ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மஇகாவின் சிவராஜ் இன்னும் மைபிபிபி உறுப்பினரே!

  மஇகாவின் சிவராஜ் இன்னும் மைபிபிபி உறுப்பினரே!

  17/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப். 18: கேமரன்மலையில் தேசிய முன்னணி சார்பாக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி. சிவராஜ், இன்னமும் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

  கேமரன்மலையில் போட்டியிடப்போவது மஇகாவா மைபிபிபியா என்ற கேள்வி சில ஆண்டுகளாக எழுந்து வந்த நிலையில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸுக்கு தேசிய முன்னணி சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியது. ஆனால், இதனை டான்ஶ்ரீ கேவியஸ் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  நேற்று நடைபெற்ற மைபிபிபியின் அவசர உச்சமன்ற கூட்டத்தில் பேசிய டான்ஶ்ரீ கேவியஸ், ம.இ.கா. இளைஞர் பிரிவின் தலைவராகவும் கேமரன்மலை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் டத்தோ சிவராஜ் சந்திரன் மைபிபிபி கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

  அதற்கான ஆதாரங்கள் மைபிபிபியில் இருப்பதாக கூறிய கேவியஸ், சிவராஜ் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி அப்போதைய பிபிபி கட்சியின் பிரிக்பீல்ட்ஸ் உத்தாரா கிளையில் உறுப்பினராக சேர்ந்ததாகவும் அவரது உறுப்பினர் எண் 333981 என்ற தகவலையும் வெளியிட்டார். கட்சியில் அவர் இணையும்போது, தலைநகரிலுள்ள தாமான் செப்பூத்தே அடுக்குமாடி குடியிருப்பு முகவரியைக் கொடுத்து இணைந்துள்ளார்.

  அதோடு, தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது சிவராஜ் எனக்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ததாகவும் கூறிய கேவியஸ், அவர் இன்னமும் மைபிபிபி கட்சியில் உறுப்பினராக இருப்பதாகக் கூறினார்.

  சிவராஜின் உறுப்பினர் பதிவு இன்னமும் ரத்து செய்யப்படாமல் உள்ளது. ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளில் இருக்க முடியாது. அவர் இன்னமும் மைபிபிபியின் உறுப்பினர் என்பதால் ம.இ.காவில் அவர் தேசிய இளைஞர் பிரிவு தலைவராக இருப்பது உள்பட பதவிகள் வகிப்பதும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் செல்லாது. சட்டப்பூர்வமற்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

  இதனை வைத்துப் பார்க்கும்போது, அவரை தேசிய முன்னணி மஇகா சார்பில் கேமரன்மலையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து, கேமரன்மலை மைபிபிபிக்கு சொந்தமானது என கூறி வருகிறேன். இந்நிலையில், சிவராஜை அத்தொகுதியில் நிறுத்தப்படவிருப்பதாக கூறப்படுவதால் அத்தொகுதி எங்கள் கட்சிக்கே சொந்தமானது என்பது உறுதியாகியிருப்பதாகவும் டான்ஶ்ரீ கேவியஸ் சொன்னார்.

   

  பின்செல்