ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசியாவில் தேவார திருமுறை

  மலேசியாவில் தேவார திருமுறை

  23/04/2018

  img img

  மலேசியாவில் தேவார திருமுறை திருப்பதிகங்களை ஓதுவதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும். தமிழ்நாட்டில் சிலபகுதிகளை விடுத்து மலேசியாவில் இத்தெய்வீகப் பாடல்களுக்கு சிறப்பானதொரு அங்கீகாரம்  கிடைத்துவருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். 

  இந்து சமய அமைப்புகள் சிலவற்றின் அயராத சேவையும் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். மலேசிய இந்து சங்கம், இந்து தர்மமாமன்றம், திருவருள் தவநெறிமன்றம், மலேசிய அருள்நெறி திருக்கூட்டம் மற்றும் பல்வேறு இந்து சமய அமைப்புகளின் அயராத சேவை உணர்வுகளே இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

  மலேசிய இந்து சங்கம் பலஆண்டுகளாக மேற்கொண்டுவரும் தேவார திருமுறை போட்டிகள்  நாட்டில் இந்து சமய, ஆன்மீக வளர்ச்சிக்கு பெரும் பங்கினை ஆற்றி வருகிறது என்பது மறுக்கவியலாத ஒன்றாகும். இத்துடன் தேவாரம், திருமுறை வளர்ச்சிக்கு இந்நடவடிக்கை பெரும் பங்கினை தொடர்ந்து ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

  இதனை விடுத்து, தனிப்பட்ட முறையில் ஆன்மீக சேவையில்  ஒன்றித்துள்ள ஆசிரியர்களின் சிரத்தையையும் தன்னிகரற்ற சேவை உணர்வையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இவர்களது சுய முயற்சியுடன் கூடிய செலவினத்தையும் பொருட்டாகக் கருதாது நாடு தழுவிய நிலையில் தேவார திருமுறை வகுப்புகளை நடத்திவருவது அவர்கள் சமய வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்கும் ஈடுபாட்டிற்கும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

  ஆலய பூஜைகள், விழாக்கள், மணவிழா, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளுக்கு தேவார திருமுறை திருப்பதிகங்களைப் பாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் இலக்கில் அவர்களுக்கு முறையான போதனைகளையும் பயிற்சிகளையும்  வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

  பல இந்து சமய அமைப்புகளைச் சார்ந்தோர் அன்றி தனிநபர்கள் தேவார திருமுறைகளின் சிறப்புத் தன்மையையும் தரத்தையும் எதிர்பார்க்கின்றனர். இவர்களது இந்த எதிர்பார்ப்புக்களுக்கு ஆதரவு புரியும் வகையிலும் துணை புரியும் வகையிலும் நாங்கள் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். இத்துடன் இந்த அமைப்புகள், தனிநபர்களின்  முயற்சிகளுக்கு   உதவும் பொருட்டும் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

  அனைத்துத்  தரப்பினரையும் கருத்தில் கொண்டு தற்போது ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்த முயற்சிக்கு முறையாக அங்கீகாரத்தைப் பெறும் வகையில் திட்டமிட்ட ஆய்வு பணியொன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதோடு திருமுறைகள் தரமான நிபுணத்துவ அடிப்படையில் அவர்களிடையே  சென்று சேர வேண்டியது  இன்றியமையாத ஒன்றாகும். மலேசியாவின் வருங்கால  சந்ததியினரைக் கருத்தில் கொண்டு பாடல்கள் ஓதும் முறைகளின் ஏற்பாடுகளில் நல்லதொரு வழிமுறையைக் காண இந்த முயற்சி வழிவகைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்திற்கு உதவும் வகையில் இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை அமைப்பு தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் பலரைத் தந்துதவ முன்வந்துள்ளது. இதன்வழி திருமுறைப்பாடல்களைப் பாடி பயிற்சிபெற முறையானதொரு திட்டமிடலையும் உறுதிப்பாட்டையும் நாம் பெறலாம்.

  தேவார, திருமுறைப்பாடல்களை நாம் முறையாகப் பயிலவ்இத்திட்டம் வழிவகைகளைக் காண்பதோடு அதனை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.  இதற்கிடையே தமிழ்நாட்டில் இந்த அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் தேவார ஆசிரியர்களுக்கும் ஓதுவார்களுக்கும் பயிற்சிகளை அளித்து அவர்களை ஆங்காங்கே அனுப்பி வைப்பதேயாகும்.

  இத்துடன் மட்டுமல்லாது சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆலயத்தின் மேற்குப்பகுதியின் எதிர்புறத்தில் கல்விக்கூடம் ஒன்றையும் இந்த அறக்கட்டளை நிறுவி செயலாக்கம் பெற்றுவருகிறது. தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களில் நடைபெறும்  விழாக்களுக்கு இந்த அறக்கட்டளையில் இருந்தே ஓதுவார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

  இந்த அறக்கட்டளை கல்வி மையத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் தேவார திருமுறைகளை தமது வாழ்க்கைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர் என்பதோடு தர்மபுற ஆதீனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர்.  தமிழ் நாடு, வெளிநாடுகளில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் இவர்கள் சென்று அவ்வாலயங்களின்  நிகழ்வுகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துகொண்டு வந்துள்ளனர் என்பதோடு நல்ல அனுபவங்களையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டம் வெற்றிபெற மலேசிய  இந்துக்களின் ஒட்டுமொத்த ஆதரவு தேவைப்படுவதோடு தனிநபர், அமைப்புகளின் ஆதரவும் பெரிதும் வேண்டப்படுகிறது.  மலேசியாவில் தேவார திருமுறைகள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகளுக்கு மலேசிய இந்து சங்கம் ஊன்றுகோளாக அமைய வேண்டும் என்பதோடு  நாட்டின் ஏனைய முக்கிய அமைப்புகளான மலேசிய இந்து தர்மமாமன்றம், திருவருள் தவநெறிமன்றம், இந்து இளைஞர் இயக்கம், மலேசிய அருள்நெறி திருக்கூட்டம் என பல்வேறு இந்து சமய அமைப்புகள் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டியது மிகமிக அவசியமாகும். இத்துடன் தனிநபர் பங்களிப்பும் இத்திட்டத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

  இந்துப் பெருமக்களின் தேவார திருமுறைப்பாடல்கள் பயன்பாடு குறித்த இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட மலேசிய ஆலல சுந்தர மூர்த்தி நாயனார் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு அதனுடன் இணைந்து செயல்பட அர்த்தஞான மேம்பாட்டு அமைப்பும் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்தத் திட்டம்  வெற்றிபெற உங்களைப் போன்றோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் தேவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

  நாட்டில்  நமது சமய வளர்ச்சியின் நிமித்தம் நல்லதொரு நோக்கத்திற்காக விரைவில் தொடங்கப்படவிருக்கும்  இத்திட்டத்திற்கு தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. வளர்ந்துவரும் நமது சந்ததியினர் நமது இந்து சமய அடையாளத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் பேணிக்காக்க இதுபோன்ற திட்டம் பொருத்தமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதோடு இதுவே சரியான தருணமாகும் எனவும் கருதப்படுகின்றது.

  பின்செல்