மாணவர்களின் முன்னேற்றத்தில் ஓர் ஆசிரியரின் பங்கு

மாணவர்களின் முன்னேற்றத்தில்  ஓர் ஆசிரியரின் பங்கு

19/05/2016

img img

ஆசிரியர் தொழில் புனிதமானது. மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறப்பவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் முக்கிய தூண்டுகோலாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. 

"எழுத்தறிவித்தவன் இறைவனாகும்" என்பது அதிவீர இராம பாண்டியரின் வெற்றி வேற்கை ஆகும். அறிவே தெய்வம் என்பர் அறிஞர் பெருமக்கள். அறிவைப் போதிக்கும் ஆசானும் இங்கு தெய்வமாக கருதப்படுகிறான்.

மாணவர்கள் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டுமானால்ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். பள்ளியில் கல்வியைப் பாதியில் விடுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். இந்திய சமுதாயம் ஏழைச் சமுதாயம் என்பதை மனதில் நிறுத்தி, ஆசிரியர்கள் மொட்டாக இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நிறைவான கல்விச் செல்வத்தைக் கொடுத்து மணம் வீசும் மலராக திகழச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழாசிரியருக்கும் மொழிப்பற்று, இனப்பற்று, சமுதாயப் பற்று இருக்க வேண்டியது அவசியமாகும். 

 கண்ணுடையர் என்பவர் கற்றோர்,

முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்"

என்ற குறளுக்கு ஏற்ப பகுத்தறிவையும், அறிவு சிந்தனையையும் சமூகத்திற்கு உருவாக்கிட ஆசிரியர் பணி மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. அறிவுக் கண்களைத் திறந்து விடும் கல்விப் பணி மிக முக்கியமானதாகும். அந்த உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைச் சமூகம் பெருமளவில் நம்பியிருக்கிறது. 

எதிர்காலத்தில் பல சாதனைகளைப் படைக்கவிருக்கும் மாணவர்களின் கல்வி அறிவு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அன்பு கலந்த மனித நேயத்தோடு கல்வி கற்பிக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் வேலை செய்தோம் என்பது முக்கியமல்ல. மாறாக எத்தனை மாணவர்களை முன்னேற்றியுள்ளோம் என்பதே முக்கியம். தன்னிடம் கற்ற மாணவன் ஒருவன் உயர்ந்த நிலையில் வாழ்கிறான் என்று கேள்விப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அந்த நல்ல வார்த்தைகளை செவிமடுப்பது ஒன்றே ஒரு நல்ல ஆசிரியருக்கு கிடைக்கும் அரிய பரிசாகும்.  

மாதா, பிதா, குரு, தெய்வம்" என்பது அமுதவாக்காகும். தெய்வத்திற்குச் சமமாக கருதப்படும் ஆசிரியர்கள் பெருமைக்குரியவர்களே! எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிக்கள் ஆசிரியர்கள் என்றால் அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. 

இன்றைய கல்வி உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, அதற்கேற்ப அதிநவீன முறையில் கல்விக்கூடங்களும் உருவாகி வருகின்றன. கல்வித் துறையிலும் போதனா முறையிலும் பல்வேறு புதிய நவீன உத்திகள் முறைகள் கையாளப்படுகின்றன. இருந்தபோதும் ஆசிரியரின் பங்கும் இன்னும் குறிப்பிட்டு கூறுகிற அளவில் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. 

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மிகக்குறைந்த ‘கற்றல் கற்பித்தல் வசதிகளோடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கமும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக விளங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும். 

தேர்வில் வெற்றிபெறவும் தலைசிறந்த மாணவனை உருவாக்குவதற்கும் ஆசிரியர்களே தங்களது பொன்னான காலத்தை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். மாணவர்களின் பிரச்சினைகளைத் தெளிவுடன் சிந்தித்து, கவனத்தைப் படிப்பின் மீது செலுத்துவதற்கு உதவுகிறார்கள் ஆசிரியர்கள். கல்வி அறிவைத் தவிர்த்து மாணவர்களுக்கு பொது அறிவையும் சமுதாய சிந்தனையையும் உட்புகுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் உலக விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள். தம்மிடம் பயிலும் மாணவர்கள் நல்வாழ்வுக்குப் பாடாற்றக் கூடிய ஆசிரியர்கள் தம் மாணவர்கள் வாழ்வு நாசமாவதை விரும்ப மாட்டார்கள். 

ஆசிரியர் பணி போற்றுதலுக்குரியது. சில ஆசிரியர்கள் நோய் கண்ட காலங்களிலும் பரிவோடும், பள்ளி மாணவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி சிறப்பாகப் போதிக்கின்றனர். இதனை மனதார உணர்ந்து, மதித்துப் போற்றுவது முகாமை கடமையாகும். ஆசிரியர்களை மதித்துப் போற்றியவர் தாழ்ந்த தில்லை, மிதித்துத் தூற்றியவர் வாழ்ந்த தில்லை". உலக உண்மையை அறிந்து கொள்ள இயலாதவனாய் இருந்த மனிதனை உலக வளர்ச்சிக்கு ஏற்ப அவனது எண்ணத்தை தட்டியெழுப்பியவர் ஆசிரியரே! கற்றவனுக்குச் சிறப்பு சேர்க்கும் ஆசிரியர் துறை போற்றுதலுக்கு உரியது.

மன்னும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையோன்"

மன்னனுக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை

கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.     

 

பின்செல்