பிப்ரவரி 25 தொடங்கி சுகமாய் சுபுலக்ஷ்மி திரைப்படப் பாடல்களை கேட்கலாம்...

பிப்ரவரி 25 தொடங்கி சுகமாய் சுபுலக்ஷ்மி  திரைப்படப் பாடல்களை கேட்கலாம்

22/02/2018

கார்த்திக் ஷாமலன் 'மெல்ல திறந்தது கதவு', 'என் விட்டு தோட்டத்தில்', தற்போது 'சுகமாய் சுபுலக்ஷ்மி' மே 17-இல் திரைக்கு வருகிறது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் நடைபெறுகின்றது. மலேசிய திரையுலக நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமேஷன் மணிமாறன் மற்றும் நிரோஷன் இசையமைப்பில் மொத்தம் 6 பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கதையோடு இன்னும் அதிக சுவாரஸ்யமாக பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சரேஷ், புனிதா சண்முகம், பாக்கியா, கர்ணன், குபேன் என பலர் நடித்துள்ளனர். திரையில் நாம் வில்லனாகப் பார்த்த குபேன், இத்திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதிய குபேனை நீங்கள் நிச்சயமாக பார்க்கலாம் என கார்த்திக் ஷாமலன் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் இருக்கும் 'சுகமாய் சுபுலக்ஷ்மி' திரைப்படத்தின் பாடல்களுக்காக காத்திருப்போம்…..

 

...

அன்பர்கள் தினக் கொண்டாத்தில் கலைஞர்கள்

அன்பர்கள் தினக் கொண்டாத்தில் கலைஞர்கள்...

22/02/2018

கடந்த பிப்ரவரி 14இல் அன்பர்கள் தினத்தை நாம் கொண்டாடினோம். அன்பர்கள் தினம் என்றாலே நமது கலைஞர்களில் ஒரு சிலரை மறக்க முடியாது. ஏனென்றால் நாட்டில் கலைஞர்களாக இருந்து, இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அவர்களில் ஒரு சில கலைஞர்களை இப்போது பார்க்கலாம்.

அகோந்திரன் பானுமதி தம்பதியினர்

இருவரும் கலைத்துறையில் பிரபலமான நடிகர்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் இவர்களை அனைவருக்கும் பிடிக்கும். நடிப்புத் துறையைத் தவிர்த்து, பல நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.

லூர்துநாதன் சுகன்யா தம்பதியினர்

நாட்டின் பிரபல பாடகர்களாக இருக்கும் இவர்களின் திருமணம் அதிகமாக பேசப்பட்டது. காரணம் தங்களின் திருணத்திற்காக “அன்பே எனதன்பே” எனும் பிரத்தியேகப் பாடலை தயாரித்தனர். வேறெந்த கலைஞர்களும் செய்யாத ஒரு புதிய முயற்சியாக இப்பாடல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, இவர்களின் இரண்டாவது பாடலான “உன் காதலால்” நல்ல வரவேற்பையும் பெற்றது.

பென் ஜி ஷீலா பிரவினா தம்பதியினர்

நடிகர்களாக இருந்து இல்லற வாழ்க்கையில் இணைந்த இந்த ஜோடி, கடந்த ஜனவரி 21ஆம் தேதி திருமண நிறைவு நாளைக் கொண்டாடினர். பென் ஜி தொடர்ந்து பல படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். நாட்டில் பலருக்கும் பிடித்த நடிகையாக இருந்த ஷீலா பிரவினா தயாரிப்பு பணிகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

போய் ராஜ் மதில்டா ராஜ்

இவர்கள் இருவருக்கும் இசை மேல் அதிக ஈடுபாடு, அதுவே இவர்களை இணைத்துள்ளது எனலாம். பினாங்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் தலைநகரில் வசித்து வருகின்றனர். அடுத்து பல பாடல்களைத் தயாரிப்பதில் இந்த ஜோடி மும்முரம் காட்டி வருகிறனர்.

“நண்பா” விஜய் ரேவதி

நமது கலைத்துறையில் கலைஞர் ஒருவர், வானொலி அறிவிப்பாளரை கரம் பிடித்தது, முதல் முறை எனலாம். “நண்பா” விஜய் அனைவருக்கும் அறிமுகமானப் பாடகர். ரேவதி, ராகாவில் முன்னிலையில் இருக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றார். அன்பர்கள் தினத்தில் தங்களின் 13ஆவது பதிவுத் திருமண நிறைவு நாளைக் கொண்டாடியிருந்தனர்.

