ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி

  சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி

  08/05/2017

  img img

  மலேசியாவில் பிரசித்திப் பெற்ற தமிழ்ப்பள்ளியாகத் திகழும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பியாகத் திகழ்பவர் தலைமையாசிரியர் திருமதி கோகிலவாணி. 

  2009ஆம் ஆண்டு முதல் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைக் கண்ணும் கருத்துமாக வழிநடத்தி வந்த இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த இவர் பணிக் காலம் முடிந்து விடைபெறும் தருணத்தில் நிற்பது அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை மனம் நெகிழச் செய்துள்ளது. 

  நாட்டின் மிகச் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும், சிலாங்கூர் மாநிலத்தில் சிறந்த அடைவுநிலையைத் தொடர்ந்து பதிவுசெய்யும் பள்ளியாகவும், மாணவர்களின் கல்விச் சூழலுக்கு உகந்த உயர்தர வசதிகளை உள்ளடக்கிய இப்பள்ளிக்கு அரணாக திகழ்ந்தவர் திருமதி கோகிலவாணி என்றால் மிகையில்லை. 

  திரு.அ.கணபதி, திருமதி கு.அக்கம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்த இவர், பந்திங் தமிழ்ப்பள்ளியிலும், தெலுக் டத்தோ கூட்டுத் தமிழ்ப்பள்ளியிலும் தொடக்கக் கல்வியைக் கற்று, சுங்கை மங்கீஸ் இடைநிலைப்பள்ளி, மெதடிஸ் தெலுக் டத்தோ இடைநிலைப்பள்ளியில் சீராக கல்வி கற்று ஶ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று ஆசிரியரானார். 

  1986ஆம் ஆண்டில் காடோங் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர், பத்துமலைத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் தமது பணியைத் தொடர்ந்தார். பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராக பணியாற்றி, பின் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டார்.

  தலைமையாசிரியராக பதவி உயர்வு கண்டு, கிள்ளான், எமரல் தமிழ்ப்பள்ளி, ஷா ஆலம் தமிழ்ப்பள்ளி, பூச்சோங் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் சேவையாற்றிய அவர், 2009ஆம் ஆண்டு முதல் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு தலைமையேற்றார். 

  இவர் தமது பணி காலத்தில் பள்ளி வளர்ச்சிக்கு நிதிப் பற்றாக்குறை, வசதி குறைந்த பள்ளிச் சூழல், மாணவர் கட்டொழுங்கு பிரச்சினை, பள்ளி விதிமுறை அமலாக்கத்தில் சிக்கல், வேலைப்பளு, கட்டட நிர்மாணிப்பு பிரச்சினை, பள்ளியின் நற்பெயரை நிலைநாட்டுவதில் சிரமம் என எத்தனையோ சவால்களை எதிர்நோக்கியுள்ளார். 

  ஆனால், அவற்றை தமது அனுபவத்தாலும், விவேகமான சிந்தனையாலும் எளிதாக சமாளித்து, இன்றைய ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் சாதனைப் பெண்மணியாகவே வலம் வருகிறார். 

  இவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 1998ஆம் ஆண்டு சிறந்த சேவையாளர் விருது, 2008ஆம் ஆண்டில் சிறந்த தலைமையாசிரியர் விருது, 2011ஆம் ஆண்டில் சிறந்த சேவையாளர் விருது போன்றவை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 

  இன்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வானளாவிய புகழ் பெற்று திகழ்கின்றது என்றால், அதில் இவரது பங்கு அளப்பரியது எனலாம்.

  இவரின் பணி ஓய்வு காலத்தின் கட்டாயம் என்றாலும், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் இவரின் புகழை காலத்தால் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நல்லாசிரியர் திருமதி கோகிலவாணி கல்வித் துறைக்கு ஆற்றிய சேவைகளுக்கு தாய்மொழி நாளிதழ் கரம் கூப்பி நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றது. 

   

  பின்செல்