ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தமிழனின் ஒற்றுமைக்கு தமிழ்மொழியே அடித்தளம்!

  தமிழனின் ஒற்றுமைக்கு தமிழ்மொழியே அடித்தளம்!

  20/02/2018

  img img

  இக்கட்டுரை உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது. இக்கருத்து எத்தனைப் பேருக்குப் போய்ச் சேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எழுத வேண்டியது என் கடமை.

  தன் கடன் அடியேனைத் தாங்குதல்

  என் கடன் பணி செய்து கிடப்பது’

  என்ற நாவுக்கரசரின் சிந்தனையில் மூழ்கியபடியால் இக்கட்டுரையைத் தொடர்கின்றேன். நன்றாக நினைவில் வையுங்கள், கிறிஸ்துவுக்குப் பிறகு 8-ஆம் முதல் இன்று வரை தமிழர்கள் தொலைத்த மிகப் பெரிய அடித்தளம் ஒற்றுமை என்னும் உயிர்த்தாகம். இன்று வரை அதனை மீட்டெடுக்க முடியவில்லை. சிந்தித்துப் பார்க்கச் சில விடயங்களை முன் வைக்கின்றேன்.

                  

  எகிப்திய நாட்டில் இன்றுவரை பிரமிடுகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்களின் பிணங்கள் மம்மி என்ற பெயரில் பதப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. அரசர்கள் பயன்படுத்திய அத்துணைப் பொருட்களையும் சேதமில்லாமல் அப்படியே இன்றும் காண முடியும்.

   

  ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு எகிப்தியர்கள் தன் வரலாற்றினைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். 5,000 ஆண்டுகளையும் தாண்டிய நம் முன்னோர்களின் வரலாற்றினைக் கொஞ்சம் பாருங்கள். சங்ககால அரசர்களில் ஒருவருடைய அடையாளத்தையாவது நீங்கள் காட்ட முடியுமா? எங்கே போயிற்று அத்துணை அரசர்களின் அடையாளமும் ஆவணங்களும்? அதற்குப் பிறகு வந்த நம் இராஜராஜசோழனின் அரண்மனை எங்கே? அவருடைய சமாதியையாவது யாராலும்  காட்ட முடியுமா? பெருமையையும் பழமையையும் பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களே! சிந்திக்க வேண்டியத் தருணம் இது. தமிழர்களின் மிகத் தொன்மையான ஆவணங்கள் அனைத்தும் எங்கே? இவற்றிற்கெல்லாம் ஒரே காரணத்தைத் தான் கூற முடியும். நாம் ஒட்டுமொத்தமாகத் தொலைத்து விட்ட அந்த நான்கெழுத்து மந்திரம் சொல் ‘ஒற்றுமை.’

   

  ஆரியம் எனும் மாபெரும் தீயச் சக்தி நம் தமிழனின் வீழ்ச்சிக்கு இன்று வரை காரணமாயிருப்பதை ஒவ்வொரு தமிழர்களும் அறிந்திருக்கவில்லை. மீட்டெடுக்க முடியாத அந்த ஒற்றுமையை மீட்டெடுக்க முடியும் என்றால் நம் தாய் மொழியான தமிழால் மட்டுமே முடியும். கடந்த 1200 ஆண்டுகளைப் புரட்டிப் பார்த்தால், தமிழனின் வீழ்ச்சியையேக் காண முடியும். ஆனால், 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, இன்று வரை யாரிடமும் வீழாமல், தனித்து நின்று வீரப்போராட்டம் நடத்தும் நம் தாய்மொழியினை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

   

  தாய்மொழியால் ஒன்றிணைந்த எந்த இனமும் அழிந்ததாக சரித்திரமே இல்லை. எகிப்தியர்களின் வரலாறு மம்மியில் இருந்தால், நம் தமிழர்களின் வரலாறு நம் தாய் தமிழில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், சங்க இலக்கிய நூல்களே இதற்குச் சான்றாகும்.

