ஆகம முறைப்படி பால் குடம் எடுக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் கொண்டு வந்த திட்டம் இவ்வாண்டும் தொடர்கின்றது என்று மாமன்றத்தின் தேசியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பத்துமலை ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் பக்தர்களின் முழு ஆதரவைப் பெற்றது. பால் குடம் காவடிகளை ஏந்திய பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை சீரான முறையில் செலுத்த ஆகம முறை பெரிதும் உதவியாக இருந்தது.
எனவே, இம்முறையும் நாடுதழுவிய நிலையில் குறிப்பிட்ட நான்கு இடங்களில் இத்திட்டம் மேற்கொள்ள இந்து தர்ம மாமன்றம் இதர சமய இயக்கங்களுடன் கைகோர்த்து செயல்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் கூறினார். பத்துமலை ஆலயம், கோலசிலாங்கூர் சிவ சுப்பிரமணியர் ஆலயம், ஜோகூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பினாங்கு தண்ணீர் மலை ஆலயம் ஆகிய இடங்களில் ஆகம முறை மேற்கொள்ளப்படவுள்ளது.
தர்ம வேல் திட்டம் யாவருக்கும் பொதுவானது என்பதால் இந்து சமய இயக்கங்கள், ஆசிரமங்கள், தனிநபர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தைப்பூசத்தன்று, பத்துமலை ஆலயத்தின் ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை 4 மணி பூஜைக்கு பால்குடம் எடுப்பவர்கள் குடத்தையும் பாலையும் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. ஆகம முறை பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் தங்களின் காணிக்கையை சீரான வழியில் செலுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. எனவே, ஆகம முறை திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைய ஆர்வமுள்ளோர் இந்து தர்ம மாமன்றத்தை நாடலாம் என ரிஷிகுமார் வடிவேலு தெரிவித்தார்.
நேற்று, ஜாலான் ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாமன்றத்தின் உறுப்பினர்கள், இந்து சங்க பிரதிநிதி கணேசன், இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் அருண், செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் லெட்சுமணன், அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்க குருக்கள், கற்பக விநாயகர் ஆலய தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினர். மேல் விவரங்களைப் பெற 012-2311049 அல்லது www.maamandram.org எனும் அகப்பக்கத்தை நாடலாம்.