தைத் தயார் செய்தான். அன்று இரவு விருந்து நடந்தது. வெங்காயம் சேர்த்த உணவைச் சாப்பிட்டுப் பார்த்த அரசரும் மந்திரி, பிரதானிகளும் சுவையில் சொக்கிப் போனார்கள்.  

  அரசர் வெங்காயத்தைக் கொண்டு வந்ததற்காக இளைஞனுக்கு நன்றி சொன்னார். அவன் மீதம் வைத்திருந்த எல்லா வெங்காயத்தையும் பெற்றுக்கொண்டு, அதன் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.  இளைஞன் மகிழ்ச்சியோடும் வண்டி நிறைய தங்கக்கட்டிகளுடனும் ஊர் திரும்பினான். வழியில், இரவில் ஒரு சத்திரத்தில் அவன் தங்கவேண்டி வந்தது. அங்கே இன்னொரு வியாபாரியைச் சந்தித்தான் இளைஞன். இருவரும் பல விஷயங்களைப் பேசினார்கள். 

  பேச்சுவாக்கில் இளைஞன் தான் வெங்காயம் இல்லாத நாட்டுக்குப் போய்வந்த கதையைச் சொன்னான். கூடவே, அந்த நாட்டுக்காரர்கள் பூண்டு வாசனையையே அறியாதவர்கள் என்றும் சொன்னான். அந்த வியாபாரி ஆச்சரியப்பட்டுப் போனார். 'வெங்காயத்துக்கே இப்படி மயங்கிப் போனாங்கன்னா, பூண்டு சுவைக்கு நாட்டையே தந்தாலும் தந்துடுவாங்கபோல...' என்று நினைத்தார். அடுத்த நாள் காலை இளைஞன், அவரிடம் விடைபெற்று தன் கிராமத்துக்குக் கிளம்பினான். 

  அந்த வியாபாரி, ஒரு வண்டி நிறைய பூண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டார். அந்த இளைஞன் குறிப்பிட்ட தேசத்துக்குப் போனார். எல்லாம் வழக்கம்போல் நடந்தது. வியாபாரியும், இளைஞன் செய்ததைப்போலவே பூண்டைப் பயன்படுத்தி, தன் திறமையையெல்லாம் காட்டி, பல உணவுகளைச் சமைத்து, விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அரசரும், மந்திரி பிரதானிகளும் விருந்துக்கு வந்தார்கள். உணவின் சுவையில் கிறங்கிப் போனார்கள்.  வெங்காயம் தந்த சுவையைவிட, பூண்டு சேர்த்த உணவுகள் ஒரு படி மேலே சுவை கூட்டியிருந்தன. 

  அரசர், தன் மந்திரிகளை தனியே அழைத்துப் போனார். இவ்வளவு அற்புதமான சுவை நிறைந்த பூண்டைக் கொண்டு வந்திருக்கும் வியாபாரிக்கு என்ன பரிசு தரலாம் என்று நீண்ட நேரம் விவாதித்தார். கடைசியில், வியாபாரி கொண்டு வந்திருக்கும் பூண்டுக்கு தங்கம் ஈடல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். அதைவிடச் சிறந்த ஒன்றைப் பரிசாக வியாபாரிக்குக் கொடுக்க முடிவு செய்தார்கள். வேறென்ன... வெங்காயம்தான்! 

  அன்றிரவு அந்த வியாபாரி தன் வண்டி நிறைய வெங்காய மூட்டைகளுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.    

   

  ...
  சமூகத்தின் கண்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பா பலவீனமா?

  சமூகத்தின் கண்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பா பலவீனமா?...

  08/03/2018

  அமெரிக்காவில் சமீபத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு, ஒரு நிறுவனம் குழந்தைகளுக்கு அணிவிக்கும் புல்லட் புரூப் ஜெக்கெட்டுகளை விளம்பரப்படுத்தத் தொடங்கி உள்ளது.

