சாலைகள் பந்தையக் களம் அல்ல! டான்ஸ்ரீ கேவியஸ் அறிவுறுத்து

சாலைகள் பந்தையக் களம் அல்ல! டான்ஸ்ரீ கேவியஸ் அறிவுறுத்து
img img

ரதி முனியாண்டி

கேமரன்மலை, ஏப்.22: சாலையைப் பந்தையக் களமாக பயன்படுத்தும் சிலரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏனெனில், அவர்கள் தத்தம் உயிரை மட்டுமன்றி, இதர வாகனமோட்டிகளின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சின் ஆலோசகரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் சாடினார். 

நமது வாகனமோட்டும் திறமையைப் பரிசோதிக்கும் அல்லது பறைசாற்றும் களம் சாலைகள் அல்ல. ஏராளமான பொதுமக்கள் பயணிக்கும் சாலையில், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது நமது நாட்டில் 'அவாஸ்' எனப்படும் தானியங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்புமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை மீறுதல், சமிஞ்சை விளக்குகளை பின்பற்றாமை போன்ற குற்றங்களுக்கு அபராத புள்ளிகள் விதிக்கப்படுகின்றன. 

இந்த அமைப்புமுறையின் கீழ் முதல் 20 புள்ளிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும். அடுத்த 20 புள்ளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அடுத்த 20 புள்ளிகளுக்கு அது முழுமையாக ரத்து செய்யப்படும். இந்த அமைப்புமுறை அமலுக்கு வந்துள்ளதால், சாலை குற்றங்கள் வெகுவாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என கேமரன்மலையில் சாலை போக்குவரத்து இலாகாவின் வாகனமோட்டும் பயிற்சிகளைப் பார்வையிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வாகனம் ஓட்டும் உரிமம் எடுக்கும் போது, கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்களை எப்போதும் அமல்படுத்துவது அவசியம். ஆனால், காலப்போக்கில் சிலர் அதனை அமல்படுத்துவதில்லை. 

இனி, பண்பான சாலை பயனர்களாக மலேசியர்கள் உருவெடுக்க வேண்டும். சாலை பந்தைய களம் அல்ல என்பதை அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும் என டான்ஸ்ரீ கேவியஸ் அறிவுறுத்தினார். 

படங்கள்: ஜனாதிபன் பாலன்

 

பின்செல்