ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பாரிட் புந்தார் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் எஸ்எம்சி மாணவர்களின் புத்தக அன்பளிப்பு

  பாரிட் புந்தார் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் எஸ்எம்சி மாணவர்களின் புத்தக அன்பளிப்பு

  13/03/2018

  img img

  கற்ற அறிஞர்கள், தாம் இன்பம் அடைவதற்குக் காரணமாக இருந்த கல்வியை உலகினரும் கேட்டு இன்பம் அடைவதால், அக்கல்வியை மேலும் மேலும் கற்க விரும்புவர் என்பதை ஏழு சொற்களில், தாம்இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்" என்று இரத்தினச் சுருக்கமாக சொன்னான் நமது பாட்டன் வள்ளுவன். 

  அக்குறளுக்கும் ஒரு படி மேல் சென்று, அக்கல்வி தமது அடுத்த தலைமுறையும் பெற்று யாம்பெற்ற இன்பம் அவர்களும் பெற வேண்டி எண்ணி, கடந்த திங்கள் பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்கள் சுமார் நாற்பது பேருக்கு ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதல் மதிப்பு கொண்ட பயிற்சிப் புத்தகங்களை அன்பளிப்பாக தந்து மகிழ்ந்தனர் முன்னாள் எஸ்எம்சி மாணவர்கள். 

  பாரிட் புந்தாரில் 1994ஆம் ஆண்டு எஸ்எம்சி மூன்றாம் படிவ (பி.எம்.ஆர்) கல்வி திட்ட பிரத்தியேக வகுப்பு இதே பள்ளியில் நடந்தது. அந்த வகுப்புகள் இப்பள்ளியில் நடக்க அனுமதித்து முழு ஆதரவு தந்தார் அன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்த்திரு கி.மாரிமுத்து அவர்கள். ஆசிரியர்கள் நினைவில் வாழும்குணசேகரன், திரு.விக்னேஸ்வரன், திரு.செல்லப்பன், திரு.ரமேஷ், திரு.சண்முகம், திரு.கோபால், திரு.ஜெகின்தர், திரு.பரசுராமன், திரு.ஆறுமுகம், திரு.ஆனந்தன் என பல தியாகச் சுடர்களின் உதவிகரம் கொண்டு அன்று அந்த நல்ல திட்டம் வழி பாரிட் புந்தார் மட்டுமின்றி நிபொங் தெபால், பாகான் செராய் என சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். 

  அப்படி பலன் அடைந்த சுமார் எழுபது மாணவர்கள் 24 ஆண்டுகளுக்குப்பின் தங்களின் ஒன்று கூடுதல் நிகழ்வை இதே பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் நடத்தினர் என்பதும் அந்நிகழ்வில் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை அழைத்து அவர்களுடன் ஆடி பாடி பின் உணவும் உண்டு தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த ஒன்று கூடுதலில் எடுத்த முடிவின்படி, நமது தமிழ்ப்பள்ளிக்கு நன்மை பயக்கும் இந்த அரியதொரு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

  பாரிட் புந்தார் சமூக சேவையாளரும் இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் சேவையாற்றிவரும் மாமனிதர் ஐயா திரு.ச.மரியசூசை அவர்களின் புதல்வன் சந்தனதாஸ் மற்றும் நிபோங் திபால் பொது நலத் தொண்டரும் நாடறிந்த மிட்டாய் கணேஷ் நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.கை.கணேஷ் அவர்களின் புதல்வி திருமதி கங்காதேவி சிவநேசன் அவர்களும் இணைந்து அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு எடுத்து வழங்கி சிறப்பு செய்தனர்.

  அதே நிகழ்வில் பினாங்கு ரோபட் போஷ் நிறுவனத்தின் ஊழியர்கள் 1,060 வெள்ளி ரொக்க பணத்தை அப்பள்ளியின் வசதி குறைந்த 17 மாணவர்ளுக்கு பள்ளி சந்தா செலுத்தி உதவி செய்தனர். அப்பணத்தை நிறுவன ஊழியர்கள் சார்பாக திரு. இருதயராஜா மரியசூசை அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

  தலைமை ஆசிரியர் திரு.பத்மநாதன் முன்னாள் எஸ்எம்சி மாணவர்கள், ரோபட் போஷ் ஊழியர்கள் அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதோடு, நாடு முழுவதும் உள்ள முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த தமிழ்ப்பள்ளியை நினைவு கூர்ந்து இதுபோன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

   

  பின்செல்