ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  314 சிறார் பாலியல் குற்றச்செயல்களுக்கு தீர்வு!

  314 சிறார் பாலியல் குற்றச்செயல்களுக்கு தீர்வு!

  12/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 13: சிறார் பாலியல் குற்றச்செயல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதன் பின் 382 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார். 

  கடந்தாண்டு ஜூன் தொடங்கி இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் பதிவான இந்த 382 சம்பவங்களில் 314 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. தற்போது 68 குற்றச்செயல்கள் தீர்வுக்கான நிலுவையில் உள்ளன. 

  மிக குறுகிய காலகட்டத்தில் அதாவது ஓராண்டுக்குள் அதிகமான பாலியல் குற்றச்செயல்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக குவாலா பிலா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹசான் மாலேக் நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ அஸாலினா பதிலளித்தார். 

  கடந்தாண்டு ஜூன் 22ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சிறப்பு நீதிமன்றம், தென்கிழக்காசியாவிலே மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் முயற்சியாகும். சிறார்களை உட்படுத்தும் பாலியல் வல்லுறவு பிரச்சினைகளை விசாரிக்கவே இச்சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

  12 மாதங்களுக்குள் இச்சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற பிரதமரின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே பதிவு செய்யப்படும் குற்றச்செயல்களுக்கு குறுகிய காலத்தில் தீர்வு வழங்கப்படுகிறது. 

  சிறார் வல்லுறவு விவகாரங்களுக்கு தீர்வளிப்பதோடு விரைவான முறையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதும் நியாயமான தீர்ப்பும் வழங்கப்பட வேண்டுமென்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும். நிர்ணயிக்கப்பட்டதுபோல் கட்டம் கட்டமாக இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மாநில அளவில் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

   

   

  பின்செல்