ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உயர்ந்த நம்பிக்கை, மதிப்புமிகு கோட்பாடு நேர்மறை மனப்பாங்கை உருவாக்கும்!

  உயர்ந்த நம்பிக்கை, மதிப்புமிகு கோட்பாடு நேர்மறை மனப்பாங்கை உருவாக்கும்!

  12/03/2018

  img img

  சுகுனா அன்பழகன், கேமரன்மலை

  கடந்த வாரத்தில் உலக மகளிர் தினம் உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது.  இன்றைய நிலையில் நம் நாட்டில் ஆணுக்கு நிகராக பெண்கள் சாதனை புரிந்தாலும் ஒரு கால கட்டத்தில் அவர்களின் வயது, இதற்கெல்லாம் வரம்பாக அமைந்து விடுவதுபோல் ஒரு தோற்றம் இருக்கிறது. அதேவேளையில் பெண்களுக்கான மரியாதை எப்படி பார்க்கப்படுகிறது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

   

  பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை, அடக்கத்தை அணிகலனாக்கியது. ஓர் ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். 

  அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண்மை குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். எந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை. பெண்கள் சமுதாயம்,  அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று கல்வி. இரண்டாவது, உலக ஞானம். 

  மூன்றாவது, தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை. இந்த நிலை நம் நாட்டில் ஏறக்குறைய வந்திருப்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. இதில், 35 வயதுக்கு மேல் பெண்களின் நிலைமை பல வீடுக்ளில் கேள்விக்குறியாகி விடுகிறது. கணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார். 

  இத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது. இப்படி முன்பு இருந்த நிலை இன்று மாறி இருக்கிறது. இன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். 

  எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு தோட்டப்புற பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள். வருமானம், குடும்பம் என்பனவற்றில் ஆண், பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். 

   

  குணசேகரன் ராமன், கேமரன்மலை

  கடந்த நான்கு ஆண்டுகளாக கேமரன் மலையில் உங்களின் சேவையை வழங்கி வருகிறீர்கள்.  இதில் அடிப்படையானது கல்வி, அந்த ரீதியில் அங்கு பள்ளிகளின் கல்வித் தரமும் நிலையும் எப்படி இருக்கிறது? உங்கள் உதவி அதில் எவ்வாறு அமைந்துள்ளது? 

   

  கேமரன்மலையிலுள்ள பள்ளிகளுக்கு பல்வேறு நல்லுதவிகளை வழங்கி வருகிறேன். ஆனாலும், இன்னும் சில பிரச்சினைகள் பள்ளி மாணவர்களிடையே நிலவுகின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நேரடியாக மைபிபிபியிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன்.  

  அப்போதுதான் பிரச்சினைகளுக்கு நாம் விரைந்து தீர்வு காண முடியும். என்னைப் பொறுத்தவரை பள்ளியில் கல்வி மேற்கொள்ளும் மாணவனோ மாணவியோ ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால், கல்வியைத் தொடர முடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்று நினைப்பவன் நான்.  

  இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளோ, சீனப் பள்ளிகளோ, தேசியப் பள்ளிகளோ, எதுவாக இருப்பினும் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பின் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற திட்டத்தைத் தொடங்கியபோது, கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அதிமுக்கியத்துவம் வழங்கப்பட்டது. 

  அதனால்தான் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு தாய்மொழி நாளிதழை இலவசமாக வழங்கி வருகிறோம். அதோடு, தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வழங்கி வருகிறோம். 

   

   

  அன்னலட்சுமி சின்னையா பிள்ளை, கேமரன்மலை

  கேமரன்மலையிலுள்ள ஹைனான் சமூகத்தினரின் அன்பால் நீங்கள் மெய்சிலிர்த்து போனதாக, அண்மையில் கூறினீர்கள்? ஒரு சமுதாயத்தின் தலைவராக இப்படி மக்களோடு மக்களாக இயங்கி அவர்களின் பற்றுதலைப் பெறும் போது உங்களுக்கு எப்படி இருந்தது? 

   

  கேமரன்மலை மக்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் அடிமையாகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு களப்பணி ஆற்றிவருகிறேன். இன்று இங்குள்ள மக்கள் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளதானது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

  சீனப் பெருநாள் கொண்டாட்டத்தில் இங்குள்ள பலதரப்பட்ட சீன சமூகத்தினர் எனக்கு அழைப்பு விடுப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றார் அவர். கடந்த 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் கேமரன்மலை ஹைனான் அமைப்பு, இதுநாள்வரை 'சாப் கோ மே' கொண்டாட்டத்திற்கு எந்த ஒரு சிறப்புப் பிரமுகர்களையும் அழைத்ததில்லை. 

  ஆனால், 2018ஆம் ஆண்டு முதன்முறையாக என்னை அழைத்தது என் மனதுக்கு மிகவும் ஒரு நெருக்கமான ஒன்றாக இருந்தது. 

   

  புவனேசன் மோகன், கேமரன்மலை

  கேமரன்மலையில் மிகவும் முக்கியமானவர்களான 'ஓராங் ஆசால்' மக்களுக்கு உங்களின் திட்டங்கள்?

