கேவியசின் பெருந்தன்மையைப் போற்றும் கேமரன்மலை மக்கள் -  ஓராங் அசால் சமூகத்திற்கும் சம உரிமை!

கேவியசின் பெருந்தன்மையைப் போற்றும் கேமரன்மலை மக்கள் - ஓராங் அசால் சமூகத்திற்கும் சம உரிமை!...

17/03/2018

ஆ.எம். சந்திரன் 

 

கோலாலம்பூர், மார்ச் 18: மக்கள் சேவை என்பது இன, மத, நிறம் இவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே அடையாளப்படுத்தும் விதமாக இவை அமைந்து விடக்கூடாது என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் டான்ஸ்ரீ கேவியஸ்.

அடிதட்டு மக்களாக இருக்கும் ஓராங் அசால் மக்களை அரவணைத்து அவர்களுக்கும் சமூகத்தின் சம உரிமை கொடுத்த அவரின் பெருந்தன்மையை அம்மக்கள் உளமார போற்றி மகிழ்கிறார்கள். இந்தளவுக்கு அவர்கள் மீது அன்பு செலுத்தும் மக்கள் தலைவரை அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை; கேள்வி பட்டதும் இல்லை என்றும் புகழாரம் சூட்டுகின்றனர்.

இந்த நான்காண்டு காலத்தில் அவர் கால் தடம் பதியாத ஓராங் அசால் கிராமங்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு டான்ஸ்ரீ கேவியஸ் களப்பணியாற்றி உள்ளார்.

பாரம்பரியத் தொகுதி என பரிவட்டம் கட்டி பண்ணையார் பாவனையில் பஞ்சாயத்து பேசுவோரின் கவனத்திற்கும் இதனைத் தாராளமாக முன் வைக்கலாம். மூன்று தவணைகள் (15 ஆண்டுகள்) செய்யாத சேவைகளை எல்லாம் இந்த நான்கு ஆண்டுகளில் டான்ஸ்ரீ கேவியஸ் செய்துள்ளார் என்பதற்குப் பலவற்றை அடையாளப்படுத்தலாம். அவற்றில் ஒன்றுதான் ஓராங் அசால் மக்களின் கம்போங் லெமோய்.

 

பிரதான சாலையிலிருந்து 18 கிலோ மீட்டர் உள்ளே போக வேண்டும். சாலையும் குண்டும் குழியுமாக இருக்கும். இதற்கு இரண்டரை மணிநேரம் செலவாகும். அந்தச் சாலையில் பலமுறை பயணித்து அங்குள்ள மக்கள் படும் துயரங்களையும் போக்குவரத்து சிரமங்களையும் கேட்டறிந்து இன்னல்களைக் களைந்ததோடு அவர்களின் முகங்களில் சிரிப்பையும் மலரச் செய்தவர் டான்ஶ்ரீ கேவியஸ் ஆவார். 

இதேபோன்று பல கிராமங்களுக்கும் சென்று சாலைகளையும் அந்த மக்கள் பயன்படுத்தும் அளவில் செப்பனிட உதவி வருகிறார் என்பதை அம்மக்களே கூறி வியந்து போகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்துவதுபோல் மக்களை நெருக்கமாக அணுகி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து மக்கள் பணியாற்றும் சேவையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்றவாறு டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களும் இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைவரையும் ஒரே நிலுவையில் வைத்து சேவையாற்றி வருவதால் கேமரன்மலை மக்களின் மனங்களில் நிறைந்து மணம் கமழ்ந்து வருகிறார்.

கேமரன்மலையில் வசிக்கும் ஓராங் அசால் மக்களுக்கும் இதர இனங்களைப் போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தினால்தான், டான்ஶ்ரீ கேவியஸ் அங்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருகிறார். அவரின் பெருந்தன்மையை ஓராங் அசால் மக்களின்மீது காட்டும் அக்கறையும் அன்பும் வெளிப்படுத்துகின்றன. 

