ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அனைத்து நிலை மக்களையும் நானே தேடி வருவேன்! கேமரன்மலை மக்களுக்கு டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி

  அனைத்து நிலை மக்களையும் நானே தேடி வருவேன்! கேமரன்மலை மக்களுக்கு டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி

  19/03/2017

  img img

  ரிங்லெட், மார்ச் 20: கேமரன்மலையில் வசிக்கும் அனைத்து நிலையிலான மக்களையும் நானே தேடி வந்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு களத்தில் இறங்குவேன் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ் இங்குள்ள மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். கேமரன்மலையைக் காப்பாற்றுவது காலத்தின் கட்டாயம் என்று நானே சொல்லிவிட்டேன். குறிப்பிட்ட பகுதியில் குளுகுளு அறையில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு மக்களைச் சந்திப்பது எனது பாணியல்ல. எங்குத் தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு விவேகமாகச் செயல்படுபவன் நான். எனவேதான், காலையிலிருந்தே இங்குப் பணி செய்யத் தொடங்கி விட்டேன் என்றார் அவர். இலவச மோட்டர் சைக்கிள் சர்விஸ், சாலை பாதுகாப்பு முகாம், அங்லிக்கன் தேவாலய மக்களுடன் சந்திப்பு, மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான இலவச பெட்ரோல் திட்டம், தானா ராத்தா ஶ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளில் டான்ஶ்ரீ கேவியஸ் கலந்து கொண்டார். கேமரன்மலை வாழ் மக்களின் வாழ்வாதார நிலையும் நாட்டிலுள்ள இதர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வும் ஒன்றல்ல என்பதை நன்கு உணர்ந்தவன் நான். அதிகாலையிலே துயில் எழுந்து, அந்தி சாயும் நேரம் வரை உழைத்து, நிலவின் ஒளியில் இளைப்பாறும் இவர்கள் உழைப்பை மட்டுமே உன்னதமாகக் கொண்டவர்கள் ஆவர். எறும்புபோல் சுறுசுறுப்பாகச் செயல்படும் எமது மக்களுக்கு என்ன தேவை என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மட்டுமல்ல, எனது சிறுப்பிராயம் தொடங்கியே கண்ணுற்று வருகிறேன் என்பதையும் இவ்வேளையில் சொல்லிக் கொள்கிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர் என அனைவரையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில், அவர்களுக்கு முறையே நலன்சார்ந்த திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகிறேன். இத்திட்டங்கள் யாவும் கேமரன்மலை தொகுதியை உருமாற்றம் செய்யும் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என்றும் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். இதனிடையே, கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மலை பக்கம் வந்த டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களுக்கு கேமரன்மலையில் நுழையக்கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. மஇகாவின் இன்றைய துணைத் தலைவரும் கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் தோற்றுப்போனவருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணிதான் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்பது இந்த நாடே அறிந்த ஒன்றாகும். மலேசியத் தேசிய அரசியல் நீரோட்டத்தில், தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சித் தலைவர் ஒருவரை சேவை செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சென்றவர் தேவமணிதான் என்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகிறோம்.

   

  பின்செல்