ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்!

  பார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்!

  03/05/2017

  img img

  ருபினா மேரி அம்புரோஸ்

  புத்தாக்கச் சிந்தனை ஆற்றல் உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தி வரும் வேளை அதனை செயல்வழியாக வெற்றிகரமாக செய்து முடிக்க ஆசிரியர்களின் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

  இதனை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறார் சம் இப் லியோங் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் பார்த்திபன் கோவிந்தசாமி. 5 வருட கால ஆசிரியர் துறை அனுபவம் பெற்ற இவர் மலாய், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருகிறார். 

  புத்தாக்கச் சிந்தனை எனும்போது புதிய கண்டுபிடிப்புகளைச் சார்ந்து அமைகிறது. அறிவியல் பாடத்தை மையமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதர பாடங்களின் பயன்பாடும் இதில் அடங்கும் என்கிறார் ஆசிரியர் பார்த்திபன். 

  ஆராய்ச்சிகளை முறையாக செய்து முடிக்க அறிவியல் சிந்தனை, அளவுகளைக் கணக்கிட கணிதம், தகவல்களைத் திரட்ட மொழிப் பாடங்கள் என ஒரு மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு இந்தப் புத்தாக்கச் சிந்தனை ஊக்குவிக்கப்படுகிறது. அதோடு புதிய கண்டுபிடிப்புகளை மற்றவர்களுக்கு விளக்கிக் கூறும் போது மாணவர்களின் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் மெருகூட்டப்படுகின்றன. 

  புத்தாக்கச் சிந்தனையாற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற நடவடிக்கைகளில் பங்குபெற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வகையில் அண்மையில் மாநில அளவில் நடத்தப்பட்ட அறிவியல் விழாவில் பங்கேற்று புத்தாக்கப் படைப்புகளுக்காக இரண்டாம் நிலை பரிசை வாகை சூடினர் சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். 

  பாடப் புத்தகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி படைப்பு, பாடப் புத்தகத்தில் இல்லாத ஆராய்ச்சி படைப்பு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இரண்டாம் பிரிவான புதிய கண்டுபிடிப்புகளுக்காக இந்தப் பரிசை வென்றனர். 

  "சம் இப் லியோங் பகுதி மக்கள் ஆற்று நீரையும் ஊற்று நீரையும் பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை முறையில் சுத்தமான நீரைப் பெறும் வசதி இங்கு இல்லை. அதனை மையமாகக் கொண்டு இப்பகுதி மக்களுக்கு உதவும் அடிப்படையில் நீர் சுத்திகரிப்பு வடிதட்டை கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசை வென்றோம்" என்றார் ஆசிரியர் பார்த்திபன்.

  கருப்பு மணல், வெண்மணல், கரிக் கட்டை போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு வடிதட்டை உருவாக்க 1 மாத காலம் தேவைப்பட்டதாக அவர் சொன்னார். நீரின் சுத்திகரிப்பு அளவையினை இன்னும் அதிகரிக்க வெட்டி வேர் மூலிகையையும் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

  முதலில் மலேசிய நீர் வள ஆணையம், அனைத்துலக சுகாதார மையம் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நீர் சுத்திகரிப்பின் செயல்முறைகளைக் காணச் செய்ததோடு கண்டுபிடிப்பிற்கான ஆலோசனைகளையும் பெற்றுள்ளனர். அதோடு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் பயணம் மேற்கொண்டு நீர் சுத்திகரிப்பு குறித்த தகவல்களைத் திரட்ட அங்குள்ள நூல்நிலையத்தில் புத்தகங்களையும் இரவல் வாங்கியுள்ளனர். 

  பள்ளி நேரம் முடிந்தவுடன் மாணவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும். சில சமயங்களில் இரவு 7.00 மணி, 10.00 மணி வரையிலும் கூட மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியதாக அவர் சொன்னார். இதற்கு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே துணை புரிந்ததாக அவர் சொன்னார். 

  தற்போது இவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை கண்டறிந்து அதற்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி அவர்களின் தனித்திறமையை மெருகூட்டுவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அதனை முறையாக செயல்படுத்தி மாணவர்களின் சாதனைக்கு வழிவகுத்ததில் தம்முடைய பங்கும் இடம் பெற்றுள்ளதை எண்ணி ஆசிரியர் பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்தார். 

  புத்தாக்க கண்டுபிடிப்பில் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர் பார்த்திபன், தனித்திறமைகளை கொண்டவராகவும் விளங்குகிறார். சிறந்த பேச்சாற்றல் மிக்க இவர் அண்மையில் 'பேசு தமிழா பேசு' எனும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு 126 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மெய்ஃபா கூட்டுறவு கழக ஏற்பாட்டில் நிகழ்ந்த பட்டிமன்ற போட்டியில் சிறந்த பேச்சாளருக்கான இரண்டாம் பரிசை வென்றுள்ளார். 

  பெற்றோரின் விருப்பதை முன்னிட்டு ஆசிரியர் துறையைத் தெரிவு செய்திருந்தாலும் 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' என்ற பொன்மொழிகளை மனதில் நிறுத்தி செயல்பட்டுவருகிறார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறார்.

  ஓய்வு நேரத்தில் உணவு உட்கொண்ட பின்னர் மீதமுள்ள 10 அல்லது 15 நிமிடங்களில் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் மின்னல் வாசிப்பு திட்டத்தில் மாணவர்களுக்கு புரியாததை தெளிவாக விளக்கிக் கூறுவது, மாணவர் நலப் பிரிவின் கீழ் நடத்தப்படும் 'தினசரி ஒரு தன்முனைப்பு கருத்து' எனும் நடவடிக்கையின் கீழ் 5 நிமிட தன்முனைப்பு உரை வழங்குவது என இதர ஆசிரியர்களுடன் இவரும் தமது பொறுப்பை செவ்வனே செய்து வருகிறார். 

  தொடர்ந்து, 'தூக்கத்தில் வருவது கனவல்ல, தூங்கவிடாமல் செய்வதே கனவு' எனும் அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழிகளுக்கு ஏற்ப மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறார்களோ அதனை சிந்தனையில் நிறுத்தி உறுதிமொழி எடுக்க தினசரி சபைகூடலின் போது இரு நிமிடங்கள் அதற்காக ஒதுக்கப்படுகிறது. 

  டாக்டர், வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், விளையாட்டு வீரர், ஆசிரியர், போலீஸ் அதிகாரி, தொழில் அதிபர் என்று பல்வேறு துறைகளில் கால்பதிக்க மாணவர்கள் எண்ணம் கொண்டிருப்பர். இவர்களின் கனவை நனைவாக்க ஆசிரியர் என்ற முறையில் தம்மால் இயன்ற உதவிகளை செய்வதே தம்முடைய கனவு என்கிறார் ஆசிரியர் பார்த்திபன். இவரின் அறப்பணியில் சிறந்து சேவைகளை வழங்கிட தாய்மொழி நாளிதழின் வாழ்த்துகள்.  

   

  பின்செல்