ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தைப்பூசம் என்றால் நம் நினைவுக்கு வரும் தருணங்கள்

  தைப்பூசம் என்றால்  நம் நினைவுக்கு வரும் தருணங்கள்

  31/01/2018

  img img

  தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. கடல் கடந்து சென்ற தமிழர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றது இரண்டே விஷயம்தான். ஒன்று எதிர்பார்ப்பு மற்றொன்று நம்பிக்கை. தங்களுடைய வாழ்வு செழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவர்கள், பல விஷயங்களில் தன்னுள் வேரூன்றியிருந்த நம்பிக்கையை வாழ்வின் பிடிமானமாகக் கொண்டிருந்தனர்.

  அவற்றில் இறைநம்பிக்கை முக்கியப் பங்கு வகிக்க, இந்த நம்பிக்கையைத் தம்முடைய அடுத்த சந்ததியினரின் மனதிலும் விதைத்தனர். பல தலைமுறையினரைக் கடந்து வந்துள்ள இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பல விழாக்களை விமரிசையாகக் கொண்டாடினாலும் தைப்பூசம் என்றுமே தனித்திருக்கும் ஒரு முக்கியத் திருவிழா.

  இந்தத் தைப்பூசத் திருவிழாவை எண்ணும் போது நம் எண்ணத்தில் உதிக்கும் சில முக்கிய தருணங்களை இவ்வேளையில் நினைவுகூருவோம். 

  இந்தியர்களின் ஒன்றுகூடல்

  இந்தியாவில் மட்டுமல்லாது, மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா இந்துக்களின் ஒன்றுகூடல் சமய நிகழ்வாகும். நாம் அனைவரும் ஒரு சேர ஓர் இடத்தில் கூடி, கருணை வடிவான கந்தனை நினைந்து வழிபடும் அதேவேளையில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முகம் மலர்வதும், நட்பு பாராட்டுவதும் இங்கேதான். மலேசியா முழுவதும் தைப்பூசத்தை விமரிசையாகக் கொண்டாடும் திருத்தலங்களில் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பினாங்கு பாலதண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ கல்லுமலை ஆலயம், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் முக்கிய தளங்களாக அமைகின்றன. இந்தத் தைப்பூசத் தினத்தன்றுதான் பக்தி மார்க்கத்தின் அடிப்படையில் ஒன்று கூடும் இந்தியர்கள், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்தியர் என்ற உணர்வையும், உறவுப் பாலத்தையும் பலப்படுத்துகின்றனர். இது நம் ஒற்றுமையின் பலத்தையும் நம் நம்பிக்கையின் தொன்மையையும் உறுதிப்படுத்துகின்றது; உலகிற்கு பறைசாற்றுகின்றது.

  விடுமுறை

  இந்தியர்களின் பெருநாட்களில் தீபாவளிக்கு அடுத்து சில மாநில விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள தினம் தைப்பூசமே. இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களில் தைப்பூச தினத்தை விடுமுறையாக அறிவித்தது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இந்தப் பொது விடுமுறை பிரகடனப்படுத்தப்படுகின்றது. இந்தப் பொன்னான விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு நம் இந்தியப் பெருமக்கள் மகிழ்ச்சியாக பக்திப் பரவசத்துடன் முருகனுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்த திரளாக இத்தைப்பூசத் திருநாளில் கலந்துகொள்கின்றனர். நம் இந்தியர்களின் முக்கிய சமய நிகழ்வான தைப்பூசத் திருநாளன்று விடுமுறை என்பதே அனைவரது மனதுக்கும் இதமான ஒரு விஷயமாகும். 

  மின்சார ரயில் சேவை (கேடிஎம்)

  தைப்பூசத்தை முன்னிட்டு கேடிஎம் தன்னுடைய சேவையைப் பிரத்தியேகமாக நீட்டித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி 30 தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் 24 மணிநேர சேவையை அறிவித்துள்ளதால் பலர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இது குறித்து கேடிஎம் பெர்ஹாட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்துமலையில் இருந்து சிரம்பான் வரையும், ரவாங்கில் இருந்து கிள்ளான் துறைமுகம் வரையிலும் கூடுதலாக 783 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

  கார் நிறுத்துமிடம்

  பொதுப் போக்குவரத்து வசதிகள் பல இடங்களில் செய்து தரப்பட்டிருந்தாலும் பலர் தைப்பூச தினத்தன்று தங்களின் வசதிக்காக சொந்த வாகனத்தில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறுகுழந்தைகள், வயது முதிர்ந்தோர் கொண்ட குடும்பங்கள், தூரப் பயணத்தை மேற்கொண்டு தைப்பூசத்தைக் கொண்டாடுபவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். சிலர் கோலாலம்பூரிலிருந்து பினாங்கு தைப்பூசத்தைக் காணவும் படையெடுப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால், சொந்த வாகனத்தை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத காரணமாக அமையும். பலர் ஓர் இடத்தில் கூடும்போது ஏற்படும் வாகன நெரிசல், கார் நிறுத்துமிடத்தில் சிரமத்தை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாத விளைவாக அமைகின்றது. இத்தகைய சிரமத்திலும் முருகனை துதிக்கும் எண்ணம் மட்டும் நம் இந்தியர்களின் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறிதும் இடையூறை பெரிதுபடுத்தாமல் பக்திப் பரவசத்திலும், நம் இந்திய சமூகத்தை சந்திக்கும் தருணத்தை எண்ணி முருகன் திருத்தலத்தை நோக்கிப் பயணிக்கும் பக்தர்களை இவ்வேளையில் பெரிதும் வரவேற்க வேண்டும்.

  காவடிகள்

  தைப்பூசம் என்றால் எதை மறந்தாலும், கண்களுக்கு விருந்தாக அமையும் காவடிகளை நம்மால் மறக்கவே முடியாது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை முடித்த பின்னர் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பது காவடிதான். கந்தனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்கள் சில சமயங்கள் ஒரு படி மேலாக தாங்கள் நேசிக்கும் தெய்வங்களை வைத்து காவடிகளை அலங்கரிக்கின்றனர். கால ஓட்டத்திற்கேற்ப காவடிகளின் உண்மையான நோக்கமும் உருமாறிவிட்டது என்பது மறுக்கமுடியாத ஒன்று. எனினும், பக்திப் பரவசத்துடன், விதிமுறைகளைப் பின்பற்றி காவடிகளை ஏந்தி வரும் பக்தர்களையும் நாம் பாராட்டுவோம்.

   

  இப்படியாக தைப்பூசம் என்பது மக்களுக்கு வெவ்வேறான அர்த்தங்களையும், அனுபவங்களையும், தந்தாலும் பக்தி என்ற வேரின் கீழ் அனைத்து இந்தியர்களையும் ஒன்றுபடுத்துகின்றது. எனவே, இன்றைய தைப்பூசத் திருவிழாவில் நம் இந்திய பெருமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து கந்தனை துதிப்போம்.

   

   

   

  பின்செல்