ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  டத்தோ லோகாவின் துணையமைச்சர் அனுபவம் மாற்றத்திற்கு வழிவகுக்கும்

  டத்தோ லோகாவின் துணையமைச்சர் அனுபவம் மாற்றத்திற்கு வழிவகுக்கும்

  04/05/2018

  img img

  கோலாலம்பூர், மே 4: கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு துணையமைச்சர் பதவியின் வாயிலாகப் பெறப்பட்ட அனுபவம், சிகாம்புட் நாடாளுமன்றத்தின் மாற்றத்திற்கும் உயர்வுக்கும் துணைபுரியும் என சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லோக பால மோகன் தெரிவித்தார். 

   

  இங்குள்ள மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவன் என்ற காரணத்தினால்தாம் தேசிய முன்னணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்குதான் வேலை செய்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, வரும் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத் தேர்தலில் எனக்கு வாய்ப்பளியுங்கள். நிச்சயமாக உங்களின் எதிர்ப்பார்ப்புகளும் கோரிக்கைகளும் பூர்த்திச் செய்யப்படும் என்றார் அவர். 

   

  ஒவ்வொரு முறையும் பொதுத் தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சியினர் தங்களின் வெற்றிக்காகவே பாடுபடுகின்றனர். தொகுதி விட்டு தொகுதி தாவுவதில் கைத்தேர்ந்தவர்களாக எதிர்க்கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர். இந்தப் பொதுத் தேர்தலில் சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பாக களமிறங்கியிருக்கும் ஜசெகவின் வேட்பாளர் ஹன்னா இயோ, சிகாம்புட் மக்களுக்கு ஒருபோதும் முறையான சேவையை வழங்குவார் என்பது கேள்விக்குறியே.

   

  ஒரு தொகுதியில் களமிறங்குபவர் மக்களின் சூழலை அறிந்தவராக இருக்க வேண்டும். தொகுதி மக்களை அறிந்தவரால் மட்டுமே அவர்களுக்கு நிறைவான சேவையை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தொகுதி தாவுகின்றவர்கள், அவர்களின் தொகுதியைக் கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். எனவே, சிகாம்புட் நாடாளுமன்ற வாக்காளர்கள் தெளிவான சிந்தனையுடன் தங்களின் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என டத்தோ லோக பால மோகன் கேட்டுக் கொண்டார். 

   

  நேற்று முன்தினம், இங்குள்ள காசிப்பிள்ளை வளாகத்தில் நடைபெற்ற 'கலக்கல் கலைநிகழ்ச்சி'யில் கலந்து கொண்டு உரையாற்றும்போது டத்தோ லோகா இவ்வாறு பேசினார்.

   

  தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே மக்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் என்பதைக் கடந்த 60 ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினால் பல்வேறு குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதன் வாயிலாக இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

   

  சிகாம்புட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மக்களுக்காக 6 அம்ச தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன்.  இந்த 6 அம்சங்கள் யாவும் வரும் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படக் கூடியவையாகும். நம்மால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனது தேர்தல் கொள்கை அறிக்கை மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைவரையும் உட்படுத்தியதாகும். ஓர் இனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எனது தேர்தல் அறிக்கை அமையவில்லை என்பதையும் டத்தோ லோகா பால மோகன் வலியுறுத்தினார். 

   

  இதனிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற கலக்கல் கலை நிகழ்ச்சியில் மைபிபிபியின் இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டென்னிஸ் டி'குருஸ், துணைத் தலைவர் டத்தோ ஸக்காரியா, தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ சைமன் சுரேஸ் வருணமேகம், தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் உட்பட மேலும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

  பின்செல்