சதிஸ் நடராஜன் ஷாலினி பாலசுப்ரமணியம்

'கீதையின் ராதை' திரைப்பட வாயிலாக பலருக்கும் இந்த ஜோடி அறிமுகம் கண்டது. இவ்விருவரும் திரைப்படத் துறையில் பல லட்சியங்களோடு வந்தனர். எதிர்பார்த்த வெற்றிகளை இவர்கள் பெறத் தொடங்கியுள்ளனர். இவர்களின் முயற்சியில் 'திருடாதே பாப்பா திருடாதே' திரைப்படத்தை இவ்வருடம் எதிர்பார்க்கலாம்.

டேனிஸ் குமார் விமலா பெருமாள்

கலைஞர்களின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்த ஜோடியை நீங்கள் பார்க்கலாம். விமலா பெருமாள் இயக்கும் படங்களில் டேனிஸ் நடிப்பது வழக்கம். சந்திப்பு ஒன்றில் டேனிஸ் “என்னை அழகாக செதுக்கி, நிர்வகிப்பது தனது மனைவிதான்” என்றார். 'விளையாட்டுப் பசங்க', 'வெட்டிப் பசங்க'. 'வேற வழி இல்லை' போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த Veedu Production-இன் அடுத்த வெளியீடாக வருகிறது 'வெடிகுண்டு பசங்க'. மே மாதத்தில் இத்திரைப்படத்தை எதிர்பார்க்கலாம். முனைவர் விமலாவிற்கு நமது சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

 

...
இவ்வாரக் கலைஞர் இளைஞர்களின் கனவு நாயகன்

இவ்வாரக் கலைஞர் இளைஞர்களின் கனவு நாயகன்...

22/02/2018

தனது “Instagram’இல் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாடறிந்த பாடகரும், நடிகருமான முகேன் ராவ் “எம்.ஜி.ஆர்” பதிவு செய்திருந்தார். பல இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் இவர், மலேசிய சினிமாவில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் அறிமுகம் கண்ட இவரின் “போகிறேன்” பாடலை “You Tube” இல் 1.6 மில்லியன் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தேவேந்திரன் அருணாட்சலம் இயக்கத்தில் “கோரா” திரைப்படத்தில் முகேன் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அதன் வெளியீட்டிற்காக காத்திருப்போம். அவரின் அண்மைய புகைப்படம் இதோ உங்களுக்காக….

 

...
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார் மலேசிய கலைஞர் சித்தார்த்த சங்கர்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார் மலேசிய கலைஞர் சித்தார்த்த சங்கர்...

22/02/2018

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் மலேசிய கலைஞர் சித்தார்த்த சங்கர் இவ்வாரம் நமது கவனத்தை ஈர்த்துள்ளார். தலைநகரைச் சேர்ந்த இவர், 2016 தொடங்கி சென்னையில் வசித்து வருகிறார். 2016இல் விஜய் அந்தோனி நடித்த “சைத்தான்” திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து நடிகர் சிபிராஜ் கதாநாயகனாக நடித்த “சத்யா” திரைப்படத்தில் வில்லான நடித்திருந்தார். தற்போது ஜி.வி. பிரகாஸ் குமார் நடிக்கும் “ஐங்கரன்” திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கும் சித்தார்த்த சங்கர், திரைப்பட வில்லனாக அதன் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஜூன் மாதத்தில் “ஐங்கரனை” எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

அதிகமான வாய்ப்புகளை சினிமாவில் பெற்றுக்கொண்டிருந்தாலும் கூட, கதைக்கு தாம் அதிக முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்த இவர், அதன் மூலம் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்த முடியும் என்றார். பல கனவுகளோடு இருக்கும் மலேசிய கலைஞர் சித்தார்த்த சங்கர், எதிர்காலத்தில் மலேசியாவிலும், இந்தியாவிலும் திரைப்படங்களை தயாரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்.

"தமிழக சினிமாவில் இருக்கும் நீங்கள் ஏன் மலேசிய சினிமாவிற்கு இன்னும் வரவில்லை?" என்று கேட்டிருந்தேன். அதற்கு “ மலேசிய திரைப்படங்களில் நான் நடிக்கத் தயார். எனக்குப் பிடித்த கதை / கதாபாத்திரம் கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன்” என்றார். மலேசிய இயக்குனர்கள் தங்களின் அடுத்த திரைப்படத்திற்கு வில்லனை தேடிக்கொண்டிருந்தால், இவரை அணுகலாம். வில்லனா? அது சரி ஹீரோ போல இருக்கும் சித்தார்த்த சங்கர், விரைவில் கதாநாயகனாகவும் நடிப்பார் என எதிர்ப்பார்ப்போம்.