  சமூகத்தின் அவலங்களை வேரறுப்பது மட்டுமே தொடர் வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் தீர்வாக இருக்க முடியுமே ஒழிய இலைகளை உதிர்ப்பது அல்ல. பெண்களுக்கெதிரான வன்முறைகளிலும் அநீதிகளிலும் நம் சமூகம் காலங்காலமாக புல்லட் புரூப் ஜெக்கெட்டுகளையும் இரும்புக் கவசங்களையும் பெண் மீதே திணித்து அவளை மூச்சு முட்டச் செய்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

  சமூகம் எப்போதும் தனது கண்களால் அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. தாயின் வயிற்றை விட்டு வெளி வந்தது முதலே ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எப்படிச் சிரிக்க வேண்டும்? என்ன வேலை செய்யலாம்? என்ன விரும்பலாம்? எதை வெறுக்கலாம்? எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்? எப்போது பிள்ளைகள் பெறவேண்டும்? என்று அடக்குமுறையை ஏவிக் கொண்டே இருக்கிறது. எப்போது சாக வேண்டும்? என்பது மட்டும் தான் இல்லை; ஏனென்றால் அது எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்; காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சிலிருந்து தொடங்கி வரதட்சணைக் கொடுமையால் மாமனார் வீட்டார் கொலை செய்வது வரை.

  லெக்கின்ஸ் அணிந்த பெண்களை அத்துமீறிப் படமெடுத்து அட்டைப் படக் கட்டுரையாக்கிச் சர்ச்சையில் சிக்கியது ஒரு வார இதழ். கற்பு என்பதன் மீது தனது தனிப்பட்ட கருத்தைச் சொன்னதற்காக ஒரு பிரபல நடிகையைப் படாத பாடு படுத்தியது தமிழ் கூறும் நல்லுலகம். இப்படி விடாமல் துரத்தும் கண்கள் பார்க்க மறுப்பது ஆண்களுக்கு இயல்பாக இருக்கும் அத்தனை உணர்வுகளும் கனவுகளும் சுதந்திர வேட்கையும் இருக்கும் சக உயிர் தான் என்பதை. இதற்குச் இச்சமூகத்தின் அங்கமாகிப் போன பெண்களே கூட விதிவிலக்கில்லை.

  பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குப் போனாலும் கூட, மனதளவில் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு இம்மி பிசகாமல் இணங்கித் தான், காலையில் எழுந்து, பொங்கிப் போட்டு, தின்று, வேலைக்கு ஓடி, பிள்ளை பெற்று வளர்த்து, கொஞ்சம் டி.வி. பார்த்துச் சிரித்து, அழுது, செத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.

  தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவேக வளர்ச்சியும் சமூக வலைத்தளங்களும் இந்த விதிகளைச் சற்றே அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

  நம் சுயத்தை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தும் களமாகத் திகழ்வது முகநூல், டுவிட்டர் போன்ற வலைத்தளங்கள். முன்பின் அறியாத நபரிடம், கருத்து ஒற்றுமையினால் மட்டுமே ஏற்படும் நெருக்கமும் நட்புகளும் அலாதியான விடுதலை உணர்வைத் தருபவை. தனிமை உணர்வைப் போக்குபவை. ஆனால் இதிலும் சமூகம் பெண்களைச் சுதந்திரமாக இயங்குவதை விரும்புவதில்லை. எந்நேரமும் ஆபத்துகள் தொடர்வதாகக் கட்டமைத்து அச்சுறுத்துவதன் மூலமே பெண்களைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது.

  தனிமையினாலோ, அங்கீகாரத்துக்கான ஏக்கத்தினாலோ வலையுலகில் நட்பை நாடும் பெண்கள் மீண்டும் இந்தப் பலவீனச் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். மேம்போக்கான எச்சரிக்கைகள் சரியான பலனைத் தராது. தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் மனத்தில் விதைப்பது மட்டுமே இத்தகைய மலினங்களில் பெண்கள் சிக்கித் தவிப்பதைத் தடுக்க ஒரே வழி.

  நிஜவாழ்வில் மனதில் பட்டதைப் பேசவும், தான் விரும்பியபடி வாழவும் சுதந்திரம் இருக்கும் பெண்கள் சைபர் உலகில் ரகசியமாகக் காதல்களை நாடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். அவர்களுக்காக வலை விரித்துக் காத்திருக்கும் கடுவன் பூனைகளும் பெருக மாட்டார்கள்.

  பாதிக்கப்பட்ட நபர் மன உளைச்சலில் கொலை, தற்கொலை செய்வது மாதிரியான படங்களைக் கொண்டாடுவதை சமூகம் கை விட வேண்டும்.

  இப்படி, பெண்கள் மீதான வன்முறை என்பதும், வேலைக்குப் போகும் பெண்கள் என்பதும் காலங்காலமாய்ப் பேசு பொருளாய் இருந்து வருகிறது என்பதே இச்சமூகத்தின் அங்கத்தினராய் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாய் இருக்கிறது. மிதமான பாலியல் சீண்டலிலிருந்து கொடூர வன்முறை வரைக்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவதற்குக் காரணம் ஆணாதிக்கத்தின் அழுகிய வேர்கள் சமூகத்தின் எல்லா இண்டு இடுக்குகளிலும் கிளைத்துப் படர்ந்து இருப்பது தான்.

