ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பிட்காயின் மாயம்

  பிட்காயின் மாயம்

  10/01/2018

  img img

  கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிட்காயின் பற்றித் தெரியாதவர்கள் அநேகர். ஆனால், 2017இல் ஒரு பிட்காயினின் மதிப்பு, பத்தாயிரம் டாலர்களைக் கடந்து உச்சத்தைத் தொட்ட பின்னர், இந்த 'இணைய நாணயம்' பிரபலமாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் வாங்கி வைத்தவர்கள், இப்போது கோடீஸ்வரர்கள் என்று சொல்லப்படுவதும் பிட்காயின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.

  சரி, இந்த ஆண்டு பிட்காயின் மதிப்பு எப்படி இருக்கும், ஏறுமா, இறங்குமா? 'கிரிப்டோ கரன்ஸி' எனப்படும் எண்ம நாணய வகையைச் சேர்ந்த பிட்காயினின் அடிப்படை மீது நம்பிக்கை கொண்டவர்கள் பிட்காயின் மதிப்பு உயரும் என்றே சொல்கின்றனர். அயர்லாந்து பிளாக்செயின் சங்கத்தின் தலைவர் ருபேன் காட்பிரே அடுத்த சில ஆண்டுகளில் பிட்காயின் மதிப்பு 2 லட்சம் டாலர்களைத் தொடும் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்.

  இன்னொரு புறம், இது அங்கீகரிக்கப்படாத நாணயம் என்று இதன் பாதகமான அம்சங்களைச் சொல்பவர்கள், பிட்காயின் காற்றுப்போன பலூனாகும் என எச்சரிக்கின்றனர். ஆனால், ஒன்று நிச்சயம், பிட்காயினின் ஆதார பலமாகக் கருதப்படும் ‘பிளாக்செயின் நுட்பம்’ இந்த ஆண்டும் அதிகமாகக் கவனத்தை ஈர்க்க வாய்ப்பிருக்கிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், அதன் உறுப்பினர்கள் அனைவராலும் பராமரிக்கப்படும்போது, லெட்ஜர் முழுவதும் அப்டேட் செய்யப்படுவதைத்தான் பிளாக்செயின் என்கின்றனர். இந்த அடிப்படை நுட்பத்தை வங்கிகளும் நிதி அமைப்புகளும் ஏற்கெனவே தீவிரமாக ஆய்வுசெய்துவரும் நிலையில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இது பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

  எனவே, பிட்காயின் போக்கு மீதும் முக்கியமாக பிளாக்செயின் நுட்பம் மீதும் ஒரு கண் வைத்திருக்கலாம். பிட்காயின் மட்டுமல்ல, ஈதர், லைட்காயின் உள்ளிட்ட மாற்று எண்ம நாணயங்களும் தலைப்புச்செய்தியில் அடிக்கடி அடிபடலாம்.

   

  பின்செல்