ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலையைத் தற்காப்பதில் தேமு வெற்றி பெறுமா?

  கேமரன்மலையைத் தற்காப்பதில் தேமு வெற்றி பெறுமா?

  24/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப். 24: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி இழக்கப் போகும் அபாயத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

  வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடமிருந்து ஜசெக கைப்பற்றப் போகும் 53 நாடாளுமன்றத் தொகுதிகளில் கேமரன்மலையும் அடங்கும்.

  வரும் பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் வழக்கறிஞர் எம். மனோகரனை வேட்பாளராக நிறுத்துவதற்கும் அக்கட்சி தயாராகியுள்ளது.

  கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் போட்டியிட்ட வேளையில், பழனிவேல் வெறும் 462 வாக்குகளில் மட்டுமே அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

  அதன் பின்னர் பல்வேறு விவகாரங்கள் நடந்துள்ளன. பழனிவேல் மஇகாவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விரட்டப்பட்டார். மஇகா தலைமையகத்திற்குள் புகுந்த கும்பல் அவரின் தேசியத் தலைவர் பதவியை தட்டிப் பறித்தது.

  அதனைத் தொடர்ந்து மஇகாவில் நிகழ்ந்த பல்வேறு தலைமைத்துவ நெருக்கடிகளைத் தொடர்ந்து அவர் கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தை இழந்து கடந்த 2015ஆம் ஆண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரானார்.

  அவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரானதும் கேட்பாரற்றுக் கிடந்த அத்தொகுதியில் மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இறங்கி வேலை செய்தார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஆசியோடுதான் தாம் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் இறங்கி வேலை செய்வதாகவும் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்.

  கடந்த 4 ஆண்டுகளில் அவர் கேமரன்மலையில் 640 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அதோடு அவர் அங்கு 5,600 புதிய வாக்காளர்களையும் பதிவு செய்துள்ளார். அவர்களில் 2,700 பேர் மைபிபிபி கட்சியின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

  அதேவேளையில், கேமரன்மலையில் இருந்த சுமார் 2 ஆயிரம் ஜசெக ஆதரவாளர்களையும் அவர் தேசிய முன்னணி பக்கம் திருப்பியுள்ளார். டான்ஸ்ரீ கேவியஸ் கூறியதைப்போல் அங்குள்ள பூர்வீகக்குடியினர் டான்ஸ்ரீ கேவியசுக்கு தங்களின் வற்றாத ஆதரவை வழங்கி வந்தனர்.

  கேமரன்மலையில் வெற்றி பெறும் அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரே தேசிய முன்னணி வேட்பாளராக டான்ஸ்ரீ கேவியஸ் விளங்கி வந்தார் என்றால் அது மிகையாகாது.

  இருப்பினும், கேமரன்மலை மஇகாவின் பாரம்பரிய தொகுதியாக விளங்கியதால் வரும் பொதுத் தேர்தலில் மஇகாவின் இளைஞர் பகுதி தலைவரான டத்தோ சிவராஜ் என்பவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மஇகா முடிவு செய்துள்ளது.

  இதனால் டான்ஸ்ரீ கேவியஸ் பெரும் சினம் அடைந்துள்ளார். மைபிபிபி கட்சி தேசிய முன்னணியிலிருந்து வெளியேறலாம் என பல்வேறு தரப்பினர் பேசும் வகையில் அது பெரும் விஸ்வரூபமாக உருவெடுத்தது.

  கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் 4 ஆண்டுகளாக அங்குள்ள மக்களுக்கு நிறைவான முறையில் சேவையாற்றி வந்த கேவியசுக்கு சீட் கொடுக்காமல் ஒன்றும் செய்யாத சிவராஜ் என்பவருக்கு அங்கு சீட் வழங்கியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

  வரும் பொதுத் தேர்தலில் மஇகா தனது வேட்பாளரை கேமரன்மலையில் நிறுத்தினால் அவர் நிச்சயம் தோல்வி காண்பார் என்று டான்ஸ்ரீ கேவியஸ் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

  கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் 31,547 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10,667 பேர் சீனர்கள், 9,442 பேர் மலாய்க்காரர்கள், 6,500 பேர் பூர்வீகக் குடியினர், 4,813 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் 125 பேர்.

  வரும் பொதுத் தேர்தலில் அங்கு தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, பி.எஸ்.எம்., பாஸ், சுயேச்சை என குறைந்தது ஐந்து முனைப்போட்டி நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

  பின்செல்