                                                                              

...
சித்தியவான் சித்தர்  குடிலில்  வர்மகுரு பாசுக்கண்ணா சொற்பொழிவு 24.2.2018

சித்தியவான் சித்தர் குடிலில் வர்மகுரு பாசுக்கண்ணா சொற்பொழிவு 24.2.2018...

22/02/2018

ஆயுள் முழுதும் ஆரோக்கியம் பேணுவோம் எனும் சுலோகத்தோடு வலம் வரும் தமிழ்நாடு கண்ணா அறக்கட்டளையின் தோற்றுனரும் வர்ம குருவும் முத்திரை நிபுணருமான டாக்டர் பாசுக்கண்ணா மலேசியா வந்துள்ளார். வர்மக்கலையின் ஒரு கூறாகத் திகழும் முத்திரைகள் மூலம் நமது சகல நோய்களையும் நாமே குணப்படுத்திக் கொள்ளலாம் என அறிதியிட்டுக் கூறும் இவர் சொற்பொழிவுகளையும் பயிலரங்குகளையும் நோய் சிகிச்சை முறைகளையும் அளித்து வருகிறார்.

சித்தியவான் சித்தர் குடில் ஏற்பாட்டில் வர்மகுரு டாக்டர் பாசுக்கண்ணாவின் சொற்பொழிவு நாளை 24.2.2018 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு சித்தியவான் சித்தர் குடில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (எண் 31, 2ஆவது மாடி, தாமான் செத்தியா, ஜாலான் கம்போங் கோ, சித்தியவான். அம் வங்கி வரிசை)

நமது விரல்களே மருத்துவர் எனும் தலைப்பில் நமக்கு ஏற்படும் சிறு நோய் முதல் பெரு நோய் வரையிலான அனைத்திற்கும் நமது விரல்களைக் கொண்டு நாமே சுயமாக சிகிச்சை அளித்துக் கொள்ளும் அற்புதக் கலையை செய்முறை விளக்கத்துடன் வழங்க வருகிறார். அதுமட்டுமன்றி மாணவர்களின் நினைவாற்றல் வளர, இல்லறம் சிறக்க, தொழிலில் வெற்றி பெற, ஆன்மீகத்தில் உயர்வு பெற, அனைத்திற்கும் தனித் தனியான முத்திரை ரகசியங்களை விளக்குவார். இந்த முத்திரைகள் பிடிக்கும் முறைகள், கால நேரம், போன்றவற்றை உள்ளடக்கிய கண்கவர் நூலை படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.

ஆகவே சுற்று வட்டாரப் பொதுமக்கள் இந்நிகழ்வில் தவறாது வந்து கலந்து பயனடையுமாறு அன்புடன் அழைகின்றோம். மேல் விபரங்களுக்கு எஸ். கிருஷ்ணன் 019-9213011 தொடர்பு கொள்ளவும்.

 

...
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக்கூட்டம் 25.2.2018

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக்கூட்டம் 25.2.2018...

22/02/2018

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக்கூட்டம், வரும் 25.2.2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, கோலாலும்பூர் விசுமா துன் சம்பந்தன், தான்சிறி கே.ஆர். சோமா கூட்ட அரங்கில், கழக தேசியத் தலைவர் நாக.பஞ்சு அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனையில் தோன்றிய பகுத்தறிவுக் கொள்கை என்பது மாந்தநேய உணர்வோடு: சமுதாயத்தில் காணப்படும் பொருத்தமற்ற நடவடிக்கைகளை களைந்து மக்களை அறிவும், மானமும் பெற்று சிறந்தோங்க நல்வழிப்படுத்த அறிவூட்டும் பணியாகும்.

 

அந்தப் பணியினை கடந்த காலங்களில் மலேசியாவில் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றிருந்த இயக்கங்கள் சரியாகவே செய்து வந்துள்ளன என்றாலும் நமது நாட்டில் இப்பொழுது மலிந்து, மலிவாகக் காணப்படும் மூடநம்பிக்கை: ஜாதிய சிந்தனை போன்றவற்றை தோலுரிக்கும் பணி நமக்கு இக்காலகட்டத்தில் அதிகமாக தேவை என்பதால் அதனை மாந்தநேயத் திராவிடர் கழகம் உடனடியாக முடுக்கிவிட முனைந்துள்ளது.