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி வேட்பாளராக டான்ஶ்ரீ எம்.கேவியஸ் போட்டியிட்டு, அதிகப் பெரும்பான்மையில் வெற்றிபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஓராங் அசால் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. மக்களின் பிரார்த்தனைகளும் டான்ஶ்ரீ கேவியசின் உண்மையான உழைப்பும் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றியை நிச்சயம் உறுதி  செய்யும்.

 

மியாமியில் பாலம் இடிந்து சாலையின் மீது விழுந்தது!

மியாமியில் பாலம் இடிந்து சாலையின் மீது விழுந்தது!...

16/03/2018

மியாமி, மார்ச் 17: அமெரிக்காவின்  புளோரிடா மாநிலத்திலுள்ள  மியாமி அனைத்துலகப்  பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டப்பட்ட நடைபாதை பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர் மேலும் 10பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்குள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கும் அருகிலுள்ள விமான நிலையத்திற்குச் செல்வதற்கு வசதியாகவும் இந்த சிமெண்ட் பாலம் கட்டப்பட்டது.   

பாலம் இடிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். எட்டு வழி சாலையின் மீது பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு வாகனங்கள் நொறுங்கின என போலீசார் தெரிவித்துள்ளனர். 

பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக மியாமியின் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளுக்கு அதிக நேரம் பிடிக்கிறது மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று  அவர் தெரிவித்தார். குறைந்தது 10 பேர் உள்ளூர் மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்களில் இருவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

சுமார் 950 டன் எடை, 53 மீட்டர் நீளமான அந்த கான்கிரீட் பாலம் சனிக்கிழமை வெறும் ஆறு மணி நேரத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தின் மீட்புப் பணிகளைத் தாம் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...

16/03/2018

 

கொழும்பு, மார்ச் 16: முத்தரப்பு ‘டுவென்டி 20’ தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. புலி போல ஆக்ரோஷமாக ஆடிய கேப்டன் ரோகித் 89 ரன்கள் விளாசினார்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி 20’ தொடர், கொழும்புவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகள் முடிவில், இந்தியா 2, இலங்கை, வங்கதேச அணிகள் தலா 1 வெற்றி பெற்றன. இதன் இரண்டாவது சுற்று லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா, பீல்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, இம்முறை நல்ல துவக்கம் கொடுத்தது. நஜ்முல், ரூபெல் பந்துகளை பவுண்டரிக்கு அடித்த தவான், முஸ்தபிஜூர் பந்தில் சிக்சர் விளாசினார். 22 ரன்னில் தப்பிப்பிழைத்த தவான், 35 ரன்னுக்கு போல்டாகி திரும்பினார்.

மறுபுறம், மெல்ல சுதாரித்துக் கொண்ட ரோகித், மெஹிதி பந்தை சிக்சருக்கு அடித்து, ரன்வேகத்தை அதிகரித்தார். தொடர்ந்து நஜ்முல் பந்தையும் சிக்சருக்கு 

 

அனுப்பிய இவர், சர்வதேச ‘டுவென்டி 20’ அரங்கில் 13ஆவது அரைசதம் எட்டினார். 

கடைசி நேரத்தில் ரெய்னா, ரோகித் இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். ரெய்னா ஒரு பவுண்டரி, ரோகித் ஒரு சிக்சர் உட்பட, 17ஆவது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. 18 ஆவது ஓவரில் ரோகித் 2, ரெய்னா 1 என, சிக்சர் மழை பொழிய, 21 ரன்கள் எடுத்தது இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த நிலையில், சிக்சருக்கு ஆசைப்பட்ட ரெய்னா (47), அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து, ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி பந்தில் ரோகித் (89 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டானார். இந்திய அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. 

சற்று கடின இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் விக்கெட்கள் சரிந்தன.

ஆனால் தனிநபராக போராடிய முஷ்பிகுர், அரைசதம் அடித்த போதும், வெற்றிக்கு போதவில்லை. வங்கதேச அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்தது.   இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்திய அணி, 6 புள்ளியுடன் பைனலுக்கு முன்னேறியது.