  படிப்பும், உயர் பதவிகளும் மட்டுமே ஆணின் ஆதிக்கச் சிந்தனையையும் பெண் மனதின் அடிமைச் சிந்தனையையும் லேசில் மாற்றி விடுவதில்லை. அவற்றை நவநாகரிகப் பூச்சுகளின் மூலம் மழுப்பி மறைக்கவே உதவுகின்றன.

  “நீங்க எதுக்கு வேலை செய்யணும், ஆபீசுக்கு வந்தாலே போதும். புரமோஷன் நிச்சயம்!” என்பது போன்ற வழிசல்களை ஒவ்வொரு நாளும் சிரித்து, மழுப்பி, விழுங்கிக் கடக்கும் பெண்கள் எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். அதனால், திறமைக்கும் உழைப்புக்கும் ஓர் ஆணுக்குக் கொடுக்கப்படும் மரியாதையைப் பெற பெண் அதை விட அதிக அளவில் உழைப்பது மட்டுமல்ல, பேச்சு, சிரிப்பு, வேலை செய்யும் நேரம், குறிப்பாக வேலை ஓய்வு நேரத்தைக் கழிக்கும் பாங்கு எல்லாவற்றிலும் அதீத எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

  ஆனால் ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று பேசும் ஆன்மிக குருக்களை வணங்கும் பெண்களுக்கு மதநம்பிக்கைகள் மட்டுமன்றி சாதி இறுமாப்பும் கண்ணை மறைக்கிறது.

  சமூகக் கட்டமைப்பில் உயரத்தில் இருக்கும் பெண்களே சுயமரியாதை இன்றி ஆணாதிக்கத்துக்கு உட்படும் போது அந்த மனப்பான்மை அனைத்து படிநிலைகளிலும் ஆழமாய் உறைந்து போகிறது என்பது தான் உண்மை. இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் மேம்பாடு கண்ட பெண்மையின் சிறப்பு மதித்து போற்றுபவர்களும் உண்டு. இது பரவலாக கடைப்பிடிக்கப்பட்டால் பெண்களைப் பற்றிய குறுகிய சிந்தனை மாறி அடுத்த தலைமுறையினருக்கு மத்தியில் பெண் இனம் சந்திக்கும் பிரச்சினைகளை களைய முடியும்.   

   

  ...
  பெண் இனமே நீ வாழ்க!

  பெண் இனமே நீ வாழ்க!...

  08/03/2018

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்... 

  பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு... 

  ஒரு கவளம் சோற்றை கூட 

  அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..! 

  ஓர் உயிரையே உள்ளே வளரச் செய்கிறது... 

   

  உலக அதிசயம்..! 

  எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் 

  கருவறையை விட பாதுகாப்பான அறையை 

  குழந்தைக்கு யாரால் தர முடியும்..??? 

  இறைவனின் வல்லமைக்கு இதனை விட 

  சான்று வேண்டுமா..??? 

   

  இது பெண்மையின் மறுபிறவி…! 

  பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது, 

  பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! 

  வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் ஆனால் 

  இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!! 

   

  குழந்தையாய்… 

  சிறுமியாய்… 

  குமரியாய்… 

  மனைவியாய் வளரும் உறவு 

  தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..! 

   

  கொஞ்சும் போது 

  தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே 

  தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...! 

   

  நள்ளிரவில், 

  குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல், 

  தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!! 

  தாய்மையின் மகத்துவத்தை எத்தனை 

  தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம். 

   

  ...
  மாமியார் மருமகள் இருவரும் பெண்களே

  மாமியார் மருமகள் இருவரும் பெண்களே...

  05/03/2018

  மாமியார் மருமகள் இருவரும் பெண்களே. மருமகளாக இருந்தவர் மட்டுமே மாமியாராக ஆக முடியும். ஆனால் மருமகளாக இருந்தவர் மாமியாராக மாறும்போது ஏன் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? இந்த உறவின் தொடக்கம் மகன்/கணவன். அதனால் இந்த உறவில் பிரச்சினை என்றால் பாதிக்கப்படுவதும் அவனே.