 

எனவே, நடைபெறும் மத்திய செயலவையில் நல்ல செயல் திட்டங்களைக் கொண்டுவரவிருப்பதால், கூட்டத்திற்கு, கழக மத்திய செயலவை உறுப்பினர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தவறாது, மறவாது வந்து கலந்து மாந்தநேயத் திராவிடர் கழக வளர்ச்சிக்கும் பயனான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென பொதுச்செயலாளர் அன்பரசன் சண்முகம் அன்போடு கேட்டுக்கொள்கிறார்.

 

...
தைப்பிங் ஶ்ரீ சீரடி சாய்பாபா மையம் ராமநவமி திருவிழா 25.2.2018

தைப்பிங் ஶ்ரீ சீரடி சாய்பாபா மையம் ராமநவமி திருவிழா 25.2.2018...

22/02/2018

வரும் 25.2.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம், தைப்பிங் ஶ்ரீ சீரடி சாய்பாபா மையத்தில் வருடாந்திர ராமநவமி திருவிழா நடைபெறவிருக்கிறது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தொடர்ந்து 10.00 மணிக்கு சீரடி சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகமும் தொடர்ந்து கும்ப விசேஷ பூஜையும் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். இரவு 7.00 மணிக்கு மேல் பாபா ரதம் வீதி வலம் வருதல் நடைபெறும். ரதம் ஜாலான் பசாரிலிருந்து புறப்படும்.

...
குறை ஒருபோதும் வெற்றிக்கு தடையில்லை!

குறை ஒருபோதும் வெற்றிக்கு தடையில்லை!...

22/02/2018

'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?' ஒரு காலத்தில் புழங்கிய பழமொழி இது. கால்கள் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளியால் மரம் ஏற முடியாது... அவனால், விரும்பிய தேனை எடுக்க முடியாது, ருசிக்க முடியாது என்பது இதன் பொருள்.  சரி... நடப்புக் காலத்துக்கு வருவோம். இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் தடகள வீரராக முடியுமா? அது சாத்தியமா? சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறது ஜெரால்டு மெட்ரோஸ்-ன் (Gérald Métroz) கதை.

ஸ்விட்சர்லாந்திலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமம் செம்பிராஞ்சர் ( Sembrancher). அந்த கிராமத்தில், 1962ஆம் ஆண்டு பிறந்தார் ஜெரால்டு மெட்ரோஸ். வீட்டுக்குப் பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன். ஜெரால்டுக்கு அப்போது இரண்டு வயது. தத்தித் தத்தி நடக்கும் வயது. எதையும் மோதிப் பார்த்துவிடுகிற, அறிந்துகொள்ளத் துடிக்கிற பச்சை மண் பருவம். நெருப்பைத் தொட்டால் சுடும், பனிக்கட்டியைத் தொட்டால் விரல்கள் சில்லிடும்... என அறிந்துகொள்கிற பருவம்.

ரயிலும் அந்தக் குழந்தைக்கு ஒரு விளையாட்டாகிப் போனது; அதுவே வினையாகவும் ஆனது. வீட்டில் பெற்றோரும் மற்றோரும் கண்டுகொள்ளாத ஒரு தருணத்தில் குழந்தை ஜெரால்டு அருகிலிருக்கும் தண்டவாளத்துக்கு அருகே போனது; சரியாக அதே நேரத்தில் வந்தது ரயில்.

தண்டவாளத்துக்கு நடுவே மாட்டிக்கொண்ட குழந்தை ஜெரால்டின் இரண்டு கால்களும் துண்டாகிப்போயின; கிட்டத்தட்ட இடுப்புக்குக் கீழே வெட்டிப்போட்டுவிட்டது ரயில். அதே நேரத்தில், குழந்தையின் உயிருக்கு எதுவும் ஆபத்து நேரவில்லை. ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது ரயில். விபத்தில் சிக்கிய ஜெரால்டை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். எப்படியோ உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்; கால்கள் போனது, போனதுதான்.  

