ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலை தோற்றத்தை மைபிபிபி புத்தம் புதிதாக்கியுள்ளது

  கேமரன்மலை தோற்றத்தை மைபிபிபி புத்தம் புதிதாக்கியுள்ளது

  16/04/2018

  img img

  மகேன் சிவசங்கர், தாமான் லோபாக், சிரம்பான்  

  வெற்றிகரமான 65ஆம் ஆண்டில் கால் பதித்துள்ளது மைபிபிபி கட்சி. அதிலும் புதிய தோற்றத்துடன் பீடு நடைபோடுகிறது. இந்த வளர்ச்சிக்கு முன்னதாக நீங்கள் பதவி ஏற்றுக்கொண்ட அந்த தருணத்தைக் கூறமுடியுமா? 

   

  என் வாழ்வில் நான் பார்த்த ஜெயித்த மிகப்பெரிய சவால் இதுதான். 1992ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்த நிலையில் இருந்த கட்சியினை மூடிவிட்டு வேறு ஏதேனும் கட்சியில் இணையுமாறு அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார். 

  என்னிடத்தில் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால் இந்த கட்சியினை நான் வழிநடத்துகிறேன், இந்த கட்சி வலுப்பெறும், நான் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுத்து கட்சியின் தலைமைத்துவ பொறுப்பைக் கையில் எடுத்தேன். அழிந்த நிலையில் இருந்த கட்சியினை மேலோங்கச் செய்தேன். கட்சியை மூடிவிடுங்கள் என்று கூறிய அதே மகாதீரை, 1996ஆம் ஆண்டில் கட்சியின் மாநாட்டினை தொடக்கி வைக்க அழைத்தேன். 

  முற்றிலும் அழிந்த ஒரு கட்சியினைப் புத்துயிர் பெறச் செய்தது உலகத்திலே இதுவே முதல் முறை என்று அவர் வியந்து பாராட்டினார். அதன் பிறகு சிறுக சிறுக இந்த கட்சிக்கு தேமுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று 65 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், உலக வளர்ச்சிகும் நாட்டு மக்களின் தேவைக்கும் ஏற்றாற்போல நாமும் மாற வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையில் இந்தக் கட்சிக்குப் புதுப் பொலிவு வழங்கி மக்களிடத்தில் இந்தக் கட்சியின் தேவையினை உணர்த்தவே இந்த மறுமலர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

  இந்தப் புதுமலர்ச்சி, பெயரோடு நின்று விடக்கூடாது, அதன் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் மைபிபிபி பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள நாடெங்கும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று கேமரன்மலை தோற்றத்தையே புத்தம் புதிதாக்கியுள்ளது. 

   

  நர்மதா திவாகரன், கோலாலம்பூர் 

  ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. கட்சி என்றாலே, அங்குப் பிரச்சினை இல்லாமல் இல்லை. மைபிபிபி கட்சியைப் பொறுத்தவரை, 2009ஆம் ஆண்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைத் தவிர இத்தனை ஆண்டுகளாகவும் கட்சி இன்னும் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு எது பலம் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்? அப்படியே இருந்தாலும், அந்த உட்பூசல்களை நீங்கள் எப்படி களைகிறீர்கள்? 

   

  1993ஆம் ஆண்டில் பிபிபி கட்சிக்கு நான் தலைமையேற்றபோது இக்கட்சியை மீண்டும் படிப்படியாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அப்போது கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இருந்தது. ஒற்றுமையாக இருந்து சாதிப்போம் என்ற எண்ணத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் இக்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டதில்லை. 

  அனைவரையும் அன்பாக அரவணைத்துச் செல்லும் ஒரு போக்கை மைபிபிபி உறுப்பினர்களிடையே காண முடியும். எல்லாரிடமும் அன்பாக பழகுவது,  தலைவர், உறுப்பினர்கள் என்ற பேதம் இல்லை.  மைபிபிபி அலுவலகத்துக்கு கட்சித் தொடர்புடையவர்கள் அலுவல் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். கட்சியில் அந்த அளவுக்கு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பு போன்றவற்றால் மைபிபிபிகட்சியில் ஒற்றுமை நிலைத்திருக்கிறது. 

