ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  வெற்று வாக்குறுதிகளை நம்பி தவறான முடிவுக்கு வராதீர்கள்

  வெற்று வாக்குறுதிகளை நம்பி தவறான முடிவுக்கு வராதீர்கள்

  08/05/2018

  img img

  கோத்தா ராஜா, மே 8:

  'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை'  என்பது போல எதிர்க்கட்சியின் வாக்குறுதிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் அவை சாத்தியப்படுமா என்பது பெரியக் கேள்விக்குறி. அவர்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பி மலேசியர்கள் ஏமாற வேண்டாம் என மைபிபிபியின் இடைகால தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டென்னிஸ் கு'குருஸ் தெரிவித்தார். 

  "எதிர்க்கட்சியின் வசமுள்ள மாநிலங்கள் எத்தகைய நிலையில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சிலாங்கூரில் டெங்கி காய்ச்சல் பிரச்சினைக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் விடை காணாமல் இருக்கிறது எதிர்க்கட்சி அரசாங்கம். 

  பினாங்கில் சுரங்கப்பாதை அமைப்பதாகக் கூறி பணத்தை கையாடல் செய்துள்ளது அந்த அரசாங்கம். இவற்றையெல்லாம் நன்கு அறிந்தும், நாட்டின் ஆட்சியை அவர்களிடத்தில் ஒப்படைக்க நினைப்பது அறிவார்ந்த செயலன்று" என்று மெக்லின் எடுத்துக் காட்டினார். 

  மேலும், முன்பு பரம எதிரிகளாக இருந்தவர்கள், தத்தம் சுயநலத்திற்காக ஒன்று கூடியுள்ளனர். ஆட்சியைக் கைப்பற்றும் வரை மட்டுமே அவர்களின் நட்பு நீடிக்கும். அதன் பின்னர், துன் மகாதீருக்கும் அன்வார் குடும்பத்திற்கும் நிச்சயம் பதவி போர் ஏற்படும். 

  நாட்டின் தலைமைத்துவமானது குடும்ப பதவியன்று. நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டியவர்களுக்கே அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நன்கறிந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரும், எதிர்க்கட்சி கூட்டணியின் மானசீக தலைவர் அன்வார் இப்ராகிமும் பிரதமர் பதவியை குடும்ப சொத்தாக கருதுவது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். 

  இன்று நண்பகல், கோத்தா ராஜா தொகுதியில் ஒரே மலேசியா கணினி மையம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோஶ்ரீ மெக்லின் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரான கோத்தா ராஜா நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளர் வே.குணாளன் வருகை புரிந்தார். 

  வே.குணாளன் பேசுகையில், தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள பங்களிப்புகள் எண்ணில் அடங்கா. ஆனால், எதிர்க்கட்சி வசமுள்ள மாநிலங்களுக்கு அந்த அந்த சலுகைகள் முறையாக சேர்க்கப்படவில்லை. தேமு மக்கல் பிரதிநிதியை மக்கள் தேர்வு செய்தால் மட்டுமே இந்த உதவிகள் அடிமட்ட மக்கள் வரை வந்தடையும் என்றார். 

  அதோடு, சிலாங்கூர் மண்ணின் மைந்தனான தம்மை கோத்தா ராஜா மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தம்மை விட எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் சிறந்த சேவையை ஆற்றிவிடமுடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார். 

  மேலும், கட்சி பேதமைகளை மறந்து, தேசிய முன்னணி குடையின் கீழ் ஒன்றிணைந்து சேவையாற்றும் மைபிபிபி கட்சி உறுப்பினர்களுக்கு அவர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

  பின்செல்