கொஞ்சம் வளர்ந்ததும் ஜெரால்டு மரக்கால்களைப் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகினார். சின்ன வயதிலிருந்தே, தன் சக சிறுவர்களைப்போல் ஆடி, ஓடி விளையாட வேண்டும் என்கிற தீராத ஆர்வம் ஜெரால்டுக்கு. விளையாட்டு... அதன் மேல் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு, பிரியம், வெறி.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவுக்கு விளையாட்டை நேசித்தார் ஜெரால்டு. கால்கள் இல்லையென்றால், விளையாட முடியாதா என்ன? இந்த எண்ணமே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. செயலிலும் இறங்கினார்.

அவருடைய பத்தாவது வயதில் தன் செயற்கைக் கால்களுடன் ஹாக்கி விளையாட்டில் ஒரு கோல்கீப்பராகக் களமிறங்கினார். அதேபோல் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டம் (Wheelchair basketball) என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் கலந்துகொண்டு சாதனை படைத்தார். சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற முக்கியக் காரணமாகவும் இருந்தார். கடினமான வாழ்க்கையை நிர்வகிக்கப் பழகிக்கொண்டார் ஜெரால்டு. தனக்குக் கால்கள் இல்லை, தான் உடல் ஊனமானவன் என்பதை மறக்கக் கடுமையாக முயற்சி செய்தார்.

அப்போது ஜெரால்டுக்கு 25 வயது. கனடாவுக்குக் கிளம்பினார்... மன உறுதியோடு. வீல்சேர் டென்னிஸில் (Wheelchair Tennis) விளையாடக் கடுமையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருடைய உழைப்பு வீண் போகவில்லை. நான்கு முறை `சுவிட்சர்லாந்து சாம்பியன்’ பட்டம்; 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் விளையாடத் தேர்வு. இரு கால்களையும் இழந்த ஒரு மனிதர் தடகள விளையாட்டுகளில் இவ்வளவு சாதனைகளைப் படைப்பதென்பது அபூர்வம்.

ஜெரால்டு ஒரு வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் மேனேஜராகப் பின்னாளில் வலம்வந்தார். சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். தன் வாழ்க்கையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதினார். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்கிற எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை. பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்தார். பிரமாதமான உரைகளை நிகழ்த்தினார்.

தன் உடல் குறைபாட்டை முழுவதுமாக உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொண்டும் இருந்தார். அதே நேரம், தடகளத்தில் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்றும் விரும்பினார். அதைச் செய்தும் காட்டிவிட்டார். உற்சாகம், ஊக்கம், தன்னம்பிக்கை இருந்துவிட்டால் யாரும், எந்தச் சாதனையையும் புரியலாம் என்பதற்கு ஜெரால்டு மெட்ரோஸின் கதை மிகச் சிறந்த உதாரணம்!

...
சரும வறட்சியைத் தடுக்கும் பழங்கள்

சரும வறட்சியைத் தடுக்கும் பழங்கள்...

22/02/2018

சரும வறட்சி என்பது மிகவும் அதிகமாக பனி பொழியும் போதும் பருவநிலை மாறும் போதும் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே வறட்சியான சருமம் இருக்கும். இத்தகையவர்கள் தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாவிட்டால், அவர்களது சருமமே அசிங்கமாக காட்சியளிக்கும். சிலர் சரும வறட்சியைத் தடுக்க தினமும் எண்ணெயை பயன்படுத்துவார்கள். என்னதான் எண்ணெய் பயன்படுத்தினாலும், அந்த எண்ணெயை சிலரது சருமம் முற்றிலும் உறிஞ்சி, மீண்டும் வறட்சியை உண்டாக்கும்.

இத்தகையவர்கள் தங்களது சருமத்திற்குப் போதிய பராமரிப்புக்களை அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி கொடுக்காமல் சரும வறட்சியை விட்டுவிட்டால், அதனால் சருமத்தில் வெடிப்புக்கள் வர ஆரம்பித்து, காயங்களை உண்டாக்கி, வேறு சில பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவிடும். சரி, வறட்சியான சருமத்தினர் எம்மாதிரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழக் கலவயை போட்டு வந்தால், நிச்சயம் வறட்சியைத் தடுக்கலாம். உங்களுக்கு எந்த பழத்தை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இக்கட்டுரையில் சரும வறட்சியைத் தடுக்கும் பழங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன.

மாதுளை

* ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 தேக்கரண்டி மாதுளை சாற்றைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் டோனரைப் பயன்படுத்த வேண்டும்.

