ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கற்றோர் மத்தியில் மோசமடையும் ஊழல்!

  கற்றோர் மத்தியில் மோசமடையும் ஊழல்!

  20/04/2017

  img img

  ஆராவ், ஏப். 20: ஊழலுக்கு ஆதரவு அளிப்பதில் உயர்கல்விக் கூட மாணவர்கள் கொண்டிருக்கும் மனநிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) தெரிவித்துள்ளது. 

  கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களிடையே ஊழலை தடுக்கும் செயல் நடவடிக்கைகளின் விளைபயன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,000 மாணவர்களில் 16 விழுக்காட்டினர் ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் எண்ணத்தைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது என அவ்வாணையத்தின் துணைத் தலைமை இயக்குனர் டத்தோ ஷம்சுன் பஹ்ரின் முகமட் ஜமில் குறிப்பிட்டார். 

  எனினும், கடந்த 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதே ஆய்வில் அந்த எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடாகவும் 2014ஆம் ஆண்டு 11.3 விழுக்காடாகவும் இருந்தது. 

  மேலும், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 18.2 விழுக்காடு மாணவர்கள் தங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க லஞ்சம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

  அதனைத் தவிர்த்து, ஊழல் குறித்து புகார் கொடுக்க முன்வர நினைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 74.9 விழுக்காடாகவும் 2015ஆம் ஆண்டு 74.1 விழுக்காடாகவும் இருந்த அவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டும் வெறும் 66.3ஆக மட்டுமே பதிவாகியுள்ளது. 

  ஊழல் குறித்து புகார் செய்தால், தங்களுக்கு எதிர்மறையான பாதிப்புகள் விளையக்கூடும் என்று மாணவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவ்வாறு புகார் கொடுப்பவர்கள் புகார் கொடுப்போர் சட்டம், சாட்சி பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாதுகாக்கப்படுவர். எனவே, புகார் கொடுக்க நினைக்கும் தரப்பினர் தங்களின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுவிடுமோ என்ற பயம் கொள்ளத் தேவையில்லை என்று டத்தோ ஷம்சுன் பஹ்ரின் நினைவுறுத்தினார். 

  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 162 நபர்கள் மட்டுமே எஸ்பிஆர்எம்மை அணுகி, தைரியமாக அத்தகைய புகார்கள் அல்லது தகவல்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

  இதனிடையே, மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் ஊழலை ஒழிக்கும் உறுதிமொழியில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட போது டத்தோ ஷம்சுன் பஹ்ரின் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

   

  பின்செல்