  தலைவர்கள், உறுப்பினர்களை எளிதாக சந்திக்கலாம். உறுப்பினர்களும் தலைவர்களை எளிதாகப் பார்க்கலாம். ஒரு குடும்பம்போல் இந்தக் கட்சி வளர்க்கப்பட்டது. கட்சிக்கு வெளியில் எத்தனை பிரச்சினை வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கட்சிக்குள் மரியாதை மட்டுமே இன்றுவரை உள்ளது.  

  2009ஆம் ஆண்டில் கட்சியில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சினைக்குக் கூட நாம் நல்ல முறையில் தீர்வு கண்டோம். அந்த பிரச்சினைகளுக்கு நாம் இப்போது நன்றி சொல்ல வேண்டும்.அந்த பிரச்சினையினால் கட்சியில் ஒற்றுமை மேலோங்கி இன்றுவரை ஒற்றுமையாக உள்ளது. 

   

  லிங்கேஸ்வரன் கிருஷ்ணன், லெம்பா பெர்த்தாம்

  லெம்பா பெர்த்தாமில் வசிக்கும் ஓராங் அசால் சமூகத்தினருக்கு மைபிபிபியின் 'தத்துத் தந்தை' திட்டம் எதனை மையப்படுத்துகிறது?

   

  கடந்த 4 ஆண்டுகளாக கேமரன்மலையில் ஓராங் அசால் மக்களை சந்தித்து வருகிறோம். அவர்களுக்குத் தேவை அடிப்படை பொருள்கள் மட்டுமல்ல; மாறாக, மனித மூலதனமும் அவசியமாகிறது. 

  இதைத்தாம் எங்களின் ஆய்வில் கண்டறிந்தோம். எனவே, ஒவ்வொரு கிராமத்தையும் 'தத்துத் தந்தை' எனும் பயன்மிக்க திட்டத்தை உருவாக்கினோம். கம்போங் சுங்கை தியாங், சுங்கை காபோக், சுங்கை செஹோங் ஆகிய மூன்று கிராமங்களையும் மைபிபிபி தத்தெடுத்துள்ளது. 

  இதன்வழி, ஓராங் அசால் மக்களின் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும், மைபிபிபி அங்கு இருக்கும். சம்பந்தப்பட்டவர்களின் அழைப்பை ஏற்று மைபிபிபி களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறது. அது முழுக்க முழுக்க அந்த மக்களை முன்னேற்றும் ஒரு திட்டமாகும். 

   

  கீதா ஷான்ராஜ், கேமரன்மலை

  கேமரன் மலையில், ஓராங் அசால் சமூகத்தின் நிலை இன்று எப்படி இருக்கிறது, கடந்த சில ஆண்டுகளாக தங்களின் சேவை அவர்களுக்கு எப்படி சேர்ந்துள்ளது? 

  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மனித மூலதனம் மிகப் பெரிய பங்கை ஆற்றுகிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான், மாற்றத்தைக் காண முடியும். இல்லையேல், எத்தனை பிரதிநிதிகள் வந்தாலும் மாற்றம் ஏற்படாது. 

  இங்குள்ள ஓராங் அசால் மக்கள் மீதான எனது அக்கறை குறித்து பலரும் பல்வேறு கேள்விகளை  முன்வைக்கின்றனர். அது என் கடமை. கேமரன்மலையில் மைபிபிபி போட்டியிடவிருக்கிறது. அதற்கும் அவர்கள் முழுமையான ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

  அவர்களின் தேவைகளை மைபிபிபி கட்சி கட்டம் கட்டமாக மேற்கொண்டு வருகிறது.  இன்றைய தலைமுறையினரின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு, அவர்களுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். ஓராங் அசால் மக்களுக்கு நாம் அவர்களின் பாணியிலேயே சென்று சேவை வழங்க வேண்டும். 

  இதற்காகத்தான் கடந்த 4 ஆண்டுகளாக 'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற திட்டம் கேமரன்மலையில் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

   

  ஜஸ்விந்தர் மான், தாமான் மேடான், சிரம்பான் 

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு, இளையோருக்காக வெளியிடப்பட்ட சிறப்புத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து உங்கள் கருத்து என்ன? 