* இந்த கலவையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

ஆரஞ்சு

* ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

* இந்த கலவையை வாரந்தோறும் பயன்படுத்தினால், சரும வறட்சியால் அசிங்கமாக தோல் உரிந்து காணப்படுவதைத் தவிர்க்கலாம்.

வாழைப்பழம்

* ஒரு கிண்ணத்தில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

* இந்த முறையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சரும வறட்சி அகலும்.

ஆப்பிள்

* ஆப்பிளை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முகத்தில் அந்த கலவையைத் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.

அவகேடோ

* அவகேடோ பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த பழக்கூழை முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

திராட்சை

* ஒரு கையளவு திராட்சையை எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இது போன்ற கலவையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

பேரிக்காய்

* பேரிக்காயை நன்கு அரைத்துக் கொண்டு, அத்துடன் 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

* இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

* ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த கலவையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

 

...
புகைப்பழக்கம் இதயத்துடிப்பில் தடங்கலை ஏற்படுத்துமா?

புகைப்பழக்கம் இதயத்துடிப்பில் தடங்கலை ஏற்படுத்துமா?...

22/02/2018

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களை புகைப்பழக்கம் வெகுவாய் பாதிக்கும். புகை நுரையீரலை அடைந்ததுமே இதயம் விரைந்து செயல்படத் துவங்குகிறது. நாடித்துடிப்பும் அதிகரிக்கும். சிகரெட்டில் உள்ள நிகோட்டின் என்னும் நச்சுப்பொருளே இதற்குக் காரணம். ஒரு கிராம் எடை புகையிலை கொண்ட ஒவ்வொரு சிகரெட்டில் இருந்தும் ஏறத்தாழ 9 மி.கிராம் நிக்கோட்டின் பெறப்படுகிறது. பில்டர் சிகரெட் என்றாலும் மிகச்சொற்ப அளவு நிகோட்டினே இதில் வடிகட்ட முடிகிறது.

நிக்கோட்டினால் இதயத்துடிப்பில் தடங்கலும், மாறுதலும் ஏற்பட்டு இதயம் சீரின்றி துடிக்கத் தொடங்குகிறது. இதனால் ஹார்ட் அட்டாக், மூளைத்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் நிக்கோட்டின் ரத்தத்தை ரத்தக் குழாய்க்குள்ளேயே உறைய செய்கின்ற சக்தியுடையது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களது ரத்தக்குழாய்கள் ஏற்கெனவே சுருங்கி இருக்கின்ற போது ரத்தம் உறைவதால் எளிதில் அடைப்பு ஏற்படும். மேலும் நிகோட்டினானது உடலினுள் கேட்டே கொலாமின்ஸ் என்ற ரசாயனப் பொருளை அளவுக்கு அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது இதயத்துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கூட்டும் தன்மை கொண்டது.

மேலும் புகையில் உள்ள கார்பன்மோனாக்சைடு ரத்தத்தில் சென்று படிகிறது. 4 முதல் 5 மடங்கு புகைப்பவர்களின் ரத்தத்தில் இந்த நச்சுவாயு அதிகம் இருக்கும். கார்பன் மோனாக்சைடு மாரடைப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. புகைப்பழக்கம் உள்ள பலரும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதைத் தூக்கி வீசியுள்ளனர். எனவே உங்களாலும் இப்பழக்கத்தை விட்டொழிக்க முடியும். இன்றே முயற்சி செய்யுங்கள்.

...
ஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்

ஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்...

22/02/2018

உலகில் அனைத்து பணிகளையும் மனிதர்களை விட விரைவாகச் செய்ய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ரோபோக்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ரோபோட்டை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.

அந்நாட்டில் உள்ள வல்லாடோலித் பல்கலைக்கழகம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டிடம் நாம் சந்தேகப்படும் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டறியப்படும். இந்த ரோபோட்டில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும்.

அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதேபோல் அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு, அவர் பேசியது, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோட் சரிபார்க்கும். இதன்மூலம் ஊழல் கண்டுபிடிக்கப்படும்.

இந்த ரோபோட் தவறு எவ்வளவு நடந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று சதவிகிதம் கொடுக்கும். 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவில் ஸ்பெயினில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் மெமரியில் ஏற்றப்பட்டுள்ளது.

...
தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018

தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018...

22/02/2018

மலேசிய நால்வர் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த 17.2.2018 சனிக்கிழமை தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018 பிரிக்பீல்ட்ஸ், ஸ்கோட் சாலை, கந்தசாமி கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. சுமார் 800 திருமுறை அடியார்கள் கலந்து கொண்டனர்.