  மருமகள் தன் கணவன் வீட்டுக்கு வந்தவுடன் அவள் எதிர்பார்ப்பது தாயன்பு. அது மாமியாரிடம் கிடைத்து விட்டால் பிறகு அது மிட்டாய் வீடு தான்! பல தாய்மார்கள் அன்பாய் அரவணைத்து மருமகளை மகளாய் நேசித்து இல்லத்தில் ஒருத்தியாய் அவளை ஏற்றுக் கொள்கின்றனர். 

  திருமணத்தின் முன்பே பிள்ளையின் தாய் பெண் வீட்டாரை மதித்து நடந்தாலே வரப்போகிற மருமகளுக்கு மாமியாரின் மேல் ஒரு மரியாதை பிறக்கும். இந்த பண்பாடு படிப்பினாலோ, சமுக அந்தஸ்தினாலோ வருவது அல்ல. உண்மையான அன்பு இருக்க வேண்டும். மகனின் மனைவி மகிழ்ச்சியோடு இருந்தால் தான், மகன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற புரிதல் மூலம் மட்டுமே இது சத்தியம்.. 

  மருமகளை தனக்கு போட்டியாளராகப் பார்க்கும் தாய்மார்களால் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது. எப்பொழுதுமே மகனுக்கும் தாய்க்கும் ஒரு விசேஷ பந்தம் உள்ளது. அதனால்தான் அவனை ஆள வேறு ஒரு பெண்  வெளியில் இருந்து வந்தவுடன் தாய்க்கு ஒரு பொறாமை கலந்த பயம் வந்து விடுகிறது. 

  மேலும் நான் ஓர் உயரதிகாரி, நீ என் கீழே வேலை பார்ப்பவளே என்ற நோக்கோடு மாமியார் உறவை ஆரம்பித்தாலும் அது மருமகளின் வெறுப்பில்தான் போய் முடியும். சக தோழியாக பாவித்து பொறுப்புகளையும் அதற்கேற்ற அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தால் உறவு வலுப்படும். அதேபோலதான் தந்தைக்கும் மகளுக்கும் ஒரு உன்னத உறவு உள்ளது. ஆனால் வீட்டோடு மாப்பிள்ளை என்று அதிகம் பேர் இல்லாததால் மாமனார் மருமகன் பிரச்சினையை நாம் அதிகம் காண்பதில்லை.

  வீட்டுக்கு வந்த மருமகளும் மாமியாரை தாயை போல நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சுமுகமாகப் போகும். இல்லை என்றால் சிறு பிரச்சினை கூட பூதாகரமாக வெடிக்கும். மருமகளும் புதிய இல்லத்தின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பட்டும் படாமலும் இருக்கக் கூடாது. 

  அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, அனைவரிடத்திலும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. பொறுமை வேண்டும். பெரும்பாலும் மருமகள் மாமியாரை விட அதிகம் படித்து வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மாமியாருக்குத் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. அது வேறு விதத்தில் கோபமாய் வெளிவரும். ஆனால் மாமியாரின் அனுபவ முதிர்ச்சிக்கு மதிப்பளித்து மருமகள் முதலில் இருந்தே தக்க மரியாதை கொடுத்து வந்தால் இந்த சூழ்நிலையை அறவே தவிர்த்துவிடலாம்.

  இதற்கெல்லாம் பாலமாய் அமைய வேண்டியவன் மகன்/கணவன். பல ஆண் மகன்களுக்கு தாயையும் மனைவியையும் தக்க முறையில் கையாள்வதற்கான முதிர்ச்சி இருப்பதில்லை. புதுப் பெண்டாட்டி சொல் பேச்சுக் கேட்டு அலையறான் என்று தாயிடமும், சரியான அம்மா பிள்ளையாய் இருக்கிறாயே என்று மனைவியிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஏண்டா கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று நொந்து போகிறவர்கள் அநேகம் பேர்.

  என் மாமியார் என்னை இப்படித் தான் நடத்தினார், நானும் அதுபோல நடந்து கொள்வதில் தவறில்லை என்று புதிய மாமியார்கள் நினைக்கவும் செய்கிறார்கள். நான் என் வீட்டில் இப்படித் தான் இருந்தேன், இங்கேயும் இப்படித் தான் இருப்பேன் என்று புது மருமகள்களும் நினைக்கிற காலம் இது. நம்முடைய கலாச்சாரத்தில் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து, கலந்து பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுதல் என்பது வழக்கத்தில் இல்லை. 

  பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு வளர்ந்ததால் திருப்பி அவர்களிடம், நீ செய்வது தவறு, வேறு மாதிரி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லத் துணிவு வருவதில்லை. அதே சமயம் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் போது ஒரு குற்ற உணர்வோடே செய்கிறார்கள். இரண்டுமே தேவையில்லை.

