ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பேராசைக்கு பதில் சொல்லும் கதை!

  பேராசைக்கு பதில் சொல்லும் கதை!

  12/03/2018

  img img

  'மனிதனின் தேவை என்னவோ, அவை எல்லாமே போதுமான அளவுக்கு இந்த உலகில் இருக்கின்றன. ஆனால், அவனின் பேராசைக்குத் தீனி போட அவற்றால் முடியாது’ - தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. 

  செல்வம், செல்வாக்கு, பதவி, வாழ்க்கை வசதிகள்... அத்தனையும் கிடைத்துவிட்டாலும், 'இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்...' என அலைகிற மனிதனை திருப்திப்படுத்தவே முடியாது. 'போதும்' என்கிற மனம் வாய்த்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அந்த மனமில்லாமல் பேராசைப்படுபவர்கள், அதற்கானப் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த நீதியைச் சொல்லும் பழைய கதை இது... 

  ஃபிரான்ஸிலிருக்கும் சிறு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். வாழ்க்கையில் முன்னேறத்  துடிக்கும் வயது. அப்பா, விவசாயி. அவனுக்கோ வியாபாரத்தில் நாட்டம். என்ன தொழில் செய்தால், வாழ்க்கையில் ஒரு படி உயரலாம் என்கிற எண்ணம்தான் சதா அவனுக்கு. 

  ஒரு நாள் அவனிருந்த கிராமத்துக்கு வழிப்போக்கர் ஒருவர் வந்தார். பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வந்த தேசாந்திரி அவர். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான் இளைஞன். நன்கு உபசரித்தான். அவர் சாப்பிட்டு முடித்த பிறகு, அவரின் பயணக் களைப்பெல்லாம் நீங்கிய பிறகு அவருடன் பேச ஆரம்பித்தான். 

  அவர் போய் வந்த நாடுகள், மனிதர்கள், பார்த்த அற்புதமான இடங்கள், அரிய தாவரங்கள், உயிரினங்கள்... என நீண்டுகொண்டே போனது பேச்சு. ஒரு கட்டத்தில், தன் ஆசையை அவரிடம் தெரிவித்தான் இளைஞன். "ஐயா... நான் ஏதாவது ஒரு தொழில் செய்ய விரும்புகிறேன். ஆனால், என் குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு அந்தத் தொழில் லாபம் பெற்றுத் தர வேண்டும். என்ன வியாபாரம் செய்யலாம்... யோசனை சொல்லுங்கள்" என்றான். 

  அந்த தேசாந்திரி, வெங்காயமே இல்லாத ஒரு நாட்டைப் பார்த்ததாகக் கூறினார். "என்னது... வெங்காயமே இல்லாத நாடா... வெங்காயம் இல்லாம அங்கே ஒரு சமையலா... அப்புறம் எப்படி சாப்பாடு ருசிக்கும்?" ஆச்சர்யப்பட்டுப் போனான் அந்த இளைஞன். அந்த நாட்டுக்குச் சென்று, வெங்காயத்தை அறிமுகப்படுத்தி விற்றுவிட்டு வந்தால், வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்கு செல்வம் சேர்த்துவிடலாம் என்று தெரிந்தது. இந்தத் தகவலைச் சொன்னதற்காக அந்தப் பயணிக்கு நன்றி சொன்னான். அங்கே போவதற்கான வழியை விசாரித்து வைத்துக்கொண்டான். 

  ஒரு நல்ல நாளில், ஒரு வண்டி நிறைய வெங்காயங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு அந்த நாட்டுக்குப் பயணமானான். பல நாள்களுக்குப் பிறகு அங்கே போய்ச் சேர்ந்தான். நேராக அந்த நாட்டு அரண்மனைக்குப் போனான். காவலர்களிடம், தான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதாகவும், அரசரைப் பார்க்க அனுமதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு அனுமதி கிடைத்தது. 