   

  இரண்டாம் நூற்றாண்டில் பிறந்த சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அவர்கள்,

   

  பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து

  குமரிக்கோடும் கொடுங்கடல் கொளள்’

   

  என்பதன் மூலம் குமரிக்கண்டம் பற்றி ஒரு வரலாற்றுப் பதிவினைச் செய்கின்றார். தமிழின் மிகத் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் நிறைய ஆவணங்களை விட்டுச் சென்றிருக்கிறார். புறநாநூற்றில் அத்துணை அரசர்களின் பெயர்களும் கோடிகாட்டப்பட்டுள்ளன. ஆக, நம் ஒட்டுமொத்த வரலாற்றினையும் காப்பாற்றியப் பெருமை தமிழுக்குத் தவிர வேறு யாருக்கு உண்டு? ஆக, தொலைத்து விட்ட ஒற்றுமையை மீண்டும் புதுப்பிக்கத் தமிழால் மட்டுமே முடியும் என்பது இதன் வழித் திண்ணம்.

   

  பொதுவாகவே தமிழனுக்குப் ‘பன்னாடை’ எனும் நோய் ஒன்று உள்ளது. பன்னாடை என்பது வேட்டுவர்கள் தேனெடுக்கப் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். ஒழுகும் தேனைச் சுத்தமாக வடிகட்டப் பயன்படுத்தப்படுவது இந்தப் பன்னாடை. அதாவது, தேனோடு சேர்ந்து வரும் பூச்சுகள்,வண்டுகள்,தூசுகள் யாவற்றையும் இப்பன்னாடைச் சுத்தமாக வடிகட்டிவிடும்.

   

  அதேபோல், நல்லதையெல்லாம் விட்டுவிட்டு, கெட்டதை மட்டும் எடுத்துக் கொள்ளும் பண்புதான் இந்தப் பன்னாடைச் சிந்தனை. நல்லது ஆயிரம் இருந்தாலும், தமிழர்களின் ஒட்டு மொத்தச் சிந்தனையை நாம் சல்லடையைப் போட்டு அலசிவிடலாம். சினிமா மற்றும் சீரியல் மோகம், சாதீயச் சிந்தனை, குடிகாரப்பண்பாடு, கோயில்கள் கட்டும் பெருமை, குண்டர்கும்பல் சீரழிவு போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

   

  இது போன்றப் பன்னாடைச் சிந்தனையை விட்டொழித்தாலொழிய இவ்வினம் மீட்சி பெறுவது கடினம். ஆனால், இவை அனைத்தையும் அப்புறப்படுத்தத் தமிழால் மட்டுமே முடியும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். மலேசியத் தமிழர்களாகிய நாம் இக்கனவை நனவாக்க முடியும். உலக தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் இக்கட்டுரையை வாசிக்கும் அனைவருக்கும்  ஓர் அன்பான வேண்டுகோள். அன்புகூர்ந்து ஒன்றிணையுங்கள். தமிழனின் ஒற்றுமை தமிழைத் தவிர வேரெங்கிலும் இல்லை என்று உணர்க. நம் உணர்வுகளை மதித்து நமது மலேசிய அரசாங்கம் வழங்கியிருக்கும் தாய்மொழி உரிமையை உணர்ந்து அதனை நிலைநாட்ட ஒன்றிணைவது அவசியம்,அவசரமும் கூட. உலக தாய்மொழி தினம் என்பது நமக்கு ஒலிக்கப்பட்ட கடைசி அவசர மணியாகும். அபாய மணியாகவும் அதனைக் கருத வேண்டும்.

   

  மலேசியத் தமிழர்களாகிய நாம் உலகத் தமிழர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதற்கு நம் தாய்மொழியாம் தமிழ்மொழி ஓர் அடித்தளமாகும். நாட்டில் இருக்கும்  526 தமிழ்ப்பள்ளிகள் நம் இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். அரசாங்கம் வழங்கியிருக்கும் இச்சலுகையினை இழந்துவிடாமல் இருக்க தாய்மொழிப்பற்று அவசியம்.

   

  நாட்டில் இருக்கும் அனைத்துத் தமிழ்ப்பள்ளியிலும் உலகத்தாய்மொழி தினம்  கொண்டாடப்பட வேண்டும். மாணவர்களின் மனதிலே தாய்மொழிப்பற்றினை விதைத்திடல் வேண்டும். அடுத்தத் தலைமுறையினைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு உலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்!

    

  பின்செல்