ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசியத் தமிழர்களின் தன்மானத் தலைவர் பாரதிய சம்மான் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் எஸ்.பி.மணிவாசகம் புகழாரம்

  மலேசியத் தமிழர்களின் தன்மானத் தலைவர் பாரதிய சம்மான் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் எஸ்.பி.மணிவாசகம் புகழாரம்

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 13: மலேசியாவில் தமிழ்க்கலை, பண்பாடு, மொழி, இலக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாகப் பங்காற்றி வரும் ஒரு தமிழ் ஆர்வலரான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம், மலேசியத் தமிழர்களின் தன்மானத் தலைவராகப் போற்றப்படுகிறார் என்று மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் புகழாரம் சூட்டினார்.

  தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் (NLFCS) நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்று, கூட்டுறவுக் காவலராகவும் திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கின்ற டான்ஸ்ரீ சோமசுந்தரம், பல லட்சம் இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் என்பது என்றும் நினைவில் நிலைநிறுத்தக்கூடியது.

  தலைநகரின் மையப்பகுதியில் வானுயரக் கம்பீரக் காட்சியளிக்கும் விஸ்மா துன் சம்பந்தன் கட்டடம் எழுவதற்கும் முன்னோடியாக இருந்த இவர், இளையப் பருவத்திலேயே பல அரும்பெரும் சாதனைகளை இயற்றியவர்.

  இந்தியாவின் விடுதலைக்காக அப்போது மலாயாவில் இருந்து போராடியவர், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தலைமை அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றியவர். மலேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று, சுதந்திர பிரகடனத்தைப் படித்த முதல் தமிழரும் இவரே!

  இவரின் அரும்பெரும் சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் கடந்த 2007ஆம் ஆண்டில் ‘பாரதிய சம்மான்’ எனும் உயரிய பாரத விருதை வழங்கி கெளரவித்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் போது, இந்தியாவின் அப்போதைய அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவ்விருதை வழங்கி மகுடம் சூட்டினார்.

  இத்தகு அரும்பெரும் சிறப்புகள் வாய்ந்த டான்ஸ்ரீ சோமசுந்தரம், இன்று தமது 88ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் இன்னும் நீடித்த ஆரோக்கியத்துடன் சமூகநல நடவடிக்கைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துவதாக எஸ்.பி.மணிவாசகம் குறிப்பிட்டார்.

  அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக 1 கோடி ரூபாய் நிதியை வழங்கி பெரும் ஆதரவு தெரிவித்த உலகத் தமிழர்களில் முதன்மையானர் டான்ஸ்ரீ சோமசுந்தரம்.

  தவிர, டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய வாரியத்தின் வழி உள்நாடு - வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு சன்மானம் வழங்குகிறார். 

  டான்ஸ்ரீ சோமா கலை கலாச்சார வாரியத்தின் வழி, நாட்டில் மேடை நாடகங்கள் உயிர்ப்பெற வழிவகுத்துள்ளார். இதன் வழி, ஆரம்பப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன.

  கூட்டுறவுச் சங்கத்தின் வழியும் இலக்கியப் பரிசுகளை வழங்கி வருகின்றார். யூ.பி.எஸ்.ஆர், எஸ்.பி.எம். தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெறும் கூட்டுறவுச் சங்கத்தின் பிள்ளைகளுக்கு சிறப்பு ஊக்குவிப்பு நிதியும் மேற்கல்வி தொடர்கின்ற மாணவர்களுக்கு கல்விக் கடனுதவியையும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு மருத்துவச் சலுகைகளையும் வழங்கி நல்லாதரவு வழங்கி வருகின்றார்.

  விஸ்மா துன் சம்பந்தனிலுள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கம், பல கலைஞர்கள் - எழுத்தாளர்கள் - மேடைப் பேச்சாளர்களின் பிறப்பிடமாக விளங்கி வருகின்றது என சுட்டிக்காட்டிய எஸ்.பி.மணிவாசகம், இந்த அரங்கமும் டான்ஸ்ரீயின் நாமமும் எக்காலமும் மலேசிய இந்தியர்களின் இதயத்தில் நிலைத்திருக்கும் என்றார்.

   

  பின்செல்