ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  விபூதி புதன் காட்டும் பாதை

  விபூதி புதன் காட்டும் பாதை

  13/02/2018

  img img

  கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, ஈஸ்டர், குருத்தோலை ஞாயிறு போன்றவை மற்ற மதத்தினருக்கும் தெரிந்த புனிதநாட்கள். ஆனால் ’அஸ் வென்னஸ் டே’ என்று அழைக்கப்படும் விபூதி புதன் கத்தோலிக்க மக்கள் கடைப்பிடிக்கும் முக்கியமான நாள். ஒரு விதத்தில் இதை சகோதரத்துவத்தின் நாள் என்றும் சொல்லலாம். எல்லா மதங்களின் தத்துவத்திலும் இருக்கும் நிலையாமையை உணர்ந்து இறைவனில் இணைய அழைப்பதை விபூதி புதன் கிறிஸ்துவத்திலும் வலியுறுத்துகிறது.

  கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் என்பது இந்த விபூதி தினத்திலிருந்தே தொடங்குகிறது. இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களைத் தவக்காலமாகப் பின்பற்றுகிறார்கள்.

  தவக்காலம் என்பது கடந்தகாலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தவும், மீண்டும் தவறுகளைச் செய்யாமல் உறுதியெடுத்துக்கொள்ளவும், மனம் வருந்தி, ஒருத்தல் மூலமும், உண்ணா நோன்பு இருந்து நம்மை நாமே தூய மனிதர்களாகத் தயார் செய்துகொள்ளக் கடவுளால் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.

  விபூதி புதனன்று தேவாலயத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் நெற்றியிலும் 'மனம் திருந்தி நற்செய்தியை நம்புங்கள்' என்று கூறி குருவானர் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைவார். "நீங்கள் தூசு போன்றவர்கள், அதனை மனதில் இருத்தித் தீய செயல்களை விடுத்து மனம் திருந்துங்கள்" என்பதே இந்த சடங்கின் அர்த்தம்.

  விபூதித் திருநாளுக்கு முன்தினம் அனைவரும் வீட்டில் இருக்கும் கடந்த வருடம் ஆலயத்தில் குருத்து ஞாயிறு அன்று கொடுக்கப்பட்ட தென்னைக் குருத்துகளைச் சேகரித்து ஆலயத்தில் கொண்டு கொடுப்பார்கள். ஆலயத்தில் அவை அனைத்தையும் சேர்த்துப் பக்குவமாக எரித்துச் சாம்பல் ஆக்குவார்கள். இயேசுவின் காலத்தில் பனை ஒலைகளின் குருத்துகளே பயன்படுத்தினர், எல்லா நாடுகளிலும் பனை ஓலை கிடைப்பது கடினம் என்பதால் அதற்குப் பதிலாக தென்னை மரத்தின் குருத்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

  ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு சிலுவை சாவுக்கு ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுக்கும் முன்பு, அதை அறிந்து, ஒரு மனிதராக வேதனை கொள்ளும் இயேசு, நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்து, தமக்கு வரப்போகும் பாடுகளை எதிர்கொள்ள மனத் திடம் தரும்படி தமது தந்தையை நோக்கி ஜெபித்ததை விவிலியம் எடுத்துக் கூறுகிறது.

  கிறிஸ்துவின் இந்தத் துயர அனுபவத்தில் இணையும் நோக்கத்தோடும் தவக்காலத்தை கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

  தவக்காலம் என்பது தம் பிழைகளைக் கண்டறிந்து தமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளும் அரிய தருணம். அப்படிப்பட்ட தவக்காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், மாமிச உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து ஒதுக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை கிறிஸ்துவர்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

  இந்தத் தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் தங்களுடைய பாவ காரியங்களுக்காகவும்,  மற்றவர்களுக்கும் இறைவனுக்கும்  எதிராகச் செயல்பட்ட தீயகாரியங்களுக்காகவும் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதோடு, பாவ காரியங்களை விட்டொழிக்க உறுதி எடுப்பார்கள்.

  விபூதி புதன் தொடங்கி இயேசு உயிர்த்தெழும் நாள் வரையிலான 46 நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த 40 நாட்கள் கிறிஸ்துவர்கள் விரதம் இருப்பார்கள். இந்தத் தவக்காலத்தில் விரதத்தோடு சேர்த்து, ஒருத்தல் எனப்படும் தமக்கு பிடித்தமான உணவுகளையோ, செயல்களையோ தியாகம் செய்து, பிறருக்கு உதவி செய்யும் செயல் அனைத்துக் கிறிஸ்துவர்களாலும் மிகவும் விரும்பிச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுநாதர் கிறிஸ்துவ  பிறரன்பு மறைப் பணியைத் துவங்குவதற்கு முன் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 40 நாட்கள் பாலைவனத்தில் கடுமையான தவமிருந்து தம்மைத் தயார்படுத்தியதை நினைவு கூர்வதற்காகக் கிறிஸ்துவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

   

  பின்செல்