ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரமாண்டமாக கொண்டாட கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த திருமுகத்தைத் திறந்து வைப்பதுடன், உலகெங்கும் நடைபெற உள்ள மகா யோக வேள்வியை பிரதமர் புனித தீமூட்டி தொடங்கி வைக்கவுள்ளார். பிரமாண்டமாக நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் அம்சமாக ஆதியோகி திருவுருவமும் திறக்கப்படவுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின் முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட உலக அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.
இந்த சிலை இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24, மலேசிய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காணவிருக்கின்றது. இதன் நேரலையை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)இல் கண்டுக் களிக்கலாம்.