      இம்மாநாடு மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டது. திருமுறைகள் அடியார்களால் பல்லக்கில் சுமக்கப் பட்டு மண்டபத்திற்குள் எழுந்தியருளப்பட்டது. அதன் பிறகு பேரொளி காண்பிக்கப்பட்டு மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவர் திரு பாலகிருஷ்ணன் கந்தசாமி அவர்களுடைய. தலையுரையில் இறைவனே திருமுறைகள் ; திருமுறைகளே இறைவன் என்று தொடங்கித் திருமுறைகளை ஓத வேண்டும்; திருமுறைகள் கூறியதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று வந்திருத்த அடியார் பெருமக்களைக் கேட்டுக் கொண்டார். இம்மாநாடு வெற்றி பெற அரும்பாடு பட்ட மன்ற உயர்செயற்குழுவினர், இளைஞர்-மகளிர் பகுதியினர், நன்கொடையாளர்கள், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

      தொடர்ந்து மாநாட்டில், பாலயோகி சுவாமிகள் அருளாசியும் ஆசியுரையும் வழங்கினார். சுவாமிகள் தமது உரையில் அற்புதமான தமிழ் மறையாம் திருமுறை மாநாட்டை ஏற்பாடு செய்த மலேசிய நால்வர் மன்றத்தை வெகுவாகப் பாராட்டினார். நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற இடர்களை நீக்குவதற்குப் “பரிகாரம் தேவையில்லை பாராயணம் ஒன்றே போதுமே” என்று சுவாமிகள் கூறிய போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. சுவாமி அவர்கள் இவ்வாறு கூறி தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018ஐ அருளாசியோடு தொடக்கி வைத்தார்.    

அதனை அடுத்து, கண்ணுக்கு இனிய திருமுறை பரதம் திரு.பரஞ்சோதி முத்துவேல் அவர்களால் வழங்கப்பட்டது. திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட நிகழ்ச்சியைத் தம் நட்டியத் திறமையால் காண்போரின் கண் முன்னே கொணர்ந்தார். அடுத்ததாக 100 சமய ஆசிரியர்களுக்கு அங்கீகார நற்சான்றிதழ் வழங்கும் விழா. கடந்த 2016, 2017இல் பயிற்சியை நிறைவு செய்த 100 ஆசிரியர்களுக்குத் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் திருக்கரங்களால் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் ஒவ்வொருவரும் மலேசிய நால்வர் மன்றம் நடத்திய பல்வேறு மதிப்பீடுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். மலேசிய நால்வர் மன்றத்தின் நோக்கமாகிய “வீட்டுக்கொரு சமய ஆசிரியரை உருவாக்குவது”. அதன் அடிப்படையில் இவர்கள் குறைந்தது தங்கள் வீடுகளில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகளையும் பூசைகளையும் முன்னெடுத்துச் செய்வதில் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

தொடர்ந்து, தவத்திரு பாலயோகி சுவாமிகள் மலேசிய நால்வர் மன்றத்தின் “ஞானப்பழம்” என்ற ஆங்கிலப் பதிப்பு நூலையும் பேராசிரியர் கி சிவகுமாரின் பெரிய புராணத் தொடர்ச்சொற்பொழிவின் குறுந்தட்டினையும் வெளியீடு செய்தார்.

மேற்கண்ட அங்கங்களைத் தொடர்ந்து, சொற்பொழிவுகள் நடைபெற்றன. முதலில் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி திருஞானசம்பந்தரின் “ஆணை நமதே” என்ற தலைப்பில் தமது பொழிவினை நிகழ்த்தினார். அப்பொழிவில் திருஞானசம்பந்தர் இறைவனின் ஆணையே தம் மூலமாக வருகின்றது என்று கூறுகின்றார். அதனை ஒவ்வொரு நாளும் ஓதி ஒழுக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகச் செந்தமிழரசு பேராசிரியர் கி. சிவகுமாரின் ஐயா பொழிவு நடைபெற்றது. திருநாவுக்கரசரின் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கும் உலகிற்கும் தொண்டாற்றுவதுதான் நமது கடமை. திருநாவுக்கரசு கூறியது போல இறைவன் அளித்த அங்கங்கள் அனைத்தும் அவனுக்கே பணி செய்ய வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை முன் வைத்தார்.

