ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாச்சாரம் வேரறுக்கப்படும்! சிறப்புப் பணிக்குழுவைத் தோற்றுவித்தது போலீஸ் படை

  பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாச்சாரம் வேரறுக்கப்படும்! சிறப்புப் பணிக்குழுவைத் தோற்றுவித்தது போலீஸ் படை

  21/04/2017

  img img

  ஷா ஆலம், ஏப்.22: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் இடைநிலைபள்ளிக்கு வெளியில் 'கேங் 24' குண்டர் கும்பலைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட அமளியைத் தொடர்ந்து, பள்ளிகளில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க சிலாங்கூர் போலீஸ் சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது என சிலாங்கூர் போலீஸ் படையின் துணை ஆணையர் ஃபட்ஸில் அகமட் தெரிவித்தார். 

  மாணவர்கள் மத்தியில் பரவிவரும் குண்டர் கும்பல் கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையேல், அது அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கி விடும். 

  மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை மிகத் தீவிரமாக கருதும் போலீசார், பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாச்சாரத்தை வேரறுக்கும் நோக்கில் இந்த சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது என நேற்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். 

  பள்ளிக்கு வெளியில் மோட்டார் சைக்கிளில் அமளியை ஏற்படுத்தியவாறு '24', 'ஜிஞி44' போன்ற பதாகைகளையும் கறுப்பு ஸ்வாஸ்திக் குறியீட்டையும் ஏந்தியவாறு பள்ளி சீருடையணிந்திருந்த சில மாணவர்கள் புரிந்த அட்டகாசங்கள் காணொளிகளாக பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  அதுகுறித்து கருத்துரைத்த அவர், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் பள்ளிக்கு வெளியில் 'கேங் 24' குண்டர் கும்பல் செய்த அராஜக நடவடிக்கையில் கைதான 18 பேரில் 13 பேர் மாணவர்களாவர். இதனை சாதாரணமாக எண்ணி விடாமல், குண்டர் கும்பல் கலாச்சாரம் மாணவர்கள் மத்தியில் மோசமடைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய சிறப்புப் பணிக்குழு செயல்படவுள்ளது என்று சொன்னார். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என துணை ஆணையர் ஃபட்ஸில் அகமட் உறுதிப்படுத்தினார். 

  இதனிடையே, வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் தாராளமாக கைது செய்யலாம். போலீசாரின் நடவடிக்கைக்கு கல்வி அமைச்சு முழு ஆதரவு வழங்கும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ மட்ஸிர் காலிட் தெரிவித்தார். 

  வன்முறையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கல்வி அமைச்சு சமரச பேச்சு வார்த்தை நடத்தாது. வன்முறை சம்பவம் என்பதால், அதில் சமரச பேச்சு வார்த்தை நடத்தி பயனில்லை. 

  சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை விட குண்டர் கும்பலில் ஈடுபடுவதையே விரும்புகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. 

  ஆகையால் போலீசாரின் நடவடிக்கைக்கு கல்வி அமைச்சு முழு ஆதரவு வழங்கும் என்று கோல கங்சார் நாடாளுமன்றத் தொகுதியின் கல்வி கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த அவர் கூறினார்.

  பின்செல்