ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பியோங்சாங் ஒலிம்பிக்: ஸ்னோபோர்டில் அமெரிக்காவுக்கு தங்கம்

  பியோங்சாங் ஒலிம்பிக்: ஸ்னோபோர்டில் அமெரிக்காவுக்கு தங்கம்

  12/02/2018

  img img

  பியோங்சாங்,பிப்.13:

  பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஸ்னோபோர்டு பிரிவில் அமெரிக்காவின் ரெட்மான்ட் ஜெரார்டு தங்கப் பதக்கம் வென்றார். இது இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு முதல் பதக்கமாகும்.

  தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில், 2-ஆவது நாளில் 6 பதக்க போட்டிகள் நடைபெற்றன. பையத்லான், குரோஸ் கன்ட்ரி ஸ்கையிங், ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங், லூக், ஸ்னோபோர்டு, ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளின் பதக்கத்துக்கான சுற்றுகள் நடைபெற்றன.

  இவற்றில் ஆடவருக்கான ஸ்னோபோர்டு போட்டியில் ஸ்லோப் ஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் ரெட்மன்ட் ஜெரார்டு 87.16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கனடா அடுத்த இரு இடங்களை தக்கவைத்துக் கொண்டது. அந்நாட்டின் மேக்ஸ் பேரட் 86 புள்ளிகளுடன் வெள்ளியும், மார்க் மெக் மோரிஸ் 85.20 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

  2-ஆவது நாளில் நார்வே (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்) மற்றும் கனடா (2 வெள்ளி, 2 வெண்கலம்) அதிகபட்சமாக 4 பதக்கங்கள் வென்றன. ஞாயிற்றுக்கிழமை முடிவில் பதக்கப் பட்டியலில் ஜெர்மனி 4 பதக்கங்களுடனும் (3 தங்கம், 1 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 5 பதக்கங்களுடன் (2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், நார்வே 8 பதக்கங்களுடன் (1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

  குரோஸ் கன்ட்ரி ஸ்கையிங்: நார்வே அசத்தல்

  ஆடவருக்கான குரோஸ் கன்ட்ரி ஸ்கையிங் போட்டியில் ஸ்கையத்லான் பிரிவில் நார்வே வீரர்களே முதல் 3 இடங்களையும் பிடித்தனர். சைமன் ஹெக்ஸ்டாட் குருகர் 1 மணி 16 நிமிடம் 20 விநாடிகளில் வந்து முதலிடம் பிடித்தார்.

  மார்டின் ஜான்ஸ்ரட் சன்பை  1 மணி 16 நிமிடம் 28 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவதாக வந்தார்.  ஹன்ஸ் கிறிஸ்டர் ஹாலன்ட் 1 மணி 16 நிமிடம் 29 விநாடிகளில் வந்து வெண்கலம் வென்றார்.

  ஸ்பீடு ஸ்கேட்டிங்: நெதர்லாந்து முதலிடம்

  ஆடவருக்கான 5,000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்வென் கிராமெர் 6 நிமிடம் 9 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். கனடாவின் டெட் ஜேன் புளோமென் 6 நிமிடம் 11.616 விநாடிகளில் வந்து வெள்ளியை கைப்பற்ற, நார்வேயின் ஸ்வியர் லன்டே பெடர்சன் 6 நிமிடம் 11.618 விநாடிகளில் வந்து மூன்றாம் இடம் பிடித்தார்.

  ஜெர்மனிக்கு 3-ஆவது தங்கம்

  ஆடவருக்கான பையத்லான் போட்டியின் மூலம் ஜெர்மனி தனது 3-ஆவது தங்கத்தை தட்டிச் சென்றது. இதில் பந்தய இலக்கான 10 கி.மீட்டரை ஜெர்மனியின் அர்னெட் பைஃபர் 23 நிமிடம் 38 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். செக் குடியரசின் மைக்கெல் கிரெக்மர் 23 நிமிடம் 43 விநாடிகளில் வந்து வெள்ளியும், இத்தாலியின் டொமினிக் வின்டிஷ்க் 23 நிமிடம் 46 விநாடிகளில் வந்து வெண்கலமும்  வென்றார்.

  பிரான்சுக்கு முதல் பதக்கம்

   

  மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங்கில் பிரான்ஸின் பெரைன் லேஃபோன்ட் 78.65 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இது பிரான்ஸுக்கு முதல் பதக்கமாகும். கனடாவின் ஜஸ்டின் டுஃபோர் லாபாய்ன்டே 78.56 புள்ளிகளுடன் வெள்ளியும், கஜகஸ்தானின் யூலியா கலிசேவா 77.40 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

  பின்செல்