  அரசர், அவனை விசாரித்தார். "அரசே... என் தேசத்திலிருந்து மிகப் பிரமாதமான பரிசு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தக் காய் என் தேசத்தில் விளைந்தது. ஆனால், உங்களுக்குப் புதுசு. எந்த உணவின் ருசியையும் மேம்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுக்குப் பேர் வெங்காயம். இதை உங்க நாட்டுக்கு அறிமுகப்படுத்தறதுக்காகவே கொண்டு வந்திருக்கேன்..." 

  அரசர் தன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்தார். கடைசியில்,  வெங்காயத்தைக்கொண்டு அந்த இளைஞனை உணவு தயாரிக்கச் சொன்னார். இளைஞன், தன் திறமையையெல்லாம் பயன்படுத்தி, தான் கொண்டு வந்திருந்த வெங்காயத்தைச் சேர்த்து பிரமாதமான ஒரு விருந்தைத் தயார் செய்தான். அன்று இரவு விருந்து நடந்தது. வெங்காயம் சேர்த்த உணவைச் சாப்பிட்டுப் பார்த்த அரசரும் மந்திரி, பிரதானிகளும் சுவையில் சொக்கிப் போனார்கள்.  

  அரசர் வெங்காயத்தைக் கொண்டு வந்ததற்காக இளைஞனுக்கு நன்றி சொன்னார். அவன் மீதம் வைத்திருந்த எல்லா வெங்காயத்தையும் பெற்றுக்கொண்டு, அதன் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.  இளைஞன் மகிழ்ச்சியோடும் வண்டி நிறைய தங்கக்கட்டிகளுடனும் ஊர் திரும்பினான். வழியில், இரவில் ஒரு சத்திரத்தில் அவன் தங்கவேண்டி வந்தது. அங்கே இன்னொரு வியாபாரியைச் சந்தித்தான் இளைஞன். இருவரும் பல விஷயங்களைப் பேசினார்கள். 

  பேச்சுவாக்கில் இளைஞன் தான் வெங்காயம் இல்லாத நாட்டுக்குப் போய்வந்த கதையைச் சொன்னான். கூடவே, அந்த நாட்டுக்காரர்கள் பூண்டு வாசனையையே அறியாதவர்கள் என்றும் சொன்னான். அந்த வியாபாரி ஆச்சரியப்பட்டுப் போனார். 'வெங்காயத்துக்கே இப்படி மயங்கிப் போனாங்கன்னா, பூண்டு சுவைக்கு நாட்டையே தந்தாலும் தந்துடுவாங்கபோல...' என்று நினைத்தார். அடுத்த நாள் காலை இளைஞன், அவரிடம் விடைபெற்று தன் கிராமத்துக்குக் கிளம்பினான். 

  அந்த வியாபாரி, ஒரு வண்டி நிறைய பூண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டார். அந்த இளைஞன் குறிப்பிட்ட தேசத்துக்குப் போனார். எல்லாம் வழக்கம்போல் நடந்தது. வியாபாரியும், இளைஞன் செய்ததைப்போலவே பூண்டைப் பயன்படுத்தி, தன் திறமையையெல்லாம் காட்டி, பல உணவுகளைச் சமைத்து, விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அரசரும், மந்திரி பிரதானிகளும் விருந்துக்கு வந்தார்கள். உணவின் சுவையில் கிறங்கிப் போனார்கள்.  வெங்காயம் தந்த சுவையைவிட, பூண்டு சேர்த்த உணவுகள் ஒரு படி மேலே சுவை கூட்டியிருந்தன. 

  அரசர், தன் மந்திரிகளை தனியே அழைத்துப் போனார். இவ்வளவு அற்புதமான சுவை நிறைந்த பூண்டைக் கொண்டு வந்திருக்கும் வியாபாரிக்கு என்ன பரிசு தரலாம் என்று நீண்ட நேரம் விவாதித்தார். கடைசியில், வியாபாரி கொண்டு வந்திருக்கும் பூண்டுக்கு தங்கம் ஈடல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். அதைவிடச் சிறந்த ஒன்றைப் பரிசாக வியாபாரிக்குக் கொடுக்க முடிவு செய்தார்கள். வேறென்ன... வெங்காயம்தான்! 

  அன்றிரவு அந்த வியாபாரி தன் வண்டி நிறைய வெங்காய மூட்டைகளுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.    

   

  பின்செல்