ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அரசாங்க உயர்கல்விக் கூடங்களே எனது முதல் தேர்வு

  அரசாங்க உயர்கல்விக் கூடங்களே எனது முதல் தேர்வு

  13/02/2018

  img img

  அரசாங்க உயர்கல்விக் கூடங்களே எனது முதல் தேர்வு என்ற வழிகாட்டி கல்விக் கருத்தரங்கு, மலேசிய‌ இந்திய பட்டதாரிகள் நடவடிக்கைக் குழுவினரின் முயற்சியால் தொடங்கப்பட்டதாகும். இக்கருத்தரங்கு நாடு தழுவிய நிலையில் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இக்கருத்தரங்குகளில் அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள வாய்ப்புகள் பொது மக்களுக்கும் தேர்வு முடித்த மணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதே வேளையில் ஆசிரியர்களுக்கும், அரசாங்க சார்பற்ற இயக்கங்களுக்கும் இக்கருத்தரங்குகளின் வழி, மலேசியாவின் உயர்கல்விக்கூடங்களில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள வாய்ப்புகள் பற்றிய செய்தி மிகத் தெளிவாகவும் சரியாகவும் சென்றடைய இக்குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.

  இந்திய மாணவர்களை அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் மலிவான விலையில் தரமான கல்வியைப் பயிலச் செய்து அவர்கள் எதிர்நோக்கும் கல்விக் கடனுதவியைக் குறைப்பதே இக்கருத்தரங்கின் முதன்மை நோக்கமாகும். அதற்கேற்றபடி இவர்கள் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்கும் பொலிடெக்னிக், .எல்.பி, .கே.பி.என், எட்தெக், ஜெ.எம்.தி., எஸ்.டி.பி.எம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்ற பல கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் எடுத்துரைக்க முனைந்து அதை இன்றளவும் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

  அதுமட்டுமின்றி, இக்கல்விக்கூடங்களில் மாணவர்கள் பயில இணையத்தில் உள்ள பாரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யும் முறை, உபகாரச் சம்பள வாய்ப்புகள், மெரிட் புள்ளி கணக்கெடுப்பு, வளர்ந்து வரும் தொழில் துறை வாய்ப்புகள் போன்ற தகவல்களும் இக்கருத்தரங்குகளின் வழி ஆழமாக எடுத்துரைக்கப்படுகின்றன.

  மேலும், மலேசிய பொருளாதார உருமாற்றுத் திட்டத்தின் (Economic Transformation Programme) கீழ் இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளிப்பது, இம்மாணவர்கள் தாங்கள் பயில சரியான துறையைத் தேர்ந்தெடுக்க பெரிதும் கைகொடுக்கிறது என்பது திண்ணம். அதே வேளையில், ஆசிரியர்களும் இக்கருதரங்குகளில் கலந்து கொள்வதால் இத்தகவல்கள் இடைநிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு முன்பே பல முக்கிய தகவல்களை அறிந்து அதற்கேற்ற முறையில் செயல்பட பெரிதும் துணை புரிகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.

  சரியான தகவல்கள் மட்டுமே மக்களிடம் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுநர்கள் இக்கருத்தரங்குகளை வழிநடத்தவிருக்கின்றனர். இவர்கள் மாணவர்களது தேர்ச்சி முடிவுகளுக்கேற்ப அவர்கள் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளும் வழங்குவர். அதே நேரத்தில், சரியான கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்காக நாட்டில் வளர்ந்து வரும் தொழில் துறைகளும் பொருளாதார நிலவரங்களும் இக்கருத்தரங்கின் வழி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

  முக்கியமாக, சமுதாயத்தில் பொருள் ஈட்டும் சக்தியை அதிகரிப்பதே இக்குழுவினரின் நீண்ட தூர இலட்சியமாகும்.

  அதற்கு அடிப்படையாகச் சரியான கல்வித் துறையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி கல்விக் கடனுதவியைக் குறைக்க அவர்கள் அரசாங்க கல்விக் கூடங்களில் தங்களது மேற்கல்வியைத் தொடருவது மிக அவசியமான ஒன்றாகும். அதனைக் கருத்தில் கொண்டு இக்குழு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

  இப்பொழுது நான்காம் தொழில் புரட்சியை (Industrial Revolution 4.0) நோக்கி சென்று கொண்டிருக்கும் உலகமயத்தில் சரியான தொழிற்துறையைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையில் இன்றைய மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  அவ்வகையில் அரசாங்க தொழிற்கல்விக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வித் துறைகளையும் இக்கருத்தரங்கின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. ஆக‌, மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக வந்து இந்த அரிய வாய்ப்பினை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றனர். மேல் விவரங்களுக்கு பின்வரும் நபர்களை அழைக்கவும். சேசுகன் (0169552597), கலைவாணன் (0146047417), கணேஸ்வரன் (0146032018)

                                                               

  பின்செல்