ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  யவனனின் பலவீனமே சதுர்யனின் பலம்!

  யவனனின் பலவீனமே சதுர்யனின் பலம்!

  26/02/2018

  img img

  ஓர் ஊரில் சதுர்யன் என்ற சிறந்த பலசாலி ஒருவர் வாழ்ந்து வந்தார். 60 வயதைத் கடந்து விட்டாலும், அந்த சுற்றுவட்டாரத்தில், அவருடன் சண்டையிட்டு வெல்ல யாராலும் முடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட பலசாலிகள் சதுர்யனை வெல்வதற்காக வந்து, தோற்று ஓடியிருக்கிறார்கள். சதுர்யனின் புகழ் நாடெங்கும் பரவியது. ஏராளமான மாணவர்கள் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.

  அந்த ஊருக்கு யவனன் என்ற இளைஞன் புதிதாகக் குடிவந்தான். அவனும் நல்ல உடற்கட்டுடன் பலசாலியாக இருந்தான். சதுர்யன் அளவுக்கு இல்லையென்றாலும் கூட, ஓரளவுக்குப் பெயர் பெற்றவனாகவே இருந்தான். எப்படியாவது சதுர்யனை சண்டையில் வீழ்த்தி, 'மிகச்சிறந்த பலசாலி' என்று பெயரெடுக்க வேண்டும் என்று விரும்பினான் யவனன்.

  ஒருநாள் யவனன், தன் விருப்பத்தை சதுர்யனின் சீடன் ஒருவனிடம் சொல்லி அனுப்பினான்.

  சதூர்யனும் சண்டையிட ஒப்புக்கொண்டார். அந்தநாள் வந்தது. களத்தில் சதுர்யனும், யவனனும் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்கள்.

  சதூர்யனை வெல்வது எளிதல்ல என்பது யவனனுக்குத் தெரியும். மனதளவில் அவரைச் சிறுமைப்படுத்தி, உளவியல் ஊனத்தை உண்டாக்கி வென்றுவிடவேண்டும் என்ற திட்டத்தோடு இருந்தான் யவனன்.

  முதலில், கொடிய வார்த்தைகளால் சதுர்யனைச் சீண்டினான். சதுர்யனோ "யாருக்கோ அந்தச் சொல்" என்பதுபோல் நின்றுகொண்டிருந்தார்.

  அடுத்தாக, கீழே கிடந்த சகதியை அள்ளி சதுர்யனின் மீது வீசினான். எந்தவித சலனமும் இல்லாமல் நிதானமாக இருந்தார் சதுர்யன்.

  'நாம் இவ்வளவு அசிங்கப்படுத்துகிறோம், ஆனாலும் எதுவும் நடக்காதது போல் இருக்கிறாரே? இப்படி இருந்தால் நாம் எப்படி வெல்வது' என்று ஆத்திரப்பட்ட யவனன் சதுர்யனின் மீது காரி உமிழ்ந்தான்.

  அதையும் துடைத்துவிட்டு பொறுமையாக இருந்தார் சதுர்யன். எரிச்சலுற்ற யவனன் அவரைத் தாக்க ஆரம்பித்தான்.

  அதற்காகவே காத்திருந்தவராக யவனனின் அத்தத் தாக்குதல்களை எளிதாகச் சமாளித்துப் போட்டியில் வென்றார் சதுர்யன்.

  சதுர்யனின் சீடர்கள் கொண்டாடினர். ஆனாலும் அவர்களுக்கு தன் குருவின் செயல்பாடுகளில் குழப்பமும், கேள்வியும் இருந்தது.

  "எவ்வளவு பெரிய பலசாலி நீங்கள். ஆனால், அந்த இளைஞன்  உங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தியும், ஏன்  அமைதியாக இருந்தீர்கள்?"

  மிகவும் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார்  சதுர்யன்,

  "உங்களுக்கு ஒருவர் நூறு பொற்காசுகள் பரிசாகத் தருகிறார். ஆனால், அதை நீங்கள் அவரிடம் வாங்கிக் கொள்ளவில்லை. இப்போது அந்த பொற்காசுகள் உங்களிடம் இருக்குமா? இல்லை அவரிடம் இருக்குமா?"

  "வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நம்மிடம் எப்படி இருக்கும். அவரிடம்தான் இருக்கும் குருவே ".

  "பிறர் உங்களைக் கடும் சொற்களால் திட்டினாலும், வேறு வகைகளில் அவமானப்படுத்தினாலும், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான் உங்களுக்கு வந்து சேரும். இல்லையென்றால் அது உங்களைச் சேராது" என்றார் அமைதியாக.

  "சரி குருவே! போட்டியில் உங்கள் உத்தி வித்தியாசமாக இருந்தது. அந்த இளைஞன் சுதாரிக்கவியலாத அளவுக்கு நுட்பமாக செயல்பட்டீர்கள். அதுபற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்"

  "சண்டையிடும்போது முதலில் எதிராளியின் பலவீனத்தை அறிந்து கொள்ளவேண்டும். 'எதிராளியை தாழ்த்திப்பேசி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம், அதுதான் தன் பலம்' என்று நம்பிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

  ஆனால், உண்மையில் அதுதான் அவனது பலவீனம். அதை நான் எளிதாக உணர்ந்துகொண்டேன். இறுதியாக அவன் தன்னளவில் நம்பிக்கை குறைந்து சோர்ந்து போயிருந்தான். அதனால்தான் என்னால் எளிதாக வெல்ல முடிந்தது" என்றார்.

   

  "குருவே நீங்கள் உடலளவில் மட்டும் அல்ல, மனதிலும், அறிவிலும்கூட பலம் வாய்ந்தவர். அதனால்தான் யாராலும் இன்னும் உங்களை வெல்ல முடியவில்லை"! என்று கூறி அவரது பாதம் தொழுதார்கள் சீடர்கள்!

  பின்செல்