   

  கேமரன் மலையில் 27 'ஓராங் ஆசால்' கிராமங்களின் நலனைக் காப்பதோடு, அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். கல்வி, ஆரோக்கியம், அடிப்படை வசதிகள் என்ற மூன்று  முக்கிய கூறுகளை முன்னிறுத்தி 'ஓராங் ஆசால்' மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. 

  அந்த வகையில், சாலை நிர்மாணிப்பு, கழிப்பறை, சேப்பாக் தக்ராவ் அரங்கம், சூராவ் போன்றவை சில கிராமங்களில் அமைத்துத் தரப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இந்த மலைப் பிரதேசத்தில் 'ஓராங் ஆசால்' மக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தாம். ஆகையால், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டும்.

  'ஓராங் ஆசால்' மக்களுக்காக இதுவரை சில உருமாற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதன் வழி, முன்னேற்றமடைந்த 'ஓராங் ஆசால்' கிராமங்களை கேமரன்மலையில் உருவாக்க முடியும். இனி அடிப்படை வசதிகளற்ற 'ஓராங் ஆசால்' கிராமங்கள் இருக்கக் கூடாது என்ற தேசிய முன்னணியின் இலக்கை நிறைவுசெய்யும் பெரிய முயற்சி. 

   

  இளங்கோ, தானா ராத்தா, கேமரன்மலை

  சேமிப்பு என்பது மனிதருக்கு ஒருவித தற்காப்பு. இந்த தற்காப்பை நாம் குழந்தைகளிடத்தில் இருந்து கொண்டு வருவது மிகவும் அவசியமாகிறது. இதில் உங்களின் கருத்து என்ன? 

   

  இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு; சிறு துளி பெரு வெள்ளம் என பெரியவர்கள் கூறுவது உண்டு. சிறுக சிறுக சேமிக்கும் பணம் ஒரு நாள் பெரும் தொகையாக அதிகரித்து குடும்ப அத்தியாவசியத் தேவைக்கு உதவும் வகையில் அமைவதை குடும்பத்தினர் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். அந்தளவுக்கு நம் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சேமிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

  இ வாலட், நெட் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு போன்ற இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் இக்கால கட்டத்திலும் மாணவர்களை சிறு  சேமிப்பில் ஈடுபடுத்துவது அவசியம்.  சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பான்மை திட்டங்கள் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக சேமிப்பதாக உள்ளன. குழந்தைகள் குறிப்பாக மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை பள்ளிகளே ஊக்குவிக்க வேண்டும். சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். 

  ஏதோ ஒரு ரிங்கிட்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், பிறகு சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரிங்கிட், ஐந்து ரிங்கிட், பத்து ரிங்கிட் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும். தந்தையிடமோ, தாயிடமோ நூறு ரிங்கிட் வேண்டும் என அவசியமான தேவைகளுக்கு அவசரமாக கேட்கும்பொழுது கிடைக்காமல் போகலாம். 

  ஆனால் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் சிக்கலானதாக இருக்க வாய்ப்பில்லை. அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. இது போன்ற நிகழ்வுகளில் சிறு வயதில் ஏற்படும் மகிழ்ச்சி வளரும் பருவத்தில் சேமிப்பின் மீதான ஈர்ப்பினை தொடர்ந்து அதிகரிக்கச் செய்யும். 

   

  லோரன்ஸ் அம்புரோஸ், தாமான் மேவா பிரிமா, பீடோர்

  வாழ்வில் எவையெல்லாம், மனித மனப்பான்மையை உருவாக்கும் கூறுகள் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?

   

  மனிதனை சுற்றியும், மனிதரோடு இருக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, அனுபவம், கல்வி, நம்பிக்கைகளும் மதிப்புமிகு கோட்பாடுகள் போன்றவையே அந்த கூறுகள் என்றே, நான் நம்புகின்றேன். 

  சுற்றுப்புறச் சூழ்நிலைகள் என்று சொல்லும்போது, ஒருவனது மனப்பான்மை அவன் வளர்ந்து, வாழ்ந்த, வாழும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பொறுத்து உருவாகிறது. மகிழ்வான, ஆக்கப்பூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. 

  எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே, நேர்மறை மனப்பான்மை நாடுவோர் நல்ல சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து வளர, வாழ முற்பட வேண்டும். அடுத்ததாக வாழ்க்கையில் நல்ல அனுபவங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளை அடைந்தவர்கள் நேர்மறை மனப்பாங்கையும், அவ்வாறு அடையாதவர்கள் எதிர்மறை மனப்பாங்கை உருவாக்கிக் கொள்ளுவதையும் கண் கூடாகக் காணமுடியும். 

  மூன்றாவதாக, ஒருவனது மனப்பாங்கை உருவாக்குவதில் அவரது கல்வி மிக முக்கியப் பங்காற்றுகிறது. பொருள் பொதிந்த கல்வி பெறுபவர்களது மனப்பாங்கு நேர்மறையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வரும், ஒருவரது மனப்பாங்கு உருவாவதில் அவரது தனி, தன் நம்பிக்கையும், கொள்கைகள், கோட்பாடுகளும் பெரும் பங்காற்றுகின்றன. 

  நேர்மறை மனப்பாங்கை உருவாக்கிக் கொள்ள விழைவோர்கள் உயர்ந்த நம்பிக்கைகளையும், மதிப்புமிகு கோட்பாடுகளையும் முயன்று மேற்கொள்ள வேண்டும்.

   

  பின்செல்