ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலையில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கையும் கட்டுக் கதையும்

  கேமரன்மலையில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கையும் கட்டுக் கதையும்

  21/04/2017

  img img

  மைபிபிபி கட்சியினால் கேமரன்மலையில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான நலத் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் மஇகா, ஜசெக ஆகிய இரு கட்சிகளின் கூற்று நகைப்புக்குரியது என்பதோடு கவலையையும் அளிக்கின்றது. 

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை தொகுதியில் மஇகாதான் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார். 

  "கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவின் பாரம்பரியத் தொகுதி" என சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது நகைப்புக்குரியதாகவே அமைந்துள்ளது. ஒருவேளை, இப்படி கூறிக்கொள்வது உண்மையாக இருக்குமாயின், ஜனநாயகம் மடிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தங்களது பாரம்பரியத் தொகுதி என்றால், ஏன் இன்னும் வாக்குப்பெட்டிகளைக் கணக்கெடுக்காமல் இருக்கின்றது?

  "எங்களின் பாரம்பரியத் தொகுதி" என உங்களுக்குள்ளாக நீங்களே சொல்லிக் கொண்டிருக்கும் அந்தத் தொகுதியின் நிலை என்னவென்று வாக்குப் பெட்டி பகிர்வின்போதுதான் தெரியும். அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். 

  முந்தைய தேர்தலில் களத்தில் வெற்றி பெற்ற தொகுதியை மீண்டும் தங்கள் தொகுதி என்று சொந்தம் கொண்டாடும் முறையும், வாக்காளர்கள் அதே கலாச்சாரத்தைப் பின் பற்ற வேண்டிய கடமையும் இந்த உலகத்தில் எங்கேனும் இருக்கிறதா என்ற கேள்வியையும் மஇகா கருத்தில் கொள்ள வேண்டும்.

  மற்றொரு நிலவரத்தில், ஜசெக கட்சி வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது. வழக்கம்போலவே மூக்கை நுழைக்கும் போக்கை முன்னெடுத்துள்ளது எதற்குமே உதவாத ஜசெக. மஇகாவையும் மைபிபிபியையும் குற்றஞ்சாட்டுவதோடு, புளுகு மூட்டைகளைக் கட்டவிழ்த்துள்ளது ஜசெக. 

  மைபிபிபியும் மஇகாவும் சீட்டுக்காக சண்டையிட்டுக் கொள்கின்றன என்று கூறும் ஜசெக, "வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாய்ப் பளியுங்கள்" என நீலிக்கண்ணீர் வடிக்கிறது. 

  மைபிபிபி கட்சி பல்லின கட்சி இல்லை என்று கூறியுள்ள ஜசெகவின் கூற்றில் துளியளவும் உண்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு விவகாரம் குறித்து பேசும்போது, நாம் நியதியை முன்வைத்தே பேச வேண்டும். அந்த வகையில், மைபிபிபி பல்லின கட்சி இல்லை என்று சொல்லும் ஜசெக, சீனர்களை அதிகமாகக் கொண்ட கட்சி என்பதை மறுக்க முடியுமா?

  மைபிபிபி அதிகமாகவே பெருமிதம் அடைந்து கொள்கின்றது என நக்கலாக பேசியுள்ள ஜசெக, கடந்த பொதுத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மஇகாவிடம் தோல்வி கண்டு விரட்டியடிக்கப்பட்டதையும் பெருமிதமாகவே கொள்ள வேண்டும். 

  அரசியல் தலைவர் என்ற முறையில் களத்தில் இறங்கி பல சமூகங்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து நல்ல சேவையை வழங்கி வருகிறார் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள். நல்லதை செய்து கொண்டு வரும் அவரின் சேவைகள் மீது மஇகாவுக்கும் ஜசெகவுக்கும் என்னதான் பிரச்சினையோ கவலையோ தெரியவில்லை. 

  கேமரன்மலையில் பிரச்சினைகள் பல இருப்பதாக ஜசெக பட்டியலிட்டுள்ளது. அந்தப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வு காண ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதா என்பதை 400க்கும் மேற்பட்ட வாக்குகளில் தோல்வியுற்றதைப் பெருமிதமாகக் கொள்ளும் ஜசெக தெளிவுபடுத்த வேண்டும். 

  அதேவேளையில், பாரம்பரிய தொகுதி என கூறிக் கொள்ளும் மஇகாவும் இங்கு என்ன செய்தது என்பதையும் தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்வதுதான் சிறப்பு. 

  ஒவ்வொரு முறையும் கேமரன்மலைக்கு வருகை மேற்கொள்ளும் மைபிபிபி, அங்குள்ளவர்களை சந்திப்பதோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து வருகிறது. அந்த வகையில், மைபிபிபி மேற்கொள்ளும் சமூக நல உதவிகள், இல்ல பராமரிப்புகள், நோயாளிகளுக்கான உதவிகள், இளைஞர்களுக்கான திட்டமிடல்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கான உருமாற்றத் திட்டங்கள் அனைத்தும் தேசத்துக்கு எதிரான கிரிமினல் குற்றமா?

  நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பொதுமக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதுதானே அரசியல் நாகரிகம். இதைக் கூடவா மஇகாவும் ஜசெகவும் அறிந்திருக்கவில்லை?

  இது எங்களின் பாரம்பரிய தொகுதி என்பதையும் நாங்கள் 400க்கும் மேற்பட்ட வாக்குகளில் மட்டுமே தொகுதியை இழந்து விட்டோம் என்று கூறுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களைப் போன்று, சொல்வதைச் செய்து காட்டுங்கள். அதன் பின்னர் வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும். அதுவே ஜனநாயகம். அதுதான் வெற்றிபெறுவதற்கான தலைசிறந்த உதாரணம் என கோலாலம்பூரைச் சேர்ந்த ஜே.டி. லொவ்ரென்சியர் தமது அறிக்கையில் மஇகாவுக்கும் ஜசெகவுக்கும் ஆலோசனையாக வலியுறுத்திக் கூறினார். 

   

  பின்செல்