வளங்கள் பல தரும் வரலட்சுமி விரதம்

வளங்கள் பல தரும் வரலட்சுமி விரதம்

24/08/2015

img img

விரதங்கள்

முற்பிறவியின் செயல்களால் இப்பிறவியில் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. ‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும், நலனும், ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சௌபாக்கிய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பலபூசை, சடங்குகள் இருக்கின்றன.  வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகை செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டிடும் இந்துக்களின் நோன்பாகும்.

ஆவணி வெள்ளி

பொதுவாக வரலட்சுமி விரத பூசையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்கிறோம். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலிபாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமி தேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.  

எளிய முறையிலான பூசை

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், தெரிந்த பாடல்களை ஈடுபாட்டோடுப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

தோரக்ரந்தி பூசை

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீர லட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டுவகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அஷ்ட லட்சுமிகள்தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர்.  இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாத்திரம் சொல்கிறது. எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை ``தோரக்ரந்தி பூசை’’ என்று அழைக்கப்படுகிறது.       

விரிவான வழிபாடு

சாத்திரப்படி முறையாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூசை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம் (108 மந்திரங்கள்), தோரக்ரந்தி பூசை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும். தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்டிக்கலாம்.

பூசைக்குத் தேவையானவை 

மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை தேவைப்படும்.  நிவேதனப் பொருள்களாக பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக் கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகியவையும், பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை... போன்றவையும் படைக்கலாம்.

பூசைக்கான முன் ஏற்பாடுகள்

இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூசைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும்.   நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.  அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கலசத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து,  தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) கலசத்தில் உள்ள  தேங்காயில்  வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். அல்லது பூஜை அறையை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலைக் கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.

பூசையை மேற்கொள்தல்

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.  நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். மாலையில் சந்திரன் உதயத்திற்குப் பின் சூரிய அஸ்தமன காலத்தில் தலைவாசலில் தீபம் ஏற்றுதல் நன்று. அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகேநின்று வெளியில் நோக்கி கற்பூரஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூசையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

லட்சுமி கடாட்சம்

பரிபூரண அருள்  இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம்குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து   பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி  சொல்லலாம். மஞ்சள்  சரட்டைக்  குங்குமத்தில் வைத்து கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்கி, தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும், எங்களுக்கு எல்லா  வளங்களையும்  தரவேண்டும் என்று   வேண்டிக் கொள்ளவேண்டும். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைக்க வேண்டும்.  பின்னர் பூசையை நிறைவு செய்யவேண்டும். குடும்பத்தில் மூத்த  சுமங்கலிப்பெண்களுக்கு  முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம்பெண்கள் அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமிவிரத பூசையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள்  நிச்சயம் கிடைக்கும்.

பூசைக்கு உதவும் எளிய மந்திரம்

1. சகலசித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!

2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!                          

3. ராஜமரியாதை தரும் கஜலட்சுமியே போற்றி!

4.செல்வச் செழிப்பைத் தரும் தனலட்சுமிய போற்றி!                                       

5. தான்ய விருத்தியளிக்கும் தான்யலட்சுமியே போற்றி!           

6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்- விஜயலட்சுமியே -போற்றி!

7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!           

8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி! 

9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!   

மாங்கல்ய பாக்கியமும் ஐஸ்வர்யங்களும்

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தை களுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். வரலட்சுமி நோன்பைக் கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

பொன்மழை

ஆதிசங்கரர் பிச்சை ஏற்கச் சென்ற வீட்டில் ஏழைத் தம்பதியர் உணவிற்கு வழியின்றி நெல்லிக்காயைப் பிச்சையிட, மனம் பொறுக்காமல் அன்னை மகா லட்சுமியை வேண்டி கனகதாரா  தோத்திரத்தைப் பாட, அன்னை மகாலட்சுமி அந்த ஏழைத் தம்பதியர் குடிலில் தங்க (நெல்லிக்காய்) மழையாகப் பெய்து அவர்களை வளமாக வாழச் செய்தாள்.  

லட்சுமி வந்தாள்: பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர நாட்டின் மன்னன்; அவனது மனைவி குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகளுடன் நல்ல அழகும் கொண்டவள்.  இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள்.  

கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதாரத் தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது முறையாகுமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினாள்.

நல்லதைக் கற்பியுங்கள்: கலங்கிய கண்களுடன்  வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள்.   ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்துத் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை அமர வைத்து, உபசரித்து,  “எனக்கு அந்த நல்லதைச் சொல்லிக் கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

தளர்ச்சியும் வளர்ச்சியும்

லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் வருந்திய மன்னன்,  இராச்சியம் தன் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்தான். புகுந்தவீடு சென்ற பின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்குச் செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடிஒளிந்தனர்; உணவுக்கு வழியற்று திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன்சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள்,  தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக்கொடுத்து, “இதை வைத்துக் கொண்டு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

மகளின் உதவி

சியாமா  அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொற் காசுகளுக்கு பதில் கரித்துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான்; மகளுக்கும் தெரியப்படுத்தினர். உடனே, தன்தாய் மகாலட்சுமி தேவியை அவமதித்தது சியாமாவின் நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவு படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக் காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தாள்.   

தைரிய லட்சுமி 

அதன்படியே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்குநாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரியலட்சுமி குடியேறியதால், தன் ஆதரவாளர் களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். வரலட்சுமி விரதத்தால் பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.

தேவர்குல பெண் நீதிபதி

சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அன்னை பார்வதிதேவி அவளைத்  தொழு நோயாளி யாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்து வணங்கினாள். வரலட்சுமி விரதத்தைக் கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள்செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒருகுளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூசை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். 

விரதத்திற்கு ஈடு

கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி புண்ணிய நதிகளில் தீர்த்த மாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும்  ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.   மாமனார் மற்றும் மாமியாருக்குப் பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வர லட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகதநாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களைக் கடவுளின் வடிவமாகக் கருதி அவர்களுக்குப் பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள். 

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்:

தேவஸ்தானம் சார்பாக ஆண்டு தோறும்  ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் பூசை சிறப்பாக நடை பெற்று வருகிறது. இவ்வாண்டு 28.08.2015 வெள்ளிக்கிழமை மாலை 4,30 மணிக்கு அபிசேகம்; 5.30 மணிக்கு பூசை; இரவு 7.00மணிக்கு திருவிளக்கு வழிபாடு ஆரம்பம், இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூசை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.

திருவிளக்கு வழிபாட்டில் கலந்துகொண்டு பூசை செய்பவர்களுக்குத் தேவையான பூசைப் பொருட்களான அகல்விளக்கு, அரிசி, மஞ்சள், எண்ணெய் திரிநூல் மற்றும் மங்கலப் பொருட்கள்  கோயிலில் வழங்கப்படும். குடும்பத்தில் அனைவர் நலம்கருதி மகளிர் அனைவரும் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்று அன்னை மகாலட்சுமியின் அருள் பெற்றிட வேண்டுமாய் அழைக்கின்றோம்

பின்செல்