ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  முக்கியத்துவம் அறிந்து முன்னெடுக்கப்படும் உருமாற்றத் திட்டங்கள் தேசிய முன்னணிக்கான நம்பிக்கையை வலுப்படுத்தும்!

  முக்கியத்துவம் அறிந்து முன்னெடுக்கப்படும் உருமாற்றத் திட்டங்கள் தேசிய முன்னணிக்கான நம்பிக்கையை வலுப்படுத்தும்!

  12/02/2018

  img img

  துரைச்செல்வன்

  படம்: ஜனாதிபன் பாலன்

   

  தானாராத்தா, பிப். 12: தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மைபிபிபி, மக்களுக்காக முன்னெடுக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த உருமாற்றத் திட்டங்கள் 100 விழுக்காடு வெற்றிபெறுவதை உறுதி செய்யும் என்பதோடு, அத்திட்டங்களின் வாயிலாக தேமுவின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என மைபிபிபி முதன்மை உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டென்னிஸ் டி'குருஸ் உறுதி கூறினார்.

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது, கேமரன்மலையில் மைபிபிபி போட்டியிடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில், இங்குள்ள ஓராங் அசால்' கிராம மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்படுத்த மைபிபிபி எண்ணற்ற திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றில், நேற்று முன்தினம் கம்போங் லெமோயிலில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் மைபிபிபி மீது 100 விழுக்காடு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

  கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, கல்வியாளர்களை உருவாக்க முடியும். அந்தக் கல்விமான் நாட்டை நல்வழியில் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருப்பார். டிஎன்50இன் வெற்றிக்கு இந்தக் கல்விமான்கள் கண்டிப்பாகப் பெரும் பங்காற்றுவர் என்பது திண்ணம். அந்த நோக்கத்தில்தாம் கேமரன்மலையில் பல்வேறு உருமாற்றத் திட்டங்களை மைபிபிபி மேற்கொண்டு வருகிறது என நேற்று முன்தினம் இங்குள்ள கம்போங் லெமோயில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நடவடிக்கைக்குப் பின்னர் தகவல் தொடர்பு பண்பாட்டுத் துறையின் முன்னாள் துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ மெக்லின் தெரிவித்தார்.

  'அங்கிள் போண்ட்' என்ற அடைமொழியின் வாயிலாக ஓராங் அசால் மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கேமரன்மலை வாசிகளையும் தம்வசம் இழுத்து வைத்துள்ள எங்கள் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பதில் பெருமை கொள்கிறோம். ஓர் உண்மையான அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இவரைத்தாம் நாங்கள் உதாரணமாகக் கொள்கிறோம்.

  கடந்த மூன்று ஆண்டுகளாக கேமரன்மலை மக்கள் இந்த உண்மையை நன்கு உணர்ந்திருப்பார்கள். நமக்கான தலைவர் அவர்தாம் என்பதைவிட, எங்களின் உரிமைக்காகப் போராடப் போகும் 'பிரதிநிதி' என்று அவருக்கான தளம் தற்போது மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவே, வரும் 14ஆவது பொதுத் தேர்தல் களத்திற்கான ஒரு மைல்கல் என்பதும் வெளிப்படுகின்றது என டத்தோஶ்ரீ மெக்லின் தாய்மொழியிடம் விளக்கினார்.

   

   

  பின்செல்