ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மீண்டும் அதிபராகிறார் பிரணாப்?

  மீண்டும் அதிபராகிறார் பிரணாப்?

  21/04/2017

  img img

  புதுடெல்லி, ஏப் 22: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 

  இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் அமைக்கவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இருப்பினும் அத்வானி முன்னிலை பெறுகிறார் எனவும் கூறப்பட்டது.

  இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

  இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது? என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

  இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தார்.

  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருமனதாக முடிவெடுத்து, ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக யெச்சூரியும் சோனியாவும் ஆலோசித்தனர். எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பொது வேட்பாளராக மீண்டும் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தால் இந்த முடிவுக்கு நாங்கள் தயார். எனினும், ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா? என்பது தொடர்பாக பிரணாப் முகர்ஜி தீர்மானிக்க வேண்டியுள்ளது" என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

  பின்செல்