ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்கிறது தேசிய முன்னணி!

  முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்கிறது தேசிய முன்னணி!

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச். 14: 

  14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேசிய முன்னணி  தனது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்கவுள்ளதாக 'தி நியூ ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நிகழ்ச்சியில் வேட்பாளர்களுக்கான உறுதிக் கடிதங்களையும் அவர் வழங்கவுள்ளார்.

  நாடாளுமன்றம் கலைக்கப்படுவது, தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கலுக்கான தேதியை முடிவு செய்வது போன்ற விசயங்களைப் பொறுத்து வேட்பாளர்களை அறிவிப்பதற்கான நிகழ்ச்சியின் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.  14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு உந்து சக்தியை அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

  கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் பட்டியல் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஆனால் இம்முறை வேட்பாளர்களின் பெயர்கள் முன் கூட்டியே அறிவிக்கப்படும். 

  இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்படுவார்களா அல்லது சட்டமன்றத்துக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்களா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  தேசிய முன்னணியில் ம.சீ.ச., கெராக்கான் கட்சிகள் தமது வேட்பாளர்களை கட்டம் கட்டமாக அறிவித்து வருகின்றன.

  ம.இ.கா. இன்னமும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.அதேவேளையில் அம்னோவும் தனது வேட்பாளர்கள் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவதில்லை. 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாக அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

  13 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 33 விழுக்காடு புதுமுகங்களை களமிறக்கி, 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 133 தொகுதிகளை வென்றது. இந்நிலையில் 14 ஆவது பொதுத் தேர்தல் மே மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கணிக்கப்படுகிறது.

   

  பின்செல்