  இன்றைய  கால கட்டத்தில் பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தோடும், நிதி நிலைமையில் மகனை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தாலும், மகனுக்குத் திருமணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் வைப்பதே அறிவுள்ள செயலாகும். தூரத்தில் இருக்கும் போது குற்றங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. பிரிவினால் அன்பும் பெருகுகிறது. உறவும் மேம்படுகிறது. 

  பின்னொரு நாளில் இரு சாரார்க்கும் உதவித் தேவை படும் பொழுதில், அதாவது மருமகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான அன்புடையவர்களின் தேவை ஏற்படும் போதோ மாமியாருக்கு மூட்டு வலி வந்து மருமகளின் உதவி தேவைபடும் போதோ அன்புடனும் கௌரவத்துடனும் உதவி பரிமாற்றம் இயல்பாக நடக்கும்.

   

  ...
  பொன்மொழிகள்

  பொன்மொழிகள்...

  27/02/2018

  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

  -ஸ்மித்.

   

  பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்

  -ஜீவெனால்.

   

  பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.

  -வீப்பர்.

   

  நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

  -பெர்னாட்ஷா.

   

  பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.

  -வால்டேர்.

   

  பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.

  -ரஸ்கின்.

   

  பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

  -ஷோப்பன் ஹொபர்.

   

  சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!

  -கோல்ட்டஸ்.

   

  பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.

  -ஆலிவர் வெண்டல்.

   

  பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

  -தாமஸ் பெயின்.

   

  பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

  -பிராங்க்ளின்.

   

  பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.

  -தாமஸ் புல்லர்.

   

  பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை

  -டென்மார்க் பழமொழி.

   

  பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை

  -பாரசீகப் பழமொழி.

   

  பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை

  -ஆஸ்திரேலியாப் பழமொழி.

   

   

  ...
  மின்சாரம் தாக்கினால் முதலுதவி அளிப்பது எப்படி?

  மின்சாரம் தாக்கினால் முதலுதவி அளிப்பது எப்படி?...

  26/02/2018

  வீட்டின் எல்லா பகுதிகளிலும் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவையில் நாம் இருக்கிறோம். கையில் ஏதேனும் ஈரம் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, சில சமயங்களில் நம்முடைய விரல்களில் உள்ள மின் காந்த சக்தியின் காரணமாக, எதிர்பாராமல் மின்சாரம் தாக்கப்படுவதுண்டு.

  அதுபோன்ற சமயங்களில் நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் அதை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். ஆனால் குளியல் அறை மற்றும் சமையல் அறை போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் மிக அதிகமாக இருக்கும். அதனால், மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.

  மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்து கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தை தடை செய்ய வேண்டும்.

  உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, பெரிய, ஈரமில்லாத காய்ந்துபோன மரக்கட்டை அல்லது கயறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித்துடிப்பை பரிசோதிக்க வேண்டும்.

  இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயம் செயல்படத் தூண்ட வேண்டும். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுத்து, பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

   

   

  ...
  யவனனின் பலவீனமே சதுர்யனின் பலம்!

  யவனனின் பலவீனமே சதுர்யனின் பலம்!...

  26/02/2018

  ஓர் ஊரில் சதுர்யன் என்ற சிறந்த பலசாலி ஒருவர் வாழ்ந்து வந்தார். 60 வயதைத் கடந்து விட்டாலும், அந்த சுற்றுவட்டாரத்தில், அவருடன் சண்டையிட்டு வெல்ல யாராலும் முடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட பலசாலிகள் சதுர்யனை வெல்வதற்காக வந்து, தோற்று ஓடியிருக்கிறார்கள். சதுர்யனின் புகழ் நாடெங்கும் பரவியது. ஏராளமான மாணவர்கள் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.

  அந்த ஊருக்கு யவனன் என்ற இளைஞன் புதிதாகக் குடிவந்தான். அவனும் நல்ல உடற்கட்டுடன் பலசாலியாக இருந்தான். சதுர்யன் அளவுக்கு இல்லையென்றாலும் கூட, ஓரளவுக்குப் பெயர் பெற்றவனாகவே இருந்தான். எப்படியாவது சதுர்யனை சண்டையில் வீழ்த்தி, 'மிகச்சிறந்த பலசாலி' என்று பெயரெடுக்க வேண்டும் என்று விரும்பினான் யவனன்.

  ஒருநாள் யவனன், தன் விருப்பத்தை சதுர்யனின் சீடன் ஒருவனிடம் சொல்லி அனுப்பினான்.

  சதூர்யனும் சண்டையிட ஒப்புக்கொண்டார். அந்தநாள் வந்தது. களத்தில் சதுர்யனும், யவனனும் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்கள்.

  சதூர்யனை வெல்வது எளிதல்ல என்பது யவனனுக்குத் தெரியும். மனதளவில் அவரைச் சிறுமைப்படுத்தி, உளவியல் ஊனத்தை உண்டாக்கி வென்றுவிடவேண்டும் என்ற திட்டத்தோடு இருந்தான் யவனன்.

  முதலில், கொடிய வார்த்தைகளால் சதுர்யனைச் சீண்டினான். சதுர்யனோ "யாருக்கோ அந்தச் சொல்" என்பதுபோல் நின்றுகொண்டிருந்தார்.

  அடுத்தாக, கீழே கிடந்த சகதியை அள்ளி சதுர்யனின் மீது வீசினான். எந்தவித சலனமும் இல்லாமல் நிதானமாக இருந்தார் சதுர்யன்.

  'நாம் இவ்வளவு அசிங்கப்படுத்துகிறோம், ஆனாலும் எதுவும் நடக்காதது போல் இருக்கிறாரே? இப்படி இருந்தால் நாம் எப்படி வெல்வது' என்று ஆத்திரப்பட்ட யவனன் சதுர்யனின் மீது காரி உமிழ்ந்தான்.

  அதையும் துடைத்துவிட்டு பொறுமையாக இருந்தார் சதுர்யன். எரிச்சலுற்ற யவனன் அவரைத் தாக்க ஆரம்பித்தான்.

  அதற்காகவே காத்திருந்தவராக யவனனின் அத்தத் தாக்குதல்களை எளிதாகச் சமாளித்துப் போட்டியில் வென்றார் சதுர்யன்.

  சதுர்யனின் சீடர்கள் கொண்டாடினர். ஆனாலும் அவர்களுக்கு தன் குருவின் செயல்பாடுகளில் குழப்பமும், கேள்வியும் இருந்தது.

  "எவ்வளவு பெரிய பலசாலி நீங்கள். ஆனால், அந்த இளைஞன்  உங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தியும், ஏன்  அமைதியாக இருந்தீர்கள்?"

  மிகவும் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார்  சதுர்யன்,

  "உங்களுக்கு ஒருவர் நூறு பொற்காசுகள் பரிசாகத் தருகிறார். ஆனால், அதை நீங்கள் அவரிடம் வாங்கிக் கொள்ளவில்லை. இப்போது அந்த பொற்காசுகள் உங்களிடம் இருக்குமா? இல்லை அவரிடம் இருக்குமா?"

  "வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நம்மிடம் எப்படி இருக்கும். அவரிடம்தான் இருக்கும் குருவே ".

  "பிறர் உங்களைக் கடும் சொற்களால் திட்டினாலும், வேறு வகைகளில் அவமானப்படுத்தினாலும், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான் உங்களுக்கு வந்து சேரும். இல்லையென்றால் அது உங்களைச் சேராது" என்றார் அமைதியாக.

  "சரி குருவே! போட்டியில் உங்கள் உத்தி வித்தியாசமாக இருந்தது. அந்த இளைஞன் சுதாரிக்கவியலாத அளவுக்கு நுட்பமாக செயல்பட்டீர்கள். அதுபற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்"

  "சண்டையிடும்போது முதலில் எதிராளியின் பலவீனத்தை அறிந்து கொள்ளவேண்டும். 'எதிராளியை தாழ்த்திப்பேசி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம், அதுதான் தன் பலம்' என்று நம்பிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

  ஆனால், உண்மையில் அதுதான் அவனது பலவீனம். அதை நான் எளிதாக உணர்ந்துகொண்டேன். இறுதியாக அவன் தன்னளவில் நம்பிக்கை குறைந்து சோர்ந்து போயிருந்தான். அதனால்தான் என்னால் எளிதாக வெல்ல முடிந்தது" என்றார்.

   

  "குருவே நீங்கள் உடலளவில் மட்டும் அல்ல, மனதிலும், அறிவிலும்கூட பலம் வாய்ந்தவர். அதனால்தான் யாராலும் இன்னும் உங்களை வெல்ல முடியவில்லை"! என்று கூறி அவரது பாதம் தொழுதார்கள் சீடர்கள்!

  ...