  தேசிய அரசியல் நீரோட்டத்தில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட  இந்த திட்டம்  மற்றொரு வரலாறாகும். எனவே, தேமுவின் இந்த திட்டமானது கண்டிப்பாக இளையோர்களின் வாழ்வை வளமானதாக்கும் என்ற நம்பிக்கையைப் பிறப்பித்துள்ளது.  

  சவால்மிக்க இன்றைய யுகத்தில் இளையோர்களின் தத்தளிப்பை நன்கு உணர்ந்த அரசாக தேசிய முன்னணி திகழ்கிறது என்பதையும்  இளையோருக்கான தேர்தல் கொள்கை அறிக்கை நிரூபிக்கின்றது. பணம் மட்டுமே வாழ்க்கையை வளமானதாக அமைத்துவிடும் என்ற எதிர்மறை சிந்தனைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. 

  பணத்தைத் தவிர்த்து மேலும் பல கூறுகளும் வளமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதை மிகத் தெளிவாக உற்சாகத்துடன் எடுத்துக் கூறிய கைரிக்கும் கட்சி சார்பாக நன்றியைக் கூறிக்கொள்கிறேன். 

   

  வினோதினி வேலாயுதம், ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் 

  உங்கள் வாழ்வில் இதுநாள் வரை மறக்க முடியாத நாள் எது? 

  10.10.1993 இந்த நாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத ஒரு நாளாகும். அன்று தான் முதன் முதலாக பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள். தலைவர் பதவி நான் வேண்டாம் என்று கூறி பிடிவாதமாக இருந்த போதிலும், பல வேண்டுகோள்கள் கோரிக்கைகள் மூலம் அந்நாள் என் வாழ்வில் பெரும் திருப்பத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. 

  வழக்கறிஞராக, வலம் வந்த நான் அந்த நாளுக்குப் பிறகு எனது வேலை, நேரம், குடும்பம், நட்பு, பொழுதுபோக்கு, என்று இப்படி பல்வேறு நிலைகளில் இருந்து என்னை தியாகத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு நாள். இந்த நாள் என்னை இன்றும் தொடர்ந்து சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

  அந்த நாள் எனது பொறுப்புகளையும் கடமை உணர்ச்சியையும் அதிகரிக்க வைத்தது. கட்சி உறுப்பினர்கள் என் மீது வைத்திருந்த பாசத்தையும் நம்பிக்கையையும் புத்துணர்ச்சி பெற வைத்தது. எம் மக்களுக்கு நான் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய எதிர்காலத்தை திட்டமிட வைத்தது. 

  இன்னும் ஒருபடி மேல், அந்த நாள் என்னை இன்றும் விழிப்புணர்வுடன் சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. திரும்பி பார்க்கின்றேன் அந்த நாள் ஞாபகம் இன்றும் என் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. அது எனக்கு மறக்க முடியாத ஒரு சரித்திரம் வாய்ந்த நாளாகும். 

   

  கிறிஸ்டினா, ஈப்போ

  பழமைகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பது நமது இயல்பாகி விட்டதால், இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு பலர் இன்னும் தங்களை மாற்றிக்கொள்லாமல் இருக்கின்றனர். இதனால், நமது சமுதாயம் பின்னடைவை சந்திக்குமா? 

  பழமைகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால், அந்தப் பாதையில் எதிர்ப்படும் துன்பங்களைக் கண்டதும் பாதியிலேயே பலர் தங்களின் புதுமையை நோக்கிய பயணத்தை மறந்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.

  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும், வசதி வாய்ப்புகளும் ஏதோ சில குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே வசப்படுவதாய், பயன் படுவதாய் இருக்கும் நிலையில் எல்லோருக்குமே இவை வசப்பட வேண்டுமே என கவலைப் படுவோரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவோரும் துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தங்களின் பயணத்தைத் தொடர்கிறார்கள். 

  வாழும் சமூகமானது பல்வேறு ஏற்றத் தாழ்வுகளோடு முன்னேற்றங்கள் இன்றி வேதனையைத் தரும். எனவே, நாம் காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக்கொள்வது தவறில்லை. காலம் அறிந்து செயல்படுவதே சிறந்ததாகும். அதுவே வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்

   

  பின்செல்