பேராசிரியர் அவர்களே மூன்றாவது சொற்பொழிவாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்ற தலைப்பில் தமது பொழிவினை ஆற்றினார். சாப்பிடும் மற்றொன்று பேசும். பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இல்லையென்றால் பல்வேறு சிக்கலில் உள்ள நம்மைக் கட்டுப்படுத்த “நமச்சிவாய” என்ற இறைவன் திருப்பெயரை உச்சரிக்க வேண்டும். சும்மா இருக்கும் பொழுதெல்லாம் உச்சரிக்க வேண்டும் அப்பொழுதுதான் தன்னிலை மறந்து கிடந்தாலும் இந்த நா இறை நாமத்தை உச்சரிக்கும் என்று கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகச் சிறப்பு வருகையாளராக டத்தோ ஸ்ரீ மு.சரவணன், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் தமதுரையில், மலேசிய நால்வர் மன்றத் தலைவர் திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்குத் தமது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது மெய்யன்பர்கள் திரளாக வருவார்கள் என்பது இம்மாநாடே நல்ல சான்று என்று கூறி தமது பங்காக ரிம 20,000 வழங்குவதாக வாக்குறுதியளித்து நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். உடன் “நால்வர்” என்ற நூலையும் மலேசிய நால்வர் மன்றத்தின் அகப்பக்கத்தையும் வெளியிட்டும் திறந்தும் வைத்தார்.

அதிகாரப்பூர்வத் தொடக்கத்திற்குப் பிறகு இறுதிச் சொற்பொழிவு நடைபெற்றது. மாணிக்கவாசகரின் “அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற தலைப்பில் திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் இப்பொழிவினை ஆற்றினர். பார்த்தால் எண்ணி எண்ணி கல் மனம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும். அந்தக் கரைக்கின்ற வேலையை திருமுறைகள் செய்யும். வந்திருந்த ஒவ்வொருவரும் திருமுறைகளை ஓத வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை முன் வைத்துத் தமதுரையை நிறைவு செய்தார்.

மலேசிய நால்வர் மன்றம் நடத்தும் இந்து சமய ஆசிரியர் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் திரு.பாலகிருஷ்ணன் கந்தசாமி (012-2347495), திரு பூபதி குப்புசாமி (012-7727841) என்பவர்களுடன் தொடர்பு கொள்க.

...
புந்தோங் மேம்பாட்டு சந்திப்பில் டத்தோஸ்ரீ ஸம்ரி

புந்தோங் மேம்பாட்டு சந்திப்பில் டத்தோஸ்ரீ ஸம்ரி...

22/02/2018

புந்தோங், பிப் 23: தேசிய முன்னணி அரசாங்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது. ஆகவே பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் அவர்கள், மக்கள் நல மேம்பாட்டு சந்திப்பு நிகழ்வில் கிந்தா மாவட்ட வசதி குறைந்த இந்திய சமுதாய அன்பர்களுக்கு காசோலையும், உணவுப் பொட்டலங்களும் வழங்கி உதவினார்.

இந்த மக்கள் நல மேம்பாட்டு சந்திப்பு நிகழ்வு கடந்த 21.2.2018 புதன்கிழமை, மாலை 5.00 மணிக்கு புந்தோங் 5, serbaguna (அனேகரக) மண்டபத்தில் நடந்தேறியது. இந்நிகழ்வில் பேரா மாநில மந்திரி பெசார், வசதி குறைந்த அன்பர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், காசோலையும் வழங்குவதன் வாயிலாக அக்குடும்பத்தின் சுமையை குறைக்கலாம் என்றார். அத்துடன் அவர் இந்நிகழ்வில் உணவு பொட்டலத்தின் தரத்தை வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மைபிபிபி புந்தோங் வட்டார தலைவர் டத்தோ நாரான் சிங் , மைபிபிபி புந்தோங் வட்டார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செபஸ்தியர், மைபிபிபி புந்தோங் வட்டார மகளிர், இளைஞர், புத்ரி பகுதியினர், பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நாட்டில் இன, மத பாகுபாடின்றி மனித நேயத்துடன் உதவ தேசிய முன்னணி அரசாங்கத்தின் வழி முன் வருவோம் என்றார். எனவே, பொதுமக்கள் வற்றாத ஆதரவை தேசிய முன்னணிக்கு வழங்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி : ல. லலிதாஅம